Published : 19 Apr 2015 01:58 PM
Last Updated : 19 Apr 2015 01:58 PM
ஏப்ரல் 5-ம் தேதியிட்ட ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ‘காதலும் திருமணமும் கட்டாயமா?’ என்ற கட்டுரையைப் படித்தேன்.
இருபத்தைந்து வயதில் காதலிக்காமல், திருமணத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் ஒரு பெண் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவளா எனத் தோழி ஹம்ஸா கேட்டுள்ளார். நிச்சயமாக நீங்கள் வாழத் தகுதியானவர்தான் தோழி. நானும் உங்கள் வயது கொண்ட பெண் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்.
பணிச் சூழலுக்காகச் சொந்த ஊரை விட்டு வெளியேறி நகர்ப் பகுதியில் வசிக்கும் பெண் நான். இந்த இடமாற்றத்தால் பல வழிகளிலும் நான் பக்குவம் அடைந்துள்ளேன். சமூகம், வேலை, திருமணம் என வாழ்க்கை மீதான எனது பார்வை முற்றிலும் மாறியிருக்கிறது. இந்த வயதில் என் பணியில் உயர்ந்த ஒரு நிலையை அடையவே நான் விரும்புகிறேன். ஆனால் என் கருத்தை இந்தச் சமூகமும், ஏன் எனது பெற்றோருமேகூட ஏற்க மறுக்கிறார்கள்.
காரணம் அதிக ஊதியத்துக்கு, உயர்நிலைப் பணிக்கு நான் சென்றால் அதற்கு ஏற்ப மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களைச் சூழ்ந்துள்ளது. கல்வி, பணி என அனைத்து இடங்களிலும் பாலினப் பாகுபாடுகளைக் கடந்து வெற்றிபெற வேண்டும் என்ற வேகத்தோடு பயணிக்கும் பெண்ணின் வாழ்வில் திருமணம் எப்போது என்ற கேள்வி பெரிய தடையை ஏற்படுத்துகிறது. பெண் குழந்தை பிறந்ததுமே அவளின் திருமணத்துக்கு நகை சேர்க்கத் தொடங்குவதைப் பல பெற்றோர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எனக்கும் என் அம்மாவுக்கும் சண்டை ஏற்படும்போது அவர் அடிக்கடி கூறும் ஒரு வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்தும். ‘என்ன இருந்தாலும் நீ அடுத்தவங்க வீட்டுக்குப் போறவதானே’ என்று அவர் சொல்லும் வார்த்தைகள் என்னை வதைக்கத் தவறுவதில்லை.
பெற்றோரே இப்படி என்றால் உறவினர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? நமது மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் திருமணம் எப்போது என்ற கேள்வியோடு அறிவுரைகளையும் வழங்கத் தொடங்கிவிடுகிறார்கள். அலுவலகத்தில் என் வயதுடைய பெண்ணுக்குத் திருமணம் என்ற செய்தி கிடைத்தாலே போதும், சக பணியாளர்களின் பார்வை என் மீது திரும்பும்.
ஆனால், என் வாழ்க்கையைத் தேர்வு செய்யும் உரிமை என்னிடமே இருக்கிறது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டாலும், நேர்மறை விளைவுகள் ஏற்பட்டாலும் ஏற்கத் தயாராகவே இருக்கிறேன். பெண் குழந்தைகள் பற்றிய இந்தச் சமூகத்தின் பார்வையில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை இந்தத் தலைமுறையில் இருந்தே நாமே உருவாக்குவோம் தோழிகளே.
- தேவிகா, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT