Last Updated : 19 Apr, 2015 01:56 PM

 

Published : 19 Apr 2015 01:56 PM
Last Updated : 19 Apr 2015 01:56 PM

களம் புதிது: பாதகத்தைச் சாதகமாக்கும் பெண்கள்

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மூச்சு திணறும் பூமித் தாய்க்குக் கொஞ்சமாவது உதவும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் தட்டாக்குட்டை கிராமத்துப் பெண்கள். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்டாக்குட்டை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது பாரத ரத்னா மகளிர் சுய உதவிக்குழு. அந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தங்கள் பணியை நிறுத்தவில்லை. கழிவுகளாக வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்து, அவற்றை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்து வருமானத்துக்கும் வழிவகுத் திருக்கிறார்கள்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி பெண்கள் இணைந்து இந்தச் சுய உதவிக்குழுவைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் மற்ற மகளிர் குழுக்களைப் போல் வங்கிக் கடன் பெற்று வீட்டில் இருந்தபடியே தையல் தொழிலில் ஈடுபட்டனர். அதில் ஓரளவு வருமானம் கிடைத்தபோதிலும், ஆண்டின் பல மாதங்களில் தொழில் வாய்ப்புகள் இருக்காது. இந்தச் சூழலில்தான் மாற்றுத்தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.

பள்ளிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதில் ஒன்றுதான் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்து, அவற்றைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் பிளாஸ்டிக் சாலை அமைக்க அனுப்பும் தொழில்.

மாற்றுக் கோணம்

“திருச்சி மாவட்டம் முசிறியில் இந்தத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதுகுறித்த விவரம் அறியப் பள்ளிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் எங்களை

நேரில் அழைத்துச் சென்று செயல்முறை விளக்கம் அளித்தனர். இது எளிதாக இருந்ததுடன், பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தது” என்கிறார் குழுவின் தலைவர் டி. ஜெயக்கொடி.

பிளாஸ்டிக் பைகளை எடுத்து வருகிறவர்களிடம் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இவர்களும் நேரடியாகச் சென்று பிளாஸ்டிக் பைகளைச் சேகரிக்கிறார்கள். இப்படிச் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பை முதலில் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்படும். பிறகு மற்றொரு இயந்திரம் மூலம் சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு, கிலோ 35 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தத் துண்டுகளை உள்ளாட்சி அமைப்பினர் பிளாஸ்டிக் சாலை அமைக்க வாங்கிச் செல்கின்றனர். இதுவரை 1,700 கிலோ பிளாஸ்டிக் துண்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குழுவில் உள்ளவர்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

“நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்பினர் துப்புரவு பணியாளர் மூலம் சேகரிக்கும் குப்பைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பைகளைக் குறைந்த விலையில் எங்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பைகளைச் சாலை அமைக்கப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கை சூழலும் பாதுகாக்கப்படும்’’ என்கிறார் ஜெயக்கொடி.

பூமிக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் பொருளையே தங்களுக்கும் சூழலுக்கும் சாதகமாக மாற்றும் இந்தப் பெண்களின் செயல் வரவேற்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x