Published : 12 Apr 2015 11:28 AM
Last Updated : 12 Apr 2015 11:28 AM

தேசிய விருது பெற்ற கிராமத்து முன்னோடி

பேருந்து வசதிகூட இல்லாத குக்கிராமத்தைச் சேர்ந்த தாயம்மாள், ‘சிறந்த முன்மாதிரி’ விருதை மத்திய நிதியமைச்சர் கையால் பெற்றிருக்கிறார். இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொர் ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படும். கல்வித் துறையில் புதிய மாற்றங்களை முன்னெடுத்ததற்காகத் தாயம்மாளுக்கு இந்த விருதை இந்தியத் தொழில் கூட்டமைப்பு வழங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த விழாவில் விருது பெற்றுத் திரும்பியிருக்கும் தாயம்மாள், திங்களுக்கு மறுநாள் செவ்வாய் என்பதுபோல்தான் இந்த விருதையும் இயல்பான ஒரு நிகழ்வாகக் குறிப்பிடுகிறார்.

பாதியில் நின்ற படிப்பு

தூத்துக்குடி மாவட்டம் இசவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாயம்மாள், வறுமை நிரந்தரமாகக் குடியிருக்கும் குடும்பத்தின் நான்காவது பெண். விவசாயக் கூலி வேலையை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பத்தில் படிப்பு இரண்டாம்பட்சம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அக்காவும் அண்ணன்களும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட, அவர்களைப் பின் தொடர்ந்து தாயம்மாளுக்கும் ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தை விட்டு நிற்க வேண்டிய கட்டாயம்.

பள்ளியை விட்டு நின்றாலும் எப்படியாவது மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆவல் தாயம்மாளின் உள்ளத்தில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்தது. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படிப்பைத் தொடர்ந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மீண்டும் படிப்பைத் தொடர முடியாத நிலை. பிறகு எப்படியோ போராடி படிப்பைத் தொடர்ந்த தாயம்மாள், அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரி!

மாலை நேரப் பள்ளி

“எங்க தாத்தா, பாட்டியோட வீட்லதான் நாங்க குடியிருக்கோம். என்னோட சேர்த்து வீட்ல மொத்தம் 7 பிள்ளைங்க. எல்லாரும் கூலி வேலைக்குப் போனாதான் சாப்பிட முடியும்? இதுல நாங்க பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டா எங்களைப் பெத்தவங்க மட்டும் எப்படித் தனியா சமாளிக்க முடியும்? ஆனா, எப்படியோ முட்டி மோதி நாங்க ஓரளவுக்குப் படிச்சோம். இப்போ என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கறாங்க” என்று சொல்லும் தாயம்மாள், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறார். அவரது அந்த முனைப்புதான் இன்று விருது வாங்கக் காரணம்.

கோபத்தால் விளைந்த நன்மை

சில வருடங்களுக்கு முன் இவரது கிராமத்துக்கு டி.வி.எஸ். நிறுவனத்தினர் வந்திருக்கிறார்கள். இசவன்குளம் கிராமத்தைத் தத்தெடுத்து இருப்பதாக ஊர்ப் பெரியவர்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள். அப்போது அங்கே நின்றிருந்த தாயம்மாள், “நீங்க என்ன பெருசா செஞ்சிட போறீங்க. இங்கே பாருங்க, மழை பெஞ்சு அங்கன்வாடியைச் சுத்தி பாம்பும் தவளையுமா போகுது. இதை உங்களால சரிசெய்து தரமுடியுமா?” என்று கோபத்துடன் பேசியிருக்கிறார். அங்கிருந்த ஊர்ப் பெரியவர்கள் தாயம்மாவை அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தாயம்மாளின் கோபத்தில் இருக்கிற நியாத்தைப் புரிந்துகொண்ட டி.வி.எஸ். நிறுவனத்தினர் அவர் கேட்டுக் கொண்டதுபோல அங்கன்வாடியைச் சீரமைத்துத் தந்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இவரது கிராமத்துக்கு டி.வி.எஸ். நிறுவனத்தினர் வந்திருக்கிறார்கள். இசவன்குளம் கிராமத்தைத் தத்தெடுத்து இருப்பதாக ஊர்ப் பெரியவர்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள். அப்போது அங்கே நின்றிருந்த தாயம்மாள், “நீங்க என்ன பெருசா செஞ்சிட போறீங்க. இங்கே பாருங்க, மழை பெஞ்சு அங்கன்வாடியைச் சுத்தி பாம்பும் தவளையுமா போகுது. இதை உங்களால சரிசெய்து தரமுடியுமா?” என்று கோபத்துடன் பேசியிருக்கிறார். அங்கிருந்த ஊர்ப் பெரியவர்கள் தாயம்மாவை அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தாயம்மாளின் கோபத்தில் இருக்கிற நியாத்தைப் புரிந்துகொண்ட டி.வி.எஸ். நிறுவனத்தினர் அவர் கேட்டுக் கொண்டதுபோல அங்கன்வாடியைச் சீரமைத்துத் தந்திருக்கிறார்கள்.

“எங்களை இத்தனை கேள்வி கேட்கிறாயே? உன் ஊருக்காக நீ என்ன செய்வாய்?” என்று தாயம்மாள் முன்னால் விழுந்த கேள்வி, அவரை இன்னும் உத்வேகப்படுத்தியது. எப்படியாவது தன் ஊரை முன்னேற்றிக் காட்ட வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேரச் சொல்லி அழைத்தார். சில வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு ஆளில்லாமல் பெரிய குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதைக் கண்டார். உடனே பள்ளி ஆசிரியர்களிடம் பெற்றோர்களிடமும் பேசி, குழந்தையுடனேயே பள்ளிக்கு வர அனுமதி வாங்கினார். மாலை நேரங்களில் மாணவர்களுக்குப் பாடம் கற்றுத் தந்தார். இவரிடம் படித்த பலர் இன்று கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். இதுவரை கிட்டத்தட்ட 400 குழந்தைகளுக்கு மேல் இவரிடம் மாலை நேரத்தில் பாடம் பயின்றிருக்கிறார்கள்.

“பாடம் சொல்லித் தர்றதுக்காகப் பணம் வாங்கறது இல்லை. வீட்டுக் கஷ்டம் அதிமானப்போ ஒரு முறை பத்து ரூபாய் டியூஷன் பீஸ் கேட்டேன். அதுக்கு அந்தக் குழந்தைகளோட அம்மாக்கள் எல்லாம், நாங்களே கூலி வேலைக்குப் போறோம். எங்ககிட்டே பணம் கேட்டா எப்படிக் குடுக்கறதுன்னு கேட்டாங்க. இப்படிதான் எல்லாரோட நிலைமையும் இருக்கு. கல்வியும் வேலைவாய்ப்பும் எங்க ஊரோட நிலைமையை மாத்தும்னு நம்புறேன்” என்று சொல்லும் தாயம்மாள், தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களின் துணையோடு ஊரைச் சுத்தப்படுத்தும் பணியையும் செய்துவருகிறார்.

கிராம முன்னேற்றமே இலக்கு

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் இவர் கற்றுக் கொண்ட தையல் கலை, கல்லூரிப் படிப்புக்கான கணிசமான ஊதியத்தைப் பெற்றுத் தந்தது. தற்போது அரசுத் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருக்கிறார். இருபத்தேழு வயதாகும் அவர் தன் திருமணம், பணத் தட்டுப்பாட்டால் தள்ளிப்போவது குறித்துக் கவலைப்படாமல் தனக்கு அடுத்து தன் தங்கைகளும் ஊர் நன்மைக்குப் பாடுபட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

“நான் விருது வாங்கியிருக்கேன்னு சொன்னப்போ எனக்கு எதுவும் புரியலை. ‘விருது குடுக்கறதுக்குப் பதிலா ஏதாவது வேலை கொடுத்திருக்கலாம்’னு அம்மா சொன்னாங்க. அதை வாங்குறதுக்கு டெல்லி போகணும்னு சொன்னப்போ அம்மா வேணாம்னு சொன்னாங்க. அப்புறம் எல்லாரும் எடுத்துச் சொல்லி அவங்களுக்குப் புரிய வச்சோம். இதைப் பார்க்க எங்க அப்பா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று தாயம்மாள் சொல்லும்போதே குரல் உடைகிறது. தாயம்மாளின் தந்தை பரமசிவன் சில மாதங்களுக்கு முன் இடி தாக்கி இறந்துவிட்டார். தேரிக் காட்டில் பாடுபடும் தாய்க்கு உதவியாகத் தாயம்மாளும் அவருடன் பிறந்தவர்களும் துணைநிற்கிறார்கள்.

“எங்க ஊருக்குக் குடி தண்ணீர் வசதியும் பஸ் வசதியும் இல்லை. அதுக்காக எவ்வளவோ பேர்கிட்டே முறையிட்டாச்சு. எதுவும் நடக்கலை. அடிப்படைத் தேவைகள் கிடைச்சாதானே மக்களால வாழ முடியும். எங்க கிராமத்தோட முன்னேற்றம் இந்த நாட்டோட முன்னேற்றம் இல்லையா?” என்ற தாயம்மாளின் கேள்விக்குப் பதில் கிடைக்கிற நாளில்தான் ஒரு கிராமத்தின் முன்னேற்றம் தீர்மானிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x