Last Updated : 18 May, 2014 03:54 PM

 

Published : 18 May 2014 03:54 PM
Last Updated : 18 May 2014 03:54 PM

ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ

படகில் துடுப்பு போட்டப்படி புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்குள் நுழைகிறார் சாதனைகளை சொந்தமாக்க நினைக்கும் அந்த ஆஸ்திரேலியப் பெண்.

கரையருகே வந்தபோது படகை நிறுத்துவதற்கு அங்கிருந்தோர் உதவ வந்தபோது, அதை மறுத்துவிட்டுத் தானே படகை தள்ளிக்கொண்டு வந்து கரையில் பத்திரமாக நிறுத்துகிறார்.

கடலில் 50,000 கி.மீ. பயணத்தைத் தனியாக மேற்கொள்ளும் மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சான்ட்ரா ஹெலன் ராப்சன்தான் அவர். ஆசிரியையான அவர் 2011-ல் ஜெர்மனியில் பயணத்தைத் தொடங்கினார். படகை வலித்த களைப்பு உடலில் இருந்தாலும் அவரது பேச்சில் உற்சாகம்.

பயணம் எதற்காக?

கடலில் தன்னந்தனியாக 50,000 கி.மீ. தொலைவு பயணம் செய்யும் இந்த முடிவு ஏன்? “மனசுக்குப் பிடித்த விஷயத்துக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளலாம். எனக்குக் கடல் எப்போதும் பிடிக்கும். அதிலும் தன்னந்தனியாகப் படகில் பயணம் செய்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏற்கெனவே 1932-1939-ல் ஆஸ்கர் ஸ்பெக் என்பவர் ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தனியாகக் கடலில் சாகசப் பயணம் மேற்கொண்டார். 1935-ல் அவர் புதுச்சேரி வந்தார்.

அதை நினைவு படுத்தவே இந்தப் பயணம். ஜெர்மனியின் உம் நகரில் 2011-ம் ஆண்டு மே மாதம் என் பயணத்தைத் தொடங்கினேன். ஐரோப்பிய நாடுகள், மத்திய தரைக்கடல், செங்கடல் வழியாகப் பயணித்தேன். மத்திய கிழக்கு நாடுகள், சிரியா போன்ற பகுதிகளில் பதற்றமான சூழல் உள்ளதால் அங்கெல்லாம் போகவில்லை. ஈரான், பாகிஸ்தான் பகுதியிலும் கடல் பயணம் மேற்கொள்ள அனுமதி தரப்படவில்லை.

முதல் பெண்

மேற்கு இந்தியாவில் குஜராத் பகுதியில் இருந்து மண்டபம் வந்தேன். தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குச் செல்ல அனுமதி கேட்டேன். அனுமதி கிடைக்காததால், விமானம் மூலம் இலங்கை சென்று அங்கிருந்து படகு மூலம் 1,200 கி.மீ தூரத்தை 33 நாட்களில் கடந்து பாக் ஜலசந்தி வழியாக தனுஷ்கோடி வந்தடைந்தேன். இதன் மூலம் பாக் ஜலசந்தியைப் படகு மூலம் தனியாகக் கடந்த முதல் பெண் என்ற பெருமை கிடைத்தது.

பாக் ஜலசந்தியைக் கடப்பது கடினமாக இருந்தது. நாள்தோறும் 40 முதல் 50 கடல் மைல் பயணிப்பேன். கடல் அமைதியாகக் காணப்பட்டால் இரவிலும் பயணம் மேற்கொள்வேன். இல்லையென்றால் சில இடங்களில் தங்கிவிடுவேன்.

முன்பு இதே சாகசப் பயணத்தை மேற்கொண்ட ஆஸ்கர் ஸ்பெக் 7 ஆண்டுகளில் அந்தப் பயணத்தை நிறைவு செய்தார். நான் 5 ஆண்டுகளில், அதாவது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் சாகசப் பயணத்தை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளேன். அடுத்த 13 மாதங்களில் வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா வழியாகப் பயணத்தை நிறைவு செய்வேன்.

தன்னம்பிக்கை

நான் வசதியானவள் இல்லை. நான் பயணிக்கும் படகு பழைய படகுதான், 32 கிலோ எடையுடையது. நானே அதை முழுமையாகக் கையாள்வேன். பயணத்தின்போது எளிதாக செரிமானம் ஆகும் உணவைக் கொஞ்சமாக சாப்பிடுவேன். பிடித்த விஷயத்தை செய்ய பணம் மட்டும் போதாது. ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் தேவை.

நான் வசதியானவள் இல்லை. நான் பயணிக்கும் படகு பழைய படகுதான், 32 கிலோ எடையுடையது. நானே அதை முழுமையாகக் கையாள்வேன். பயணத்தின்போது எளிதாக செரிமானம் ஆகும் உணவைக் கொஞ்சமாக சாப்பிடுவேன். பிடித்த விஷயத்தை செய்ய பணம் மட்டும் போதாது. ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் தேவை.

என் சகோதரி குழந்தைகளுடன் இணையத்தில் உரையாடுவது ரொம்பப் பிடிக்கும். கடலில் பார்த்த விஷயங்கள், அனுபவங்களை கதைகளாக அவர்களுக்குச் சொல்வது சந்தோஷமான அனுபவம்.

இந்தியப் பெண்கள்

இந்தியப் பெண்களுக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இங்குள்ள ஆண்கள், பெண்களை வாயைப் பிளந்து பார்க்கிறார்கள். நான் இந்தியாவுக்கு வந்தபோதும், தமிழகத்துக்கு வந்தபோதும் முதலில் சங்கடமாக இருந்தது. பெண்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகை, பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.

அதேநேரம் அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கிறது. கடல் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம்-பெண்கள் தன்னந்தனியாக எந்த சவாலையும் சமாளிக்க முடியும் என்பதுதான். மனதில் உறுதியிருந்தால் பிடித்த விஷயத்தில் பெண்களால் தன்னந்தனியாக சாதிக்க முடியும்.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x