Published : 12 Apr 2015 12:27 PM
Last Updated : 12 Apr 2015 12:27 PM
சமீபத்தில் வியாபார நிமித்தமாக நானும் எனது நண்பரும் காஷ்மீர் சென்று வந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பச்சைக் கம்பளம் மூடிய மலைகள், பூக்களில் இத்தனை விதங்களா என ஆச்சரியம் அடைய வைக்கும் பூங்காக்கள், ஐஸ் கட்டிகள் உடைந்து உருகிவரும் வற்றாத ஜீவ நதிகள், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேல் என விவசாய நிலங்கள் எனப் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதவில்லை. உறைபனிக் காலத்தில் மட்டுமே குங்குமப் பூ பயிரிடப்படுகிறது. மிகப் பெரிய சமவெளியில் குங்குமப் பூ விளையும் நிலங்களில் அதிகாலை கடும்குளிரிலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் வேலை பார்த்த பெண்களில் இஸ்லாமிய பெண்களே அதிகம்.
காஷ்மீரில் உள்ள பெண்கள் எவ்வளவுதான் அச்சுறுத்தல் இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக கோதுமை விளையும் வயல்வெளியில் மண்வெட்டி சகிதமாக மாலைவரை வேலை செய்கிறார்கள். இங்குள்ள மக்கள் விவசாயத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார்கள். தலை மீது முட்டும் ஆப்பிள் தோட்டங்களில் களையெடுப்பு, பதியமிடுதல், போன்ற வேலைகளைப் பெண்கள் செய்வதைக் காணமுடிந்தது. 25 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட தால் ஏரியின் மறுபக்கம் காய்கறிகளை விளைவித்து, அவற்றைப் பெண்கள் சிறிய படகுகளில் மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்து அதிகாலையில் விற்பனை செய்கிறார்கள். ஒரு பக்கம் இந்திய ராணுவத்தின் தீவிர கண்காணிப்பு, மறுபக்கம் தீவிரவாதிகளின் தாக்குதல் இதைப் பற்றி இவர்களுக்குக் கவலையே இல்லை.
- அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.
நீங்களும் சொல்லுங்களேன்....
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT