Published : 02 Mar 2015 12:15 PM
Last Updated : 02 Mar 2015 12:15 PM
தங்கள் மகள் இந்துஜாவுக்கு 23 வயதானதும் திருமண வரன் தேடத் தொடங்கினார்கள் அவருடைய பெற்றோர். உடனே பிரபல திருமணத் தகவல் இணையதளம் ஒன்றில் தங்கள் மகளின் அங்க அடையாளங்கள் முதல் அத்தனை விவரங்களையும் பதிவு செய்தார்கள்.
தன் இயல்புக்கு முற்றிலும் மாறான குறிப்புகள் கொடுக்கப்பட்டதைக் கண்ட இந்துஜா, “நான் ஒன்றும் திருமணத்துக்கான பொருள் அல்ல” என வெகுண்டெழுந்தார்.
அதற்காகப் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் எல்லாம் ஈடுபடவில்லை. சேலத்தைச் சேர்ந்த இந்துஜா, பெங்களூருவில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவோடு இரவாக மேரி.இந்துஜா.காம் ( >marry.indhuja.com) என்ற இணையதளத்தை உருவாக்கினார்.
அதில், “ஒரு ஆண், ஊர் சுற்றியாக இருக்க வேண்டும். தாடி வைத்திருந்தால் நல்லது. தனக்கெனச் சம்பாதிக்க வேண்டும். செய்யும் வேலையை நேசிக்க வேண்டும். அம்மா பிள்ளையாக இருக்கக்கூடாது. குழந்தைகள் என்றாலே அலர்ஜி என்றால் கூடுதல் புள்ளிகள் தருவேன்.
நல்ல குரல் வளம், ஈர்க்கும் ஆளுமை. குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தொடர்ந்து உரையாடும் திறன் இருக்க வேண்டியது அவசியம்” என்று தான் உருவாக்கிய திருமணத் தகவல் இணையதளத்தில் குறிப்பிட்டார். இது தவிர தன்னைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை இவ்வாறு கொடுத்தார், பாலினம்: ஆணைப் போன்ற பெண் (tomboy), திருமண நிலை தன்னைத் தானே மணந்தவள், சம்பளம்: தன்னளவில் போதுமானது. பயணங்களுக்காகச் சிறிது சேமிக்கிறேன்.
இப்படிக் கேலியும், கிண்டலுமாக ஒரு திருமணத் தகவல் இணையதளத்தை ஏற்படுத்திய போதிலும் “உங்களை மணக்க எனக்கு விருப்பம்” என அதே இணையத்தில் தெரிவித்து வரும் ஆண்கள் பலர். ஆனால் தற்சமயம் இந்துஜாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.
சொல்லப் போனால் தன் எதிர்ப்பைத்தான் இந்த இளம் பெண் மிகப் புத்திசாலித்தனமாக இப்படி வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை 1.7 லட்சம் இணையவாசிகள் இந்துஜாவின் இணையத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT