Published : 02 Mar 2015 12:56 PM
Last Updated : 02 Mar 2015 12:56 PM
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து மத நாடாளுமன்ற உறுப்பினர் துளசி கப்பார்ட், ஹவாய் தீவில் சினிமா ஒளிப்பதிவாளர் ஆப்ரகாம் வில்லியம்ஸை வேத மந்திரங்கள் ஒலிக்க, வரும் ஏப்ரல் மாதம் திருமணம் செய்ய உள்ளார். ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாம் முறை பதவி வகித்து வருகிறார் துளசி.
தனது மணமகன் யார் என்பதை சமீபத்தில்தான் அறிவித்தார் துளசி. 26 வயதாகும் ஆபிரகாம் வில்லியம்ஸ் 1.17 கேரட் வைர மோதிரத்தைக் கொடுத்து துளசியிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லியம்ஸுக்கு இது முதல் திருமணம். துளசி விவாகரத்தானவர். இவர்களது திருமணத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் அழைப்பு உண்டாம்.
“நாங்கள் கொண்டிருக்கும் ஆன்மிக விழுமியங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதை முக்கியமாகக் கருதுகிறோம். அதனால் இந்து மரபுப்படி சடங்குகளை நடத்த உள்ளோம்” என்கிறார் துளசி.
பெண் பத்திரிகையாளர் மரணம்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ராய்ட்டர் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த பத்திரிகையாளர் மரியா கோலோவ்னினா, சில நாட்களுக்கு முன் மர்ம மரணம் அடைந்தார். பாகிஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனை அவரது மரணத்தை உறுதிப்படுத்தி பல மணிநேரங்கள் ஆனபின்னரும் ராய்ட்டர் அவரது இறப்புச்செய்தியை வெளியிடவில்லை.
அவரது உடலில் நீலத்தடங்கள் காணப்பட்டதாகவும், நஞ்சால் அவரது மரணம் நேர்ந்திருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 34 வயதேயான மரியா கோலோவ்னினாவின் மரணத்துக்கான பின்னணியை இஸ்லாமாபாத் காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து வருகின்றனர்.
ரஷ்ய-ஜப்பானிய பெற்றோருக்குப் பிறந்தவர் மரியா. இதற்கு முன்பு லண்டன், சிங்கப்பூர், மாஸ்கோ மற்றும் ஈராக்கில் செய்தியாளராகப் பணியாற்றியவர் மரியா. பாகிஸ்தானிய மற்றும் ஆப்கன் தீவிரவாதிகளுடன் இவருக்கிருந்த தொடர்புகள் இவரை பிரபலப்படுத்தின.
மரியா கோலோவ்னினா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT