Published : 05 Apr 2015 02:16 PM
Last Updated : 05 Apr 2015 02:16 PM
இந்தித் திரைப்பட நடிகை தீபிகா படுகோன் நடித்து சமீபத்தில் வெளியான இரண்டரை நிமிட வீடியோ, பெண்ணுக்குத் தன் உடல் மீது முழு உரிமை இருக்கிறதா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் தான் என்ன ஆடை அணிய வேண்டும், தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும், எத்தனை மணிக்கு வீடு திரும்புவது, தாலி அணிவது, பொட்டு வைத்துக் கொள்வது, ஆணைக் காதலிப்பதா, பெண்ணைக் காதலிப்பதா அல்லது இருவரையுமா, பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா, உடலுறவு திருமணத்துக்கு முன்பா, பிறகா... இவைபோன்ற முடிவுகளை நான் மட்டுமே எடுப்பேன் என்று சொல்வதாக அமைந்திருக்கும். ஒவ்வொரு விருப்பமும் அவரவர் கைரேகை போல வித்தியாசமானது என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளை எதிர்ப்பவர்கள் திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்வதா, பெண்ணும் பெண்ணும் காதலிப்பதா? இவை இயற்கைக்கு எதிரானவை. இவை முற்போக்கான கருத்துகளே அல்ல என்று கூறுகிறார்கள்.
உண்மையில் உடல் மீதான உரிமை என்பது என்ன? என் உடலை என் அனுமதியில்லாமல் யாரும் நெருங்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறிச் செய்தால் அது என் உடல் மீதான உரிமையின் மீறல். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். ஆனால், இந்த உரிமை பெண்ணுக்குப் பல சமூகக் கட்டுப்பாடுகள் மூலமாக மறுக்கப்படுகிறது. தினம் தினம் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளே இதற்கு சாட்சி. பொது இடங்களில் நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கவே வழியில்லாதபோது, திருமணத்துக்குப் பிறகு கணவரால் ஏற்படும் பாலியல் பலாத்காரத்தைப் பற்றி பேசக்கூட நம் சமூகத்தில் அனுமதியில்லை.
“என் வீட்டில் என் மனைவிக்கு எல்லா சுதந்திரத்தையும் 'கொடுத்திருக்கிறேன்' “ என்று பெருந்தன்மையாக சுதந்திரத்தைக் கத்தரிக்காய் வாங்கித் தருவதுபோல், 'கொடுத்து'பழகியவர்களுக்கு, ‘இது என் உடல், என் உரிமை’ என்று பெண்கள் தங்கள் உரிமைகளை தாங்களாகவே ‘எடுத்துக்’கொள்ளத் துணியும்போது ஏற்படும் பாதுகாப்பின்மையின் வெளிப்பாடே இந்த எதிர்ப்பு.
ஒருபுறம் பெண்கள் பிறப்பதே கேள்விக்குறியாக இருக்கும் நம் சமூகத்தில் இந்த வீடியோவில் பெண்ணின் பாலியல் உரிமைகள் பற்றிப் பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். நமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் சமமற்ற வளர்ச்சியே இதற்கு காரணம். பெண்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைக் குரல்களும், பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள பெண்களின் உரிமைக் குரல்களும் இணைந்து ஒலிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கான முழுச் சுதந்திரம் என்னும் இலக்கை எட்டிப் பிடிக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT