Published : 02 Mar 2015 12:37 PM
Last Updated : 02 Mar 2015 12:37 PM
சின்னஞ்சிறு பாதங்களும் 42 கிலோமீட்டர் தூரமும் இன்று ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் அமைதிக்கும் காரணமாக இருக்கின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கும். கென்யாவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை டெக்லா லோரோப், அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
பெண் ஒரு பண்டமாக, பிள்ளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாக, வீட்டு வேலைகளைச் செய்யும் அடிமையாகத்தான் இன்றும் பல நாடுகளில் பார்க்கப்படுகிறாள். 42 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இன்னும் மோசம்.
டெக்லாவின் அப்பாவுக்கு நான்கு மனைவிகள். 24 குழந்தைகள். ஆடு, மாடு மேய்ப்பது, தண்ணீர் எடுத்து வருவது, சகோதர, சகோதரிகளைக் கவனித்துக்கொள்வதுதான் ஆறு வயது வரை டெக்லாவின் வேலையாக இருந்தது. இரண்டு கால்கள் உள்ள தன் சகோதரர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, அதே இரண்டு கால்களுடைய தான் ஏன் பள்ளி செல்லக் கூடாது என்று யோசித்த நொடிதான் டெக்லாவின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
பெண் என்றால் படிக்கக் கூடாதா?
அப்பாவும் அவரது உறவினர்களும் பெண்கள் படிக்கக் கூடாது என்றார்கள். சகோதரர்களிடம் தன் எண்ணத்தை டெக்லா வெளிப்படுத்தினார். அவர்களும் உதவ முன்வந்தனர்.
5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு அதிகாலை ஒரே ஓட்டமாக ஓடிவிடுவார் டெக்லா. சொல் பேச்சு கேட்காத மகளை நினைத்து அம்மாவுக்கு ஒரே கவலை. தன்னோடு இன்னும் மூன்று பெண்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார் டெக்லா.
தினமும் 10 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்ததால், சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாக உருவானார் டெக்லா. பள்ளியிலும் தன்னைவிடப் பெரிய மாணவர்களை எல்லாம் வெற்றிகொண்டார். பள்ளியில் டெக்லாவின் திறமையைக் கண்டு, கென்ய அதெலெடிக்ஸ் ஃபெடரேஷனில் சேர்த்துப் பயிற்சியளிக்க விரும்பினர். ஆனால் மெல்லிய உடலும் சிறிய உருவமும் கொண்ட டெக்லா மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
1988-ம் ஆண்டு க்ராஸ் கன்ட்ரி ஓட்டப் பந்தயத்தில் வெற்றுக் கால்களுடன் ஓடி, வெற்றி பெற்றார் டெக்லா. தொடர்ந்து பல போட்டிகளில் பரிசு பெற்றார். அதற்குப் பிறகு அத்லெடிக் ஃபெடரேஷன் அவருக்குப் பயிற்சியளிக்க முன்வந்தது. 1989-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் கால்களில் ஷூக்களை அணிந்தார் டெக்லா.
உறுதி தந்த வெற்றி
1994-ம் ஆண்டு டெக்லாவின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். முதல் முறையாக கென்யாவை விட்டு வேறொரு நாட்டுக்குப் பயணம் செய்தார். நியூயார்க்கில் நடந்த உலக மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். உலகின் முக்கியமான ஓட்டப் பந்தய வீரர்கள் போட்டிக்காக வந்திருந்தனர். புதிய நாடோ, போட்டியாளர்களோ டெக்லாவைத் தயக்கம் அடையச் செய்யவில்லை.
“என் உருவத்தையோ, என் பின்னணியையோ நான் ஒருநாளும் அவமானமாகக் கருதியதில்லை. என் இலக்கு ஓடுவதுதான். என் திறமையில் நம்பிக்கை வைத்து என் நாடு என்னை அனுப்பியிருக்கிறது. என் நாட்டுக்கும் என் மக்களுக்கும் என் வெற்றி ஒன்றுதான் நான் செய்யும் கைமாறாக இருக்க முடியும்” என்றார் டெக்லா.
போட்டி ஆரம்பமானது. நோஞ்சானாகக் காட்சியளித்த டெக்லா வெற்றி பெறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார் டெக்லா. மாரத்தானில் உலக அளவில் பட்டம் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற சிறப்பும் டெக்லாவுக்குக் கிடைத்தது. சர்வதேச அளவில் மீடியாவின் வெளிச்சம் டெக்லா மீது படிந்தது.
“இது என் தனிப்பட்ட வெற்றி அல்ல. இது என் நாட்டின் வெற்றி. எங்கள் மக்களின் வெற்றி. உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. இந்த வெற்றி மூலம் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள் வெளியே வருவார்கள்” என்றார் டெக்லா.
நாடு திரும்பியபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது கிராமத்தினர் கால்நடைகளைப் பரிசாக வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போதும் அவருடைய அப்பாவுக்கு மகள் மீது வருத்தம் தீரவில்லை.
தொடர்ந்து உலகப் போட்டிகளில் பங்கேற்று, 3 முறை அரை மாரத்தான் சாம்பியன் பட்டங்களையும் 2 முறை உலக மாரத்தான் பட்டங்களையும் வென்று புதிய சாதனையைப் படைத்தார். 20, 25, 30 கிலோமீட்டர் தூரங்களில் ஏற்படுத்திய புதிய உலக சாதனைகள் டெக்லாவிடம் உள்ளன.
தளராத தன்னம்பிக்கை
2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மாரத்தானிலும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் கலந்துகொண்டார் டெக்லா. ஆனால் போட்டி ஆரம்பமாவதற்கு முதல் நாள் இரவு ஃபுட் பாய்சனால் அவர் உடல்நிலை மோசமடைந்தது.
இருந்தும் அவர் பின்வாங்கவில்லை. மாரத்தானில் 13-வது இடத்தையும் 10 ஆயிரம் மீட்டரில் 5-வது இடத்தையும் பெற்றார் டெக்லா. இந்தப் பெண்ணுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தபோதே, கென்யாவில் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஏழை எளிய குழந்தைகள் படிப்பதற்காக டெக்லா அகாடமியை ஆரம்பித்து நடத்தி வந்தார். யூனிசெஃப் தூதராகவும் செயலாற்றினார்.
அடிக்கடி ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் விளையாட்டில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டார் டெக்லா. ஆனால் சமூக முன்னேற்றத்தில் முன்பைவிட இன்னும் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார்.
“படிப்பு ஒன்றுதான் மனிதனை மேம்படுத்த முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நிலம், கால்நடைகள், தண்ணீர் தொடர்பான சண்டைகள் எங்கள் மக்களுக்குள் அடிக்கடி நிகழும். இதில் உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக இருக்கும். எப்போதும் கைகளில் துப்பாக்கிகளுடன் அலைந்துகொண்டிருப்பார்கள். வன்முறைகளில் இறங்குவதால் இவர்கள் எல்லாம் மோசமான மனிதர்கள் இல்லை.
காலம் காலமாக அவர்களை இப்படித்தான் சமூகம் நடத்தி வந்திருக்கிறது. வன்முறையாளர்களிடம் பேசி, அவர்களது துப்பாக்கிகளைக் கீழே போட வைப்போம். குற்றவாளிகளை மன்னித்து, திருந்தி வாழச் சந்தர்ப்பம் அளிப்போம். டெக்லா அமைதி ஃபவுண்டேஷன் கென்யா, உகாண்டா நாடுகளின் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது” என்கிறார் டெக்லா.
போராடினால்தான் முன்னேற்றம்
கல்வி, விளையாட்டு, பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, அமைதி என்று பல்வேறு விதங்களில் டெக்லா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
“நான் பெற்றோர், எங்கள் சமூகத்தினரின் எதிர்ப்பை மீறிப் படிக்கவும் விளையாடவும் வந்தேன். ஆரம்பத்தில் விளையாடச் செல்லும்போது ஆப்பிரிக்க வீரர்கள் அவர்களின் உடைகளைத் துவைக்கச் சொல்வார்கள். அறைகளைச் சுத்தம் செய்யச் சொல்வார்கள். சமைத்துப் போடச் சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் சக வீராங்கனை அல்ல; ஒரு பெண்.
அவர்களை எதிர்ப்பதற்கு என்னை நான் நிரூபிக்க வேண்டியிருந்தது. கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. ‘வெற்றி’ என்ற அற்புதம் எனக்குச் சாத்தியமானவுடன் எல்லோரும் எனக்கு நண்பர்களானார்கள், என் அப்பா உள்பட. ஒருவேளை கட்டுப்பாடுகளை மீறாமல், சக வீரர்களின் கிண்டலுக்குப் பயந்து வீட்டிலேயே முடங்கியிருந்தால் இன்று என் மக்களின் முன்னேற்றம் சாத்தியமாகியிருக்காது. சமூகத்தை முன்னேற்றுவதைவிட உலகில் வேறு என்ன அழகான விஷயம் இருக்க முடியும்?” என்கிறார் டெக்லா லோரோப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT