Published : 26 Apr 2015 02:21 PM
Last Updated : 26 Apr 2015 02:21 PM

வினிகர் செய்யும் பளிச் மேஜிக்!

# வீட்டினுள் வைத்துள்ள அலங்கார பிளாஸ்டிக் அல்லது துணியால் செய்யப்பட்ட பூச்செண்டு களை எவ்வளவு துடைத்தாலும் பளிச்சென ஆகவில்லையா? ஹேர் டிரையரால் சுத்தம் செய்தால் நொடியில் பளிச்சென்று மாறிவிடும்.

# வொயிட் வினிகரைச் சிறிதளவு நீரில் கலந்து, பாத்ரூம் டைல்ஸில் தெளித்துக் கழுவினால் டைல்ஸில் படிந்துள்ள கறை காணாமல் போய்விடும்.

# சமையலறை மேடையைத் துடைக்கப் பயன் படுத்தும் துணிகளை எப்படித் துவைத்தாலும் எண்ணெய்ப் பிசுக்கு ஒட்டியிருக்கும். சோப்புக் கரைசலில் சிறிது சோடா மாவைக் கலந்து, அதில் சமையலறைத் துணிகளை ஒரு மணி நேரம் ஊறவைத்துத் துவைத்தால் எண்ணெய்ப் பிசுக்கும் போகும். துணிகளும் பளிச்சிடும்.

# பாத்திரம் கழுவும் சிங்க் அடைத்துக்கொண்டால், சோடா மாவு மற்றும் வினிகர் கலந்து ஊற்றி ஒரு மணி நேரம் கழித்து வெந்நீர் ஊற்றிவிடுங்கள். அடைப்பு நீங்கிவிடும்.

# வாஷ் பேஸினைக் கழுவும் முன்னர், தண்ணீர் வெளியேறும் ஓட்டையை அடைத்துவிட்டுப் பேஸின் முழுக்க வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் தேங்கவிடுங்கள். பிறகு அடைப்பை நீக்கித் தண்ணீர் வெளியேறியதும் பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவினால் நாள்பட்ட அழுக்கும் நீங்கிவிடும்.

# வொயிட் வினிகரை வெந்நீரில் கலந்து வீட்டைத் துடைத்தால், தரையில் உள்ள கிருமிகள் அழிவதுடன் தரையும் பொலிவுடன் காட்சிதரும்.

- கே. சுபாஷினி சர்மா, தர்மபுரி.

# சிறிதளவு ஓட்ஸை வறுத்துப் பொடிசெய்து வைத்துக் கொள்வது நல்லது. கிரேவி, பொரியல் வகைகளில் தண்ணீர் கூடிவிட்டால் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பொடியைச் சேர்த்து விட்டால், அது அதிகப்படியான நீரை இழுத்துக் கொள்ளும். அதேபோல் சூப் வகைகளைக் கெட்டியாக்கச் சமயச் சஞ்சீவியாக ஓட்ஸ் பொடியைப் பயன்படுத்தலாம்.

# சிலருக்குத் தயிர் புளித்தால் பிடிக்காது. சிறிய மண் சட்டியில் உறை ஊற்றி வைத்தால், தயிர் கெட்டியாகவும், புளிக்காமலும் இருக்கும். சுவையும் மணமும் கூடுதலாகத் தெரியும்.

# சோயாவை வாரம் ஒரு முறையாவது குருமா, உப்புமா, பொரியல் வகைகளில் சேர்த்துச் சமைக்கப் பழகிக்கொள்ளுங்கள். புரதம் நிறைந்த சோயா, உணவுப் பொருளின் சுவையையும் கூட்டும்.

- சுமதி ரகுநாதன், கோவை-36.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x