Published : 22 Feb 2015 03:28 PM
Last Updated : 22 Feb 2015 03:28 PM
“கேமராவுக்கு முன்பு நிற்பது எப்பொழுதுமே எனக்குச் சங்கடமான விஷயமாக இருக்கிறது. அதனால்தான் நான் ஓர் ஒளிப்படக் கலைஞராக இருக்கிறேன். என்னுடைய ஒளிப்படங்கள் அர்த்தமுள்ள விஷயங்ளைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதன் மூலம் விழிப்புணர்வும் நல்ல மாற்றமும் நிகழ வேண்டும் என்கிறார்” அமி விட்டாலி.
பூமியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் சென்று வந்திருக்கிறார் போட்டோ ஜர்னலிஸ்ட் அமி விட்டாலி. கடந்த இருபது ஆண்டுகளில் 80 நாடுகளுக்குச் சென்று ஒளிப்படங்களையும் ஆவணப்படங்களையும் எடுத்து வந்திருக்கிறார் இவர். உலகின் முக்கிய அருங்காட்சியகங்களிலும் ஓவியக்கூடங்களிலும் இவரது ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நேஷனல் ஜியாகிராபிக், அட்வெஞ்சர், ஜியோ, நியுஸ்வீக், டைம், ஸ்மித்சோனியன் என்ற புகழ்பெற்ற பத்திரிகைகளில் இவரது ஒளிப்படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இப்போது நேஷனல் ஜியாகிராபிக் பத்திரிகையின் ஒளிப்படக் கலைஞராகவும் நிக்கான் நிறுவனத்தின் அம்பாசடராகவும் இருக்கிறார். உலகின் மிக முக்கிய விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் ஒளிப்படக் கலைஞர்களுக்கான பயிற்சிகளையும் அளித்துவருகிறார்.
புதிய பாதை
அமெரிக்கரான அமி, கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ஒளிப்படக் கலைஞராக ஒரு பத்திரிகையில் வேலை செய்தார். குறிப்பிட்ட பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டிய அந்த வேலை ஆறு மாதங்களிலேயே, அவருக்கு அலுப்பைத் தந்துவிட்டது. வேலையை விட்டுவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவரது சகோதரியுடன் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினி-பிஸ்ஸாவ் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
அந்த நாட்டில் நிலவிய போர், வறுமை, எழுத்தறிவின்மை, சுகாதாரமின்மை, அரசியல் எல்லாவற்றையும் நேரில் பார்த்தார். அதுவரை அதுபோன்ற அனுபவங்களைப் பெற்றிருக்காத அமி, புதிய மனிதராக மாறினார். புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
அன்று முதல் உலகின் பார்வையில் அழகாக இருக்கும் விஷயங்களை, அவர் படங்கள் எடுப்பதில்லை. சுற்றுலாப் பயணியாக எந்த நாட்டுக்கும் செல்வதில்லை. ஒரு விஷயத்தைப் பார்த்த நொடியில் படங்கள் எடுத்துத் தள்ளுவது அமியின் பாணி அல்ல.
ஓர் இடத்துக்குச் சென்றால் முதலில் அங்குள்ள நிலைமைகளை முற்றிலும் அறிந்துகொள்கிறார். மக்களோடு மக்களாக வாழ்கிறார். அவர்கள் உணவைச் சாப்பிடுகிறார். அவர்களைப் போல ஆடைகளை உடுத்துகிறார். அவர்களில் ஒருத்தியாக மாறிவிடுகிறார். இப்படி ஒரு புராஜெக்ட்டை முடிப்பதற்கு ஒன்றிரண்டு மாதங்களில் இருந்து ஆறு மாதங்கள்வரைகூட ஆகும்.
உண்மையும் மக்களும்
“ஒளிப்படக் கலைஞருக்கு முதலில் பொறுமை அவசியம். குறிப்பிட்ட கணங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். அந்தக் கணம் வந்தவுடன் மிக வேகமாகச் செயல்படவும் தெரிந்திருக்க வேண்டும். மக்களோடு மக்களாகப் பழகாமல் உண்மையான, முழுமையான விஷயங்களைக் கொண்டுவரவே முடியாது” என்கிறார் அமி.
ஏழை, எளிய மக்கள்தான் அமியின் இலக்கு. ஒரு பொருளைப் போலவோ, ஓர் இடத்தைப் போலவோ நினைத்துக்கொண்டு, மனிதர்களை அவரால் படம் எடுக்க இயலாது. மக்களின் துன்பத்தையும் வறுமையையும் பயன்படுத்திக்கொண்டு விதவிதமான படங்கள் எடுத்து சிறந்த ஒளிப்படக் கலைஞர் என்று பரிசுகளையும் விருதுகளையும் தன்னால் வாங்கவே முடியாது என்கிறார் அமி.
“நானும் ஏழை மக்களின் வாழ்க்கையைத்தான் பதிவு செய்கிறேன். ஆனால் என் ஒளிப்படங்கள், ஆவணப் படங்கள் மூலம் மக்களின் பிரச்சினைகளை வெளியுலகத்துக்குத் தெரிய வைக்கிறேன். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன்.
பெண்கள், குழந்தைகள், வறுமை, எழுத்தறிவு, சுற்றுச்சூழல், அமைதி போன்றவைதான் என்னுடைய இலக்கு. சில ஆப்பிரிக்க நாடுகளில் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக 11 மணி நேரம் நடக்கிறார்கள். பிரசவத்தின்போது ஐந்தில் நான்கு பேர் மரணத்தைச் சந்திக்கும் சூழல் இந்த உலகில் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவில் 45 வருஷங்களாக கை ரிக்ஷா இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னால் அவர்கள் ரிக்ஷாவில் ஏறவே முடியவில்லை. ஒரு ரிக்ஷாக்காரரை வைத்து நான் இழுத்தேன். ஐயோ… என்ன ஒரு கொடுமையான வேலை. கைகளிலும் தோள்பட்டைகளிலும் பயங்கர வலி. மனிதர்கள் என்றால் எல்லோரும் மனிதர்கள்தானே? ஏன் உணவு, உடை, உறைவிடம் என்ற அத்தியாவசியத் தேவைகள்கூட எல்லா மனிதர்களுக்கும் கிடைப்பதில்லை?’ என்று கேள்விகளை வீசுகிறார் அமி.
வலி தரும் அனுபவங்கள்
ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் அதிக ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். வாழும் இடங்களுக்கு ஏற்ப அவர்களுடைய மொழியையும் ஓரளவு கற்றுக்கொள்கிறார். இதனால் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் எளிதில் நெருங்கிவிடுகிறார். கினி-பிஸ்ஸாவ் நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள் இரவு குழந்தைகளுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறுவன், நிலாவைக் காட்டி அமெரிக்காவிலும் நிலா இருக்கிறதா என்று கேட்டான்.
அமெரிக்கா ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருப்பது போல எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் எளிய மனிதர்கள். நிலாவைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சிறுவனின் கேள்வி அமியைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டில் அதே சிறுவனைக் கண்டார். இளைஞனாக செல்போனுடன் காட்சி தந்தான். அவனது கேள்வியை நினைவூட்டினார் அமி. ‘ஆமாம்… இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. நாம் எல்லோரும் ஒரே கிரகத்தைச் சேர்ந்த மனிதர்கள். நிலாவை நாம் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்’ என்றான்.
“சூரியனையும் சந்திரனையும் அனைவரும் பகிர்ந்துகொள்வது போலவே மனிதர்கள் அனைவரும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். எல்லோருக்கும் ஒரே மதிப்புதான் இருக்கிறது” என்கிறார் அமி.
தனிமையே நண்பன்
ஒளிப்படக் கலைஞராக இருப்பதில் ஒரே ஒரு சங்கடம் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார் அமி. அது தனிமை. தனியாகச் செய்யும் வேலை இது. அதிக காலம் எடுத்துக்கொள்வதால் தனிமையைத் தவிர்க்க இயலாது. ஆண்டுக்கு இரண்டு, மூன்று வாரங்களே அமெரிக்காவில் அவரது வீட்டில் இருக்கிறார். “தனிமை கடினம் என்றாலும், அது அவ்வளவு கடினம் என்று சொல்ல மாட்டேன். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் படும் துயரங்களைப் பார்க்கும்போது, இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.
எத்தனை போர்கள், வன்முறைகள், வறுமை எல்லாம் வாட்டினாலும் அத்தனையும் மீறி வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் ஒவ்வொரு மனிதனிடம் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த மக்களின் நம்பிக்கைதான் எனக்கும் இருக்கிறது. என்றாவது ஒருநாள் இவர்களின் நிலைமையை மாற்ற முடியும் என்றுதான் ஒவ்வொரு வேலையையும் ஏற்றுக்கொள்கிறேன்’இறக்கி வைக்க முடியாத பாரத்துடன் கூறுகிறார் அமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT