Last Updated : 01 Feb, 2015 02:48 PM

 

Published : 01 Feb 2015 02:48 PM
Last Updated : 01 Feb 2015 02:48 PM

முகங்கள்: யாதுமாகி நிற்கும் நடனம் - வாணி கணபதி

நாட்டியக் கலைஞர் வாணி கணபதிக்கு அறிமுகம் தேவையில்லை. நடனத்துக்கும், வாணிக்குமான உறவு மிக நீண்டது. ஆழமானது. நடனமே அவரது வாழ்க்கைமுறை என்பது அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. நான்கு வயதில் தொடங்கிய அவரது நாட்டியப் பயணம், இன்றும் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.

வாணியும் நடனமும்

கலை எப்போதும் பன்முகத்தன்மை கொண்டது. அது தனக்குள் அழகியல், படைப்பாற்றல், அன்பு, வலிமை, மகிழ்ச்சி, சோகம், கோபம் என எல்லாவற்றையும் வைத்திருக்கிறது. கலை தன்னுள் வைத்திருக்கும் எல்லா அம்சங்களும் அதைப் பிரதிபலிக்கும் கலைஞர்களிடம் கடத்தப்படுவது இயல்பானதுதான். அப்படித்தான் நடனக்கலையின் எல்லா அம்சங்களையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார் வாணி கணபதி. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடனக்கலையில் தன் இருப்பைப் பதிவு செய்துவருகிறார் வாணி.

நடனம் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்திருக்கிறது என்று சொல்லும் வாணி, “ சமூகத்தில் எனக்கான அடையாளத்தை என் பதின்பருவத்திலேயே நடனம்தான் ஏற்படுத்தியது. என் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் நடனம்தான் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. திருமணத்தை விட்டு வெளியேறியதும் எனக்குத் தெரிந்த வாழ்க்கைப் பணியாக நடனம் மட்டுமே இருந்தது. அதற்குப்பிறகு, எனக்குத் தாயாக, தோழியாக, காதலனாக, கடவுளாக என யாதுமாகி நிற்கிறது நடனம். என் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் முன்னேறிச் செல்வதற்கான உணர்வு சார்ந்த பலத்தையும், பாஸிட்டிவ் அணுகுமுறையையும் நடனம்தான் அளித்தது” என்கிறார்.

கற்பித்தலும் கற்றலும்

வாணி கணபதி பெங்களூருவில் ‘சஞ்சாரி’ என்னும் நடனப்பள்ளியை இருபது ஆண்டுகளாக நடத்திவருகிறார். ஆரம்பத்தில், நாட்டியத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற எந்த உந்துதலும் இல்லாமல்தான் இருந்திருக்கிறார் வாணி. அவருடைய குரு கல்யாண சுந்தரம்தான் அவரை உற்சாகப்படுத்தி நடனப் பள்ளியைத் தொடங்கவைத்திருக்கிறார். “ஆசிரியராக இருப்பதற்கு ஒரு மனநிலை தேவைப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன் அந்த மனநிலை எனக்குச் சுத்தமாக இல்லை. ஆனால், இந்த இருபது ஆண்டுகளில், ஓர் ஆசிரியராக என் மாணவர்களிடம் நிறைய பொறுமையைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்படி வேண்டுமானால் சொல்லாம். நான் என் மாணவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்தேன். அவர்கள் எனக்கு ஒரு நல்ல ஆசிரியராக இருக்கக் கற்றுக்கொடுத்தார்கள் “ என்று தன் ஆசிரியர் அனுபவத்தை உற்சாகமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் வாணி.

அழகியலும் வடிவமைப்பும்

அழகியல் மற்றும் படைப்பாற்றலில் இவருக்கு இருக்கும் ஆர்வம், வீடுகளின் உள்அலங்கார வடிவமைப்பு வரை நீள்கிறது. இதையும் தன் நடனக்கலையின் ஒரு நீட்சியாகப் பார்க்கிறார் வாணி. “என் வீட்டில் நான் செய்திருந்த உள் அலங்கார வடிவமைப்பைப் பார்த்த என் தோழி வெகுவாகப் பாராட்டினார். அவரது புதிய வீட்டின் வடிவமைப்பை என்னைச் செய்யச் சொன்னார். அப்படித் தொடங்கியதுதான் என் வடிவமைப்பாளர் ஆர்வம்” என்கிறார் வாணி. இதுவரை பதினான்கு நவீன வீடுகளுக்கான உள் அலங்கார வடிவமைப்பை இவர் செய்திருக்கிறார்.

இன்றைய நடனமும் கலைஞர்களும்

சமகால நடனம் என்பது இப்போது பல மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது. அது தனக்குள் எல்லா நடனங்களையும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடையதாக இருக்கிறது. “இப்போது நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் நடன நிகழ்ச்சிகள் பிரபலமாக இருக்கின்றன. ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் பரதநாட்டியத்தைக் கொலை செய்வதுபோல் இடம்பெறும் சில நடனங்களைத் தவிர்க்கலாம். சமகால நடனத்துடன் பரதத்தை இணைப்பது நல்ல விஷயம். அதைச் சரியாகச் செய்தால் நன்றாக இருக்கும்” என்கிறார் வாணி.

நடனக் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அளவுக்கு இல்லை என்று சொல்லும் வாணி, “அப்போது எல்லா நிகழ்வுகளிலும் கட்டாயமாக நாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெறும். இன்று அது குறைந்திருக்கிறது என்பது உண்மை. நாட்டியக் கலைஞர்கள் தனி நிகழ்ச்சிகளில் மட்டும் ஆடாமல் குழுவில் ஆடுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். நடனக்கலையின் மீதிருக்கும் தங்கள் பேரார்வத்தை மட்டும் எப்போதும் குறைய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

பெண்களும் சமூகமும்

பி.பேக் என்னும் பெங்களூரு அரசியல் செயல்பாடு குழுவில் (Bengaluru Political Action Committe) உறுப்பினராக இருக்கும் வாணி, சமூகம் சார்ந்த செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெங்களூரில் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து பி.பேக் சார்பாகப் பள்ளிகளில் நடந்த விவாதங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். அத்துடன், பெங்களூரு இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு திட்டத்திலும் இவர் உறுப்பினராகச் செயல்படுகிறார். “தங்களது உரிமைகளுக்காகப் பெண்கள் இப்போது வலிமையுடன் போராடுகிறார்கள். எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால், அதே சமயம் பெண்களுக்கு எதிரான ஆண்களின் மனநிலையும், கொடுமைகளும் அதிகரித்தி ருக்கின்றன. இந்த இருவேறு சமூக நிலைகளும் விவாதத்திற்குரியவை” என்கிறார் வாணி.

துவாரம் நிகழ்ச்சி

கதவுகளைப் பிரதானமாகக் கொண்டு வாணி கணபதியும், சத்தியநாராயண ராஜூவும் பங்குபெறும் ‘துவாரம்’ என்னும் இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னை நாரதகான சபாவில் பிப்ரவரி 6-ம் தேதி நடக்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x