Published : 19 Apr 2015 02:01 PM
Last Updated : 19 Apr 2015 02:01 PM

முகங்கள்: இரும்பு மனுஷிகள்

ஆண்டாண்டு காலமாகப் பெண்களை மென்மையுடன் தொடர்புபடுத்திப் பேசியே அவர்களின் திறமைகளை மழுங்கடித்துவிட்டனர். ஆனால் இதுபோன்ற கற்பிதங்களுக்குள் தொலைந்துபோகாமல் தனித்திறமையுடன் தடம் பதிக்கும் பெண்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. குதிரை மீதேறிப் போரிட்ட வீரப் பெண்களில் தொடங்கி, மங்கள்யான் திட்டப் பணிகளில் பங்களித்த பெண்கள் குழுவினர் வரை எத்தனையோ பேரை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகக் களமிறங்கும் பெண்கள் ஏராளம்.

வலிமையின் வழியில்

திண்டுக்கல் நேருஜி நகரைச் சேர்ந்த முருகம்மாள், பாப்பாத்தி, தனலட்சுமி மூவரும், ஆண்களுக்கு மட்டுமே சில வேலைகள் சாத்தியம் என்ற பொதுவான நினைப்பை மாற்றிக்காட்டியிருக்கிறார்கள். குழம்பை அடுப்பிலேற்றி இறக்கிவைப்பது போலத்தான் இரும்பைக் காய்ச்சி, உருக்கி வார்த்தெடுப்பதும் என்று சொல்லும் இவர்கள், வயோதிகத்தை மீறிய வலிமையுடன் இரும்புப் பட்டறையில் வேலைசெய்கிறார்கள். இவர்களின் உழைப்பில் மலர்ந்திருக்கிறது அந்த மகளிர் மட்டும் இரும்புப் பட்டறை. இவர்களே இரும்பை உருக்கி மண்வெட்டி, கடப்பாரை, சுத்தியல், அரிவாள், கூந்தளம், பிக்காச்சி, உளி உள்ளிட்ட பல்வேறு வேளாண், பண்ணை, கட்டிடக் கருவிகளைச் செய்து கொடுக்கின்றனர்.

பட்டறையில் பாடுபடுவது இந்தப் பெண்களின் வேலை. இவர்கள் தயாரிக்கும் கருவிகளை வெளியூர்களில் விற்பனை செய்வது இவர்கள் வீட்டு ஆண்களின் வேலை. தயாரிக்கப்படுகிற கருவிகளைத் தகுந்த வாடிக்கையாளர்களைத் தேடிப்பிடித்துச் சந்தைப்படுத்துவதையும் அவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். வெளியூருக்குப் போகாத நாட்களில் மட்டும் பட்டறை வேலையில் ஈடுபடுகின்றனர்.

நெஞ்சுரமே கவசம்

இந்தப் பெண்கள் அதிக வெப்பமும் வெளிச்சமும் கண்களைப் பாதிக்கும் என்ற தற்காப்பு உணர்வுகூட இல்லாமல் தீப்பொறிக்கு நடுவே அமர்ந்து வேலை செய்கிறார்கள். தனலட்சுமி பட்டறையில் நெருப்பைப் பற்றவைக்கிறார். பழுக்கக் காய்ச்சிய கடப்பாரையின் முனையைக் கூர்மையாக்க முருகம்மாளும் பாப்பாத்தியும் மாறி மாறிச் சம்மட்டியால் அடித்துக் கெட்டிப்படுத்துகின்றனர். கடின உழைப்பு மட்டுமல்ல இவர்களது பலம். வடிவமைப்பு, கருவிகளின் கூர்மை போன்ற தொழில்நுட்பத்தையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

உழைப்பே மகிழ்ச்சி

இந்தப் பெண்கள் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டாலும், இவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்கின்றனர்.

“இந்தப் பட்டறை வேலையைச் செய்யணும்னு நாங்க அவங்களை வற்புறுத்தினதில்லை. அதனால எங்களுக்கு அப்புறம், இந்த இரும்புப் பட்டறைத் தொழிலைச் செய்ய ஆளில்லை” என்கின்றனர்.

பட்டறை நெருப்பின் அளவைக் கூட்டியபடியே பேசுகிறார் முருகம்மாள்.

“பரம்பரை பரம்பரையா எங்க முன்னோருங்க இந்தத் தொழிலைத்தான் செய்தாங்க. அவங்களைப் பார்த்து வளர்ந்ததால் இந்த வேலை எங்களுக்குப் பழகிடுச்சு. சின்ன வயசுல இருந்தே வேலை செஞ்சு பழகிட்டதால உடம்புக்கு எந்த அலுப்பும் தெரியாது. ஒரு நாள் முழுக்க வேலை பார்த்தா ஆளுக்கு 500 ரூபாய்ல இருந்து 1000 ரூபாய்வரை கிடைக்கும். அறுவடை, சாகுபடி காலத்தில் மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை செய்ய நிறைய பேர் வருவாங்க. மத்த நேரத்தில் பழுது பார்க்கற வேலைங்கதான் இருக்கும்” என்று சொல்லும் முருகம்மாள், சமீப காலமாகக் கட்டிட வேலை செய்கிறவர்களிடம் இருந்து அதிக அளவில் ஆர்டர் வருவதாகச் சொல்கிறார்.

“வேலை தர்றவங்களை நம்பித்தான் எங்க பொழைப்பு ஓடுது. இரும்பைவிட உருக்கு மூலம் செய்யும் கருவிகள் நீண்ட நாள் உழைக்கும். சிலர் கடையில் மண்வெட்டி வாங்கினாலும், எங்ககிட்டே வந்துதான் கெட்டியான பூண், கைப்பிடி போட்டுப்பாங்க” என்கிறார் முருகம்மாள். சம்மட்டி பிடித்து இவர்கள் ஓங்கி யடிக்கிற அடியில் இரும்பே நெகிழ்ந்துகொடுக்கும்போது வாழ்க்கை மட்டும் வசப்படாதா என்ன? தகிக்கும் நெருப்புக்கு நடுவே ஒளிரும் இந்தப் பெண்களின் புன்னகை அதை உறுதிப்படுத்துகிறது.

படங்கள்: தங்கரெத்தினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x