Published : 15 Feb 2015 02:13 PM
Last Updated : 15 Feb 2015 02:13 PM
பெரம்பலூர் போன்ற சிறு நகரங்களில் புத்தகத் திருவிழா நடத்துவது புதிதுதான். அதிலும் புத்தக விற்பனை மட்டுமல்லாது, மாவட்டம் சந்திக்கும் மிகப் பெரிய சவாலான பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை மவுனப் பிரச்சாரமாக செய்து காட்டியிருக்கிறார்கள்.
உள்ளூர் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தன்னார் வலர்கள் உதவியுடன் இதை சாத்தியமாக்கி இருப்பது சாட்சாத் அரசு அதிகாரிகள். தரேஸ் அகமது என்ற துடிப்பான அதிகாரியின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்போம். பெரம்பலூர் ஆட்சியரான அவருடைய முயற்சியில் 4-வது வருடமாக அரசு சார்பில் புத்தகத் திருவிழாநடந்தது. 10 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவின் ஊடாக பெண் குழந்தைகளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வேண்டாம் குழந்தைத் திருமணம்
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 328. அறியாமை பெற்றோர் தள்ளிவிட்ட திருமணப் புதைகுழிகளில் இருந்து, கடந்த 3 வருடங்களில் மீட்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இது. இவர்கள் அனைவரும் மீட்கப் பட்டதோடு, அவர்கள் விரும்பிய உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருக்கிறது. இவர்களில் உயர்கல்வியில் ஜொலிக்கும் 68 பெண்கள் ஏனைய சிறுமிகளுக்கு அண்மையில் அடையாளம் காட்டப்பட்டனர்.
உண்டியல் திட்டம்
குழந்தைத் திருமண ஆபத்தை களைய மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி முதற்கொண்டு பள்ளிக் கல்வி சீரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 4-ம் இடத்தை எட்டியது இப்படித்தான். அந்த வகையில் பாடங்களை தாண்டிய வாசிப்பை வழங்க புத்தகத் திருவிழா ஒரு உத்தியாக உருவானது.
சென்ற வருடம் பட்டி தொட்டியி லிருந்தெல்லாம் மாணவ மாணவியர் சாரை சாரையாய் புத்தகக் காட்சியை வாய் பிளந்து சுற்றிப் பார்த்தனர். அவர்களில் ஒரு பிளஸ் 1 மாணவி ‘இந்தப் புத்தகத் திருவிழாவில் நாங்கள் பார்வையாளர்கள் மட்டுமே’என்று வருத்தப்பட்டது ஆட்சியர் காதுக்கு சென்றது. அதிகாரிகளிடம் விவாதித்து, உண்டியல் திட்டத்தை உருவாக்கினார். மொத்தம் 6,900 உண்டியல்கள் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டன. அவ்வப்போது அதில் சேமித்த நாணயங்களை மொத்தமாக புத்தக திருவிழாவில் செலுத்தி, கூடுதல் சலுகையுடன் பாடம் சாராத முதல் புத்தகத்தை சிறுமிகள் வாங்கிச் சென்றது கண்கொள்ளா காட்சி.
அறிவார்ந்த பரிசுகள்
புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவியர் கூட்டத்தை ஒரு அதிகாரி மறிப்பார். அவர்களின் வயதுக்கேற்ப பொதுஅறிவு தொடர்பான கேள்வி களை கேட்பார். சரியான விடை சொல்வோருக்கு, அவர்கள் விரும்பும் புத்தகங்கள் அப்போதே பரிசளிக்கப்பட்டன. அதேபோல புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள் விருப்பப்பட்டால் குறைந்தது ரூ. 50 செலுத்தி, அவர்களுடைய பெயர் பொறித்த வில்லையை கூடத்தில் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த தொகை, கைக் காசில்லாத புத்தக ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு அதிரடி பரிசாக அளிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு 50 ரூபாயை வழங்கினார்கள். பொதுமக்கள் மட்டும்தான் அளிக்க வேண்டுமா என்று, பெரம்பலூர் சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி முன்மாதிரியாய் ரூ.10 ஆயிரம் வழங்க, மற்ற அதிகாரிகளும் தங்கள் பங்களிப்பை தொடர்ந்தனர்.
‘தொடுகை’ கூடம்
ஒரு கூடத்தில் குழந்தை பாதுகாப்பு பெண் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த குழந்தை களுக்கான ‘பாதுகாப்பான தொடுகை’, ’பாதுகாப்பற்ற தொடுகை ’விழிப்புணர்வு முகாம், தாய்மார்களிடையே வரவேற்பு பெற்றது. பாலியல் தொடர்பாக குழந்தைகளுக்கு பட்டவர்த்தனமாக சொல்லித்தர வீட்டுச்சூழல் கைகொடுக்காத தாய்மார்கள், இங்கே வந்ததும் குழந்தைகளுக்கு உற்சாகமாக பாடமெடுத்து அசத்தினர். இதேபோல பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அறிவுறுத்தல்களை வழங்கும் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள், வளரிளம் பெண்கள் என ஊட்டமளிக்கும் உணவு வகைகளை அங்கே விளக்கினார்கள்.
பாரம்பரிய உணவகம்
பெரம்பலூரின் பாரம்பரியமான சிறுதானிய உணவு வகைகளை வழங்கிய ‘அருந்தானிய உணவகம்’ மட்டுமே புத்தகத் திருவிழாவில் அனுமதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்த இல்லத்தரசிகள் சிறுதானியப் பலகாரங்களை ருசி பார்த்தோடு ‘இதுதான் உங்களோட தாத்தா பாட்டி சாப்பிட்டது’ என்று குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்தனர்.
பின்தங்கிய பெரம்பலூர் போன்ற பகுதிகளில் வளரும் பெண் குழந்தைகள், தங்கள் வழியில் ஓடிக் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கான அறிவுப் புகட்டலை நடந்து முடிந்த புத்தகத் திருவிழா குறிப்பிடத்தக்க அளவு செய்திருப்பது கைதட்டி வரவேற்க வேண்டிய ஒரு மாற்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT