Published : 05 Apr 2015 02:24 PM
Last Updated : 05 Apr 2015 02:24 PM
மணிமொழி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காகக் கனவுகளுடன் காத்திருந்தார். ஆனால் அந்த மே மாதக் கோடை விடுமுறை அவருக்கு அதிர்ச்சியைப் பரிசாக வைத்திருந்ததை அவர் அறியவில்லை. திடீரென ஒருநாள் அவருடைய வீட்டில், ‘உனக்கும் உறவுக்கார பையனுக்கும் நிச்சயம் செய்திருக்கிறோம், ஜூன் 3-ம் தேதி கல்யாணம்’ என்றனர். அதிர்ந்து நிற்பதைத் தவிர 15 வயது பெண்ணால் அப்போது என்ன செய்திருக்க முடியும்? ஆனால் தன் அறிவின் துணையோடு அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்தார் மணிமொழி.
திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் மணிமொழி. சிறுவயதிலேயே மணிமொழியின் தாய் இறந்துவிட, கூலி வேலைக்குச் செல்லும் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்தவருக்குத்தான் இந்தத் திடீர் திருமண ஏற்பாடு. அறிவிப்பைக் கேட்டு அந்த நிமிடம் அதிர்ந்தாலும் அதில் இருந்து தப்பிப்பதுதான் மணிமொழியின் நோக்கமாக இருந்தது. பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தபோது நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மணிமொழியின் நினைவுக்கு வந்துள்ளது.
வழிகாட்டிய விழிப்புணர்வு
குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து 1098 என்ற எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தால், சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பின் உதவி கிடைக்கும் என்று அந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்டது. அந்த நிகழ்ச்சி நடந்தபோதே மணிமொழியும் அவரது தோழிகள் சிலரும் 1098 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு, அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததுமே 1098-க்கு அழைப்பு விடுத்து, தனக்கு நடக்கும் திருமண ஏற்பாடு குறித்து மணிமொழி தெரிவித்தார். சைல்டு ஹெல்ப்லைன், குழந்தைகள் உரிமை ஆணையத்தினர் மற்றும் மாவட்ட சமூக நலத் துறையினர் மணிமொழியின் வீட்டுக்கு வந்து விசாரித்தனர்.
“அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம் என்பதைப் புரியவைத்தனர். திருமணம் நிறுத்தப்பட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் வைத்து எழுதி வாங்கினர்” என்று உற்சாகமாகச் சொல்லும் மணிமொழிக்கு, பிரச்சினை அதோடு முடிந்துவிடவில்லை.
“என் நடவடிக்கையால் வீட்டில் என்னைத் திட்டித் தீர்த்தனர். நான் பத்தாம் வகுப்பில் 417 மார்க் எடுத்து பள்ளியில் மூன்றாம் இடம் பிடித்திருந்தேன். ஆனால், வீட்டில் இருந்தால் சில மாதம் கழித்து திருமணம் செய்து வைத்துவிடுவார்கள், படிப்பும் நின்றுவிடும் என்று புரிந்தது. அதனால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, சைல்டுலைன் அமைப்பினர் சேவா சங்கம் பள்ளி விடுதியில் என்னைச் சேர்த்துவிட்டனர்” என்று சொல்லும் மணிமொழி, அங்கேயே தங்கிப் படித்தார். தற்போது திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பி.எஸ்சி. மறுவாழ்வியல் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறார்.
கல்லூரிப் படிப்புச் செலவுக்கு உதவி வரும் சைல்டுலைன் அமைப்பினர் பகுதிநேர வேலையும் வழங்கி இவரை ஊக்குவித்துள்ளனர். இது தவிர குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவ்வப்போது சைல்டுலைன், சமூக நலத் துறையினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
“சேவா சங்கம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டே பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ந்த சில நாட்களில் என்னைப் பார்க்க அப்பா வந்தார். சில மாதங்கள் கழித்து சித்தியும் வந்தார். அவர்களின் கோபம் எல்லாம் அதன்பின்னர் மாறிவிட்டது” என்று கூறும் மணிமொழிக்கு, குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக வேண்டும் என்று ஆசையாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT