Published : 04 Jan 2015 02:16 PM
Last Updated : 04 Jan 2015 02:16 PM
பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றிய செய்திகள் இடம்பெறாத நாளிதழ்களே இல்லையெனும் அந்தளவுக்கு பெண்கள் மீதான வன்முறையின் சதவீதம் அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான இந்தச் சூழலை மையமாக வைத்து சென்னை லலித் கலா அகாடமியில் ‘கான்ட்ராஸ்ட்’ என்ற தலைப்பில் ஓவியர்கள் கேத்னா கான்ட்ராக்டரும், சக்தி ரானே பாட்டர்ஜியும் ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார்கள்.
இந்தக் கண்காட்சியில் கேத்னா, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும், சக்தி நல்லொழுக்கங்கள் மற்றும் இயற்கையை குறித்த ஓவியங்களையும் சிற்பங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் டெரகோட்டா, டெக்ஸ்டைல், கற்கள், காகிதம், செராமிக் போன்ற பொருட்களில் உருவாக்கியிருந்தனர். “பெண்குழந்தைகளின் பாதுகாப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கேள்விக்குள்ளாகி யிருக்கிறது. நம் நாட்டில் நிலவும் இந்தச் சூழல் என்னை மிகவும் பாதித்தது. அந்த பாதிப்பின் வெளிப்பாடுதான் இந்த ‘சேவ் கேர்ள் சைல்டு’ (Save Girl Child) கண்காட்சி” என்கிறார் கேத்னா கான்ட்ராக்டர்.
டெரகோட்டாவில் இவர் காட்சிப்படுத்தியிருக்கும் ஒரு சிற்பம், படாவுன் (Badaun) பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமிகளை நினைவுப்படுத்துவதாக இருந்தது. அத்துடன் குழந்தைத் திருமணம், சமூகம் ஒரு பெண்ணின் மீது ஏற்படுத்தும் தாக்கம், ஒரு தாய் தன் பெண்ணுக்குச் சொல்லும் செய்தி, பெண் குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பட்டன் ஆடை என இவரது ஓவியங்கள் ஆழமானதான இருக்கின்றன.
நல்லொழுக்கங்கள் என்ற தலைப்பில் சக்தியின் ஓவியங்கள் தீமையின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம்பெற்று நன்மை வெளிப்படுவதாக அமைந்திருக்கின்றன. “இயற்கையோடும் உலகத்தோடும் எனக்கிருக்கும் தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் அமைத்திருக்கிறேன். இரண்டு தலைப்புக்கும் இருக்கும் வேறுபாட்டை பிரதிபலிக்கும் வகையில் ‘கான்ட்ராஸ்ட்’ என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறோம்” என்கிறார். இவர் செய்திருக்கும் செராமிக் சிற்பங்கள் இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்துகின்றன.
கேத்னா கான்ட்ராக்டர், சக்தி ரானே பாட்டர்ஜி இருவரும் பிஎஃப்ஏவும், அஹமதாபாத் என்ஐடியில் முதுகலையும் படித்திருக்கின்றனர். இதற்கு முன்னர் மும்பையிலும், டெல்லியிலும் ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT