Published : 18 May 2014 04:17 PM
Last Updated : 18 May 2014 04:17 PM
சென்னை, நங்கநல்லூரில் இருக்கும் சாய்நாமகிரியின் வீடு குழந்தைகளால் நிறைந்திருக்கிறது. ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து சிலர் பூந்தொட்டி செய்ய, இன்னும் சில குழந்தைகள் பழைய சி.டி.யில் கற்கள் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். கம்பளி நூலில் பூக்கள், பல வண்ண சாட்டின் ரிப்பன்களில் மாலை, ஆரத்தித் தட்டு, லெட்டர் பாக்ஸ், வெல்வெட் குஞ்சலம் என ஆளுக்கொரு பொருளை அழகாகச் செய்துகொண்டிருந்தார்கள்.
சுவர் முழுக்க சாய்நாமகிரி வரைந்த ஓவியங்கள் நிறைந்திருக்க, தரை முழுக்கக் குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவான கலைப்பொருட்கள் சிதறியிருக்க, அந்த அறை அத்தனை அழகுடன் மிளிர்ந்தது. முடிக்கும் தறுவாயில் இருந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்டிக்கொண்டே பேசினார் சாய்நாமகிரி.
“என் சொந்த ஊர் சென்னையா இருந்தாலும் மதுரையில்தான் என் கலைப் பயணத்தைத் தொடங்கினேன். பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். யாரும் கற்றுத் தராமல் நானே வண்ணங்களைக் குழைத்து, என் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்தேன். ஓவியங்கள் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக அதையே என் பணியாகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்.
ஓவிய ஆசிரியராக வேண்டுமென்றால் அதற்கு முறைப்படி சான்றிதழ் வேண்டுமே? அங்கேதான் எனக்கு அறிமுகமானர் என் குரு வேங்கடஸ்வாமி. அவர் செய்த உதவிதான் நான் 35 ஆண்டுகளாக இந்தத் துறையில் நீடித்திருப்பது” என்று சொல்லும் சாய்நாமகிரி, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியதைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்.
“பாரதியார் பணிபுரிந்த பள்ளியில் பணியாற்ற எனக்கும் வாய்ப்பு கிடைத்ததையே நான் பெருமையாக நினைக்கிறேன். நான் சோர்ந்துவிழும் நேரங்களில் எல்லாம் அந்த நினைப்புதான் என்னை வலுப்படுத்தும்; மீண்டும் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கச் செய்யும். 1987-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படத்தை வரைந்து அவருக்கு அனுப்பினேன். ‘நீ நிச்சயம் சிறந்த ஓவிய ஆசிரியராக வருவாய்’ என்று அவரிடம் இருந்து பாராட்டுக் கடிதம் வந்தது. அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனக்கு ஓவிய ஆசிரியர் வேலை கிடைக்க அவருடைய கையெழுத்தும் ஒரு காரணம்” என்கிறார் சாய்நாமகிரி.
ஓவியத்தில் மட்டுமல்லாமல் ஃபேஷன் நகைகள், ஆரி எம்ப்ராய்டரி போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார். கறுப்பு, வெள்ளை இரண்டு நிறங்களையும் பயன்படுத்தாமல் அந்த நிறங்களை ஓவியங்களில் கொண்டுவருவது இவருடைய இன்னொரு சிறப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT