Published : 05 Apr 2015 01:27 PM
Last Updated : 05 Apr 2015 01:27 PM
மூன்றரை வயதில் குச்சியை எடுத்து விளையாடத் தொடங்கும் குழந்தை, வளர்ந்த பிறகு விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கிக் குவிக்கக்கூடும் என்பது பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை இம்மியும் பிசகாமல் பூர்த்தி செய்திருக்கிறார் சொக்கர் மீனா. குத்துச்சண்டை, குங்ஃபூ, பளு தூக்கும் போட்டி எனப் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என 60-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.
தேனி அருகே வடபுதுப்பட்டி என்.எஸ். கலைக்கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் மீனா, சமீபத்தில் கோவையில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். கல்லூரி மாணவி, சிலம்பு ஆசான் என சொக்கர் மீனாவுக்கு இரண்டு முகங்கள். மாலையில் கல்லூரி முடிந்த பிறகு தன்னுடன் பயிலும் மாணவிகளுக்கு சிலம்பாட்டப் பயிற்சியளித்து வருகிறார் மீனா.
மீனாவின் தாத்தா வீரபத்ரன், குஸ்திப் பயில்வானாகவும், சிலம்பாட்டக்காரராகவும் மிளிர்ந்தவர். அவரிடம் மூன்றரை வயதிலேயே சிலம்பம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.
“எனக்கு ஏழு வயதானபோது என் தாத்தா இறந்துவிட்டார். என் அப்பா நீலமேகமும் சிலம்பாட்டக்காரர்தான். தாத்தாவுக்குப் பிறகு எனக்கு அப்பாதான் குரு” என்கிறார் மீனா.
இன்று பல விதமான விளையாட்டுப் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் அழிந்து வருவதாக வேதனைப்பட்டவர், அந்தக் கலையை காப்பற்றும் நோக்கில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சியளித்து வருகிறார். தனது வீட்டுக்கு அருகேயுள்ள தனியார் பள்ளியில் அனுமதி பெற்று, அரசுப் பள்ளி மாணவிகள் சிலருக்குக் அங்கே காலையில் சிலம்பம் கற்றுத் தருகிறார். தன் தந்தையும் கல்லூரிப் பேராசிரியர்களும் உற்சாகப்படுத்துவதால் தன் செயல்பாடுகளைத் தொய்வின்றி தொடரமுடிவதாக மீனா சொல்கிறார்.
“மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவியர்களுக்கும் இந்தக் கலையைக் கற்றுத் தரும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் அனுமதி கேட்டு பல முறை கடிதம் எழுதியும் எந்தப் பள்ளியிலும் அனுமதி குறித்து இதுவரை பதில் வரவில்லை” என்று ஆதங்கப்படுகிறார்.
சொல்லிக்கொள்ளும்படி எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத சொக்கர் மீனாவுக்கு அவர் கற்று வைத்திருக்கும் கலைகளே அடையாளம். தான் கற்ற கலைகளை மற்றவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும் என்கிற அவரது முனைப்பு பாராட்டுக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT