Published : 22 Mar 2015 12:57 PM
Last Updated : 22 Mar 2015 12:57 PM
தமிழகத்தில் சாதியக் கொலைகள் நடப்பதில்லை என்று தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு வந்ததுதான் தாமதம், கடந்த சில மாதங்களில் மட்டும் 4 கொலைகள் சாதியின் போலி கவுரவத்துக்காக நடைபெற்றுள்ளன. பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, பாராட்டி சீராட்டி வளர்க்கும் குடும்பமே அந்தப் பெண்ணை கொலை செய்யும் இந்தக் கொடூர நிலைக்கு அரசு அக்கறையுடன் செயல்பட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரி வருகின்றனர். தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகிறது. மறுபக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மேலும் பல வடிவங்களில் அதிகரிக்கின்றன.
தந்தையின் ‘அன்பு’
மார்ச் 12-ம் தேதி, பெங்களூரு நகரத்தின் மையப்பகுதியில் நடைபெற்ற தாக்குதலை பேஸ்புக் பக்கத்தில் இரண்டு பெண்கள் பதிவு செய்துள்ளனர். சூர்யா என்ற இளம் பெண், பெங்களூருவில் தங்கி பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் யாரையாவது காதலிக்கலாம் என்று சந்தேகப்பட்ட அம்மாவும், அப்பாவும் பெங்களூரு வந்துள்ளனர். சூர்யா தன் பெற்றோரிடம் அவர்களின் இந்தச் சந்தேகத்தை மறுத்துள்ளார். இந்தப் பதிலில் திருப்தியடையாத பெற்றோர், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தங்களோடு ஊர் திரும்பவும், தாங்கள் சொல்லும் ஆணைத் திருமணம் செய்துகொள்ளவும் கேட்டுள்ளனர். அவர் மறுக்கவே நடுத்தெருவில் வைத்து அடித்திருக்கிறார்கள்.
அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நிவேதிதா சக்ரவர்த்தி, அர்ச்சனா ஆகிய இரண்டு பெண்கள், ‘அவர் அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து அடித்ததுடன் தெருவில் உதைத்துத் தள்ளினார். அவர் மதுரையில் காவல்துறை துணை ஆய்வாளராக உள்ளார்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் ‘காவல்துறையில் பணியாற்றுவோரே, இந்த விதத்தில் செயல்படுவதா?’ என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளனர். உதைக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாத்த பெண்கள், தங்கள் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சினிமாவில் வருவது போல காரின் முன் பக்கத்தில் அமர்ந்துகொண்டு வண்டியை தடுத்துள்ளார் அந்தப் பெண்ணின் தந்தை. இதுபற்றி தகவல் அறிந்த பெங்களூரு காவல்துறை 30 நிமிடங்களுக்கு பின்னர் அங்கு வந்து அந்தக் குடும்பத்தாரை உஸ்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வைப்போம் முற்றுப்புள்ளி
தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் சூர்யா யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், காதலித்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே பெற்றோரை மிருகமாக்கியுள்ளது. ஒவ்வொரு இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் தன் துணையைத் தேர்வு செய்யும் உரிமை உள்ளது என்பதை பெற்றோர் உணர்வதே இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும். தன் மூலமாக இந்தப் பூமிக்கு வந்த தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோரால் தர முடிந்த பெரும் செல்வம் அன்பான வாழ்க்கைதான். அன்பைச் சாகடிக்கும் போலி கவுரவத்துக்கு வைப்போம் முற்றுப்புள்ளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT