Published : 05 Apr 2015 02:31 PM
Last Updated : 05 Apr 2015 02:31 PM
உலகின் சக்திவாய்ந்தவர்கள், பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆசியாவின் 50 சக்தி வாய்ந்த பெண் நிர்வாகிகள் பட்டியலில் இந்தியர்கள் ஆறு பேர் இடம்பிடித்துள்ளனர். பொதுவாக ஆண்களின் ஆதிக்கம் காணப்படும் தொழில் துறைகளில் செயல்பட்டு சாதிக்கும் பெண்களையே இந்தப் பட்டியலில் தொகுத்திருப்பதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அகிலா ஸ்ரீநிவாசன் இடம்பெற்றிருக்கிறார்.
திருச்சியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஊழியராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர் இவர். தற்போது ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநராகவும், ஸ்ரீராம் குழும நிறுவன தலைமைக் குழுவின் பெண் உறுப்பினராகவும் செயல்பட்டுவருகிறார்.
போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் தன் பெயர் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், பொறுப்பும் கடமையும் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்.
“நான் இந்த இடத்தை அடையக் காரணமாக இருந்த ‘ஸ்ரீராம்’ குழுமத்தின் தலைவர் தியாகராஜனுக்குக் கடமைப்பட்டுள்ளேன். பெண்களால் எதையும் சாதிக்க முடியும், உழைத்தால் உயர முடியும் என்று நிரூபித்திருப்பதாகத் தோன்றுகிறது. அதே சமயம் என் அலுவலகத்தில் பாலின பாகுபாடு அற்ற, சம வாய்ப்பு வழங்கும் சூழலை ஏற்படுத்தும் கடமையும் இருக்கிறது.
எனக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தன. குடும்பமும் சூழலும் சாதகமாக அமைந்தன. ஆனால், கிராமங்களில் படிக்க வாய்ப்பின்றி வறுமையில் வாடும் பல பெண்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லை. அப்படிப்பட்ட பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவியாக தனிப்பட்ட முறையிலும் எங்கள் நிறுவனத்தின் மூலமும் கல்வி, தொழில் பயிற்சிகள் வழங்கி வருகிறோம்” என்கிறார் அகிலா.
சாதாரண ஊழியராக இருந்து நிர்வாக இயக்குநராக உயர்ந்தது எப்படி?
காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள அழகிய நகரமான திருச்சியில் பிறந்தேன். இரட்டைப் பின்னல் போட்டு பேருந்தில் ஏறிச் செல்லும் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். சீதாலஷ்மி ராமசாமி கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை முடித்தேன்.
1986-ம் ஆண்டு செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தை எதேச்சையாகப் பார்த்து, வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்காணல் மற்றும் குழு விவாதத்தில் என்னுடன் சேர்த்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்ரீராம் நிறுவனத்தில் செயல் பயிற்சியாளராகச் சேர்ந்தேன். அப்போது மக்களிடம் காப்பீட்டு விழிப்புணர்வு குறைவாக இருந்தது. எங்களோடு களத்தில் 24 காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டின் அவசியத்தைப் புரிய வைப்பதுடன், எங்கள் நிறுவனத்தின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும் என்ற இரண்டு கடமைகள் எங்கள் முன் இருந்தன. இதற்காக, இந்தியா முழுவதும் பல ஊர்களுக்குச் சென்று, மக்களைச் சந்தித்து உரையாடுவது என கடின உழைப்பை மேற்கொண்டேன். 1992-ம் ஆண்டு எனக்கு பொது மேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. பிறகு தலைவராகப் பணியாற்றினேன். அதன் பின், 2006-ம் ஆண்டு ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பித்தபோது அதற்கு நிர்வாக இயக்குநராக எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. காப்பீட்டு நிறுவனத்திலும் ஒட்டுமொத்த குழுமத்தின் எதிர்காலக் கடமைகளைத் தீர்மானிப்பதிலும் பங்களிக்கிறேன்.
இந்த வளர்ச்சியில் குடும்பத்தின் பங்கு என்ன?
எந்தவொரு பெண்ணும் குடும்பத்தில் அமைதி நிலவினால்தான் வெளியே ஈடுபாட்டுடன் பணியாற்ற முடியும். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் திருமணத்துக்குப் பிறகுதான் பொருளாதாரத்தில் முதுகலை, எம்.பில் முடித்தேன். சமீபத்தில் எனது பி.எச்டி பட்டத்தையும் பெற்றேன். குடும்பத்தின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் எதையும் சாதித்திருக்க முடியாது.
குடும்பப் பணிகள், நிர்வாகப் பணிகள் என இரண்டையும் திறம்படச் செய்வது எப்படிச் சாத்தியமானது?
எல்லோரிடமும் எப்போதும் 100 மதிப்பெண் வாங்க இயலாது. நமது முன்னுரிமைகளை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். குடும்பக் கடமைகளும் தாய்மையும் முக்கியப் பொறுப்பு. ஆனால் வாய்ப்புகள் வரும்போது அதைத் தட்டிவிட முடியாது. எனக்குக் குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை அலுவலகம் சென்றேன். 60 நாட்கள் மட்டுமே பிரசவ விடுப்பு எடுத்தேன். என் அலுவலகத்தில் இருந்த உதவிகரமான சூழல் இதனை சாத்தியமாக்கியது.
விரும்பி சமைப்பேன். நான் செய்யும் வெஜிடபிள் புலாவ் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டு வேலையை நானும் எனது கணவரும் பகிர்ந்து கொள்வோம்.
வேலை தவிர பிற துறைகளில் ஈடுபாடு உண்டா?
எனது வாழ்க்கை வாழையிலையில் உள்ள பல உணவு வகைகளைப் போன்றது. எனக்குக் கர்நாடக சங்கீதம் பாடுவதிலும் இசைக் கச்சேரிகளை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வதிலும் மிகவும் ஆர்வம். ‘வாழும் கலை’ அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக ஏழு வருடங்கள் பணியாற்றியது நல்ல அனுபவம். அது தவிர நெதர்லாந்து நாட்டின் கவுரவ கவுன்சிலாகப் பணியாற்றிய காலத்தில் அந்த நாட்டுக்குச் செல்பவர்களுக்கு வேண்டிய விசா உதவிகளைச் செய்து வந்தேன்.
எப்படி எல்லாவற்றுக்கும் உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
எந்த விஷயத்தின் மீதும் நாம் தீவிர ஆர்வம் கொண்டிருந்தால் நம்மால் அதைச் செய்து முடிக்க நேரம் கண்டுபிடிக்க முடியும். நேர மேலாண்மை என்பது மிக முக்கியம். எந்தச் செயலுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதைக் கவனமாகத் தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் வெற்றியின் ரகசியம் எது?
எதைச் செய்தாலும் அதில் எனது நூறு சதவீத உழைப்பைச் செலுத்துவேன். அது வெற்றியடைகிறதா, தோல்வியடைகிறதா என்பது இரண்டாம்பட்சம். என் மனதுக்குத் திருப்தியளிக்கும் வரை முயற்சிப்பேன். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என யோசிக்காமல் நமது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
படம்: க.ஸ்ரீபரத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT