Published : 29 Mar 2015 01:23 PM
Last Updated : 29 Mar 2015 01:23 PM
இன்னும் சில மாதங்களில் நாற்பதைத் தொட்டுவிடுவேன். மகள் பத்தாம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பும் படிக்கிறார்கள். மகிழ்வும் நிறைவுமாகப் புலர்கின்றன பொழுதுகள். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத துரோகத்தையும் வேதனையையும் தாண்டித்தான் இந்த அமைதி எனக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.
கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத சிற்றூரில் பிறந்து வளர்ந்த எனக்கு, நான் வேலைக்குச் சேர்ந்த அலுவலகம் வேறொரு புதிய உலகத்தைக் காட்டியது. என்னைச் சுற்றியிருக்கிற அனைவருமே அற்புதமானவர்களாகத் தெரிந்தார்கள். கருத்துச் சொல்கிற ஒவ்வொருவரும் என் நலம் விரும்பி என்றே நம்பினேன். அப்படியொரு நம்பிக்கையில் உருவானதுதான் என் மண வாழ்க்கையும். ஊர் கூடி என்னைக் குடும்பத் தேர் இழுக்கச் செய்தது. பெற்றோரின் கசப்பைச் சம்பாதித்துக் கொண்டுதான் அவரைக் கரம்பிடித்தேன்.
கனவுகளைச் சுமந்துகொண்டு வந்த எனக்கு, மண வாழ்வு ஏமாற்றங்களைப் பரிசாக வைத்திருந்தது. புகையும் மதுப் பழக்கமும் அவருக்கு உண்டு எனத் தெரிந்தும், அன்பால் அனைத்தையும் மாற்றிவிடலாம் என்ற மமதை என்னை ஆட்டிப் படைத்தது. ஆனால், உண்மை என்று ஒரு வார்த்தை இருப்பதே தெரியாத ஒரு மனிதரிடம் எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்குச் சில மாதங்களே போதுமானதாக இருந்தது. என் பிறந்த வீட்டுக்காகவும் ஊருக்காகவும் வாழத் தொடங்கினேன். மகன் பிறந்த பிறகு பொருளாதாரப் பங்களிப்பைக்கூட நிறுத்திக்கொண்டார். என்னிடமே அடிக்கடி பணம், நகைகளைக் கேட்டுக் கெஞ்சுவார். நானும் குடும்ப மானம் தெருவுக்கு வந்துவிடக் கூடாது என்று அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தேன்.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்வு அன்று நடந்தது. இரவு 1 மணி இருக்கும். அவரது செல்போன் ஒளிர்ந்தது. ஏதாவது முக்கியச் செய்தியாக இருக்கும் என்று எடுக்க எத்தனித்தேன். அதற்குள் ஓடிவந்து என்னிடம் இருந்து செல்போனைப் பிடுங்கிக்கொண்டார். சட்டென்று எதையோ அழித்தார். "எதை மறைக்கப் பார்க்கிறீர்கள்" என்று நான் கேட்டதும், போனை என்னிடமே திரும்பித் தந்தார். குறுஞ்செய்திப் பட்டியலைப் பார்த்தேன். அவர் அழித்துவிட்டதாக நினைத்துதான் என்னிடம் கொடுத்தார். ஆனால், அவசரத்தில் முழுவதுமாக டெலீட் செய்ய மறந்துவிட்டார் போல. ஏதோ ஒரு பெண்ணுடன் நடந்த மிக அந்தரங்கமான உரையாடல் அது. நான்கு குறுஞ்செய்திகளுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை.
செல்போனை அவரிடமே தந்துவிட்டு அமைதியாக உட்கார்ந்தேன். என் அமைதி அவரை என்ன செய்ததோ. பலப் பல பொய்களை அடுக்கிப் பார்த்தார். அமைதியாகவே இருந்தேன். மறுநாள் நான் அலுவலகம் சென்றதும் அவருடைய தோழி ஒருத்தி போன் செய்து, அவருடைய அருமை பெருமைகளை என்னிடம் அடுக்கினாள். நான் அப்படியே "ம்" என்று மட்டும் கேட்டுக்கொண்டேன். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், என் பிறந்த வீட்டினரிடம் அனைத்தையும் சொல்லியிருப்பேன் என்று நினைத்திருப்பார்போல.
என்னையும் என் நடவடிக்கைகளையும் கண்காணிக்கத் தொடங்கினார். என் அலுவலக நண்பர்களிடம் இருந்து அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால் போதும். உடனே அவர்களுடன் என்னை இணைத்து வைத்துப் பேசுவார்.
அப்போதும் நான் பொறுமையாகவே இருந்தேன். அது அவரது ஆத்திரத்தை அதிகரித்தது. குடித்துவிட்டு வந்து என்னை அடித்தார். ஒரு நாள் சத்தம் கேட்டு மகன் விழித்தான். அப்போது அவன் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். என் கணவரது செயலைப் பார்த்து அவன் துடித்துப் போனான். ‘ஏன்பா அம்மாவை இப்படிச் சித்தரவதை செய்யறே?’ என்று கேட்க, அவனையும் கண்மூடித்தனமாக அடித்தார். யாருடைய நலனுக்காக நான் அத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தேனோ, அதற்கே அர்த்தம் இல்லாமல் போனது. விடியலுக்காகக் காத்திருந்தேன்.
பிறந்த வீட்டுக்குச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. யாருக்கும் சுமையாக இருக்க விருப்பமில்லை. எனக்குத் தெரிந்த நண்பர் மூலமாக வக்கீலைப் பார்த்தேன். விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன். அது தெரிந்ததுமே அவரின் மிருகத்தனமும் வெறியும் அதிகமாயின. அடிப்பதும், துன்புறுத்துவதும் எல்லை கடந்தன. இரவெல்லாம் நான் தூங்கக் கூடாது என்பதற்காக என்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிடுவார். நான் குழந்தைகளுடன் தனியாக இருப்பேன் என்று தெரிந்ததும், யாரும் வீட்டை வாடகைக்குத் தர முன்வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கும் அவமானத்துக்கும் பிறகு விவாகரத்து கிடைத்தது. குழந்தைகள் என்னுடன் இருக்கும்படி தீர்ப்பு வந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் என் குழந்தைகளும் எங்களுக்கான உலகில் மகிழ்வுடன் இருக்கிறோம். இங்கே தந்தை இல்லை. அதனால் வலியும் இல்லை, வேதனையும் இல்லை. புதிதாகச் சந்திக்கிறவர்கள், ‘உங்கள் கணவர் என்ன செய்கிறார்?’ என்றுதான் பேச்சைத் தொடங்குகிறார்கள். நான் புன்னகையுடன், ‘நான் விவாகரத்து ஆனவள்’என்று சொன்னதும் கேள்வி கேட்டவர்களின் புன்னகை மறைந்துபோகிறது. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த உலகத்தில் என்னைப் புரிந்துகொள்ளவும் அன்பு செலுத்தவும் பலர் இருக்கிறார்கள். திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன், தன்னிறைவோடு.
பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT