Published : 04 Jan 2015 02:05 PM
Last Updated : 04 Jan 2015 02:05 PM
திருச்சி சீனிவாச நகரில் ‘கோமதி டீச்சர் வீடு எங்கே?’ என்று கேட்டதுமே, பள்ளிக் குழந்தைகள் உற்சாகமாக வழிகாட்டுகிறார்கள். பேர் சொன்னதுமே அடையாளம் தெரிகிற அளவுக்கு அந்தப் பகுதி மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார் கோமதி டீச்சர். இது 11 வருட சேவைக்குக் கிடைத்த பலன்.
அந்த நகரின் 3-வது தெருவில் இருக்கும் ஒரு தெருவிளக்குக் கம்பத்தின் கீழே மாணவர்கள் அமர்ந்திருக்க, கோமதி அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். தன் குடும்ப வருமானத்தை உயர்த்தப் பகுதி நேரமாக அவர் இதைச் செய்யவில்லை. வறுமையின் வாயிலில் இருந்துகொண்டு கல்வி மூலம் வழி கண்டடையத் துடிக்கும் மாணவர்களைத் தேடிப்பிடித்து, மாலை நேரங்களில் பாடம் சொல்லித் தருகிறார். தான் செய்கிற வேலைக்கு ஊதியம் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை.
வணிகவியலில் பட்டம் பெற்ற கோமதி, திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் கணக்காளராக வேலை பார்க்கிறார். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆசிரியர் கனவுடன் இருந்த கோமதிக்கு, குடும்பச் சூழ்நிலை காரணமாக பி.எட்., படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. திருச்சியில் செயல்படும் சமூகப் பல்நோக்கு சமூகப் பணி மையத்தினர், கோமதியை அணுகினர். அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் அரியமங்கலம் சீனிவாச நகர் பகுதியில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முயலும் மாணவர்களை அடையாளம்கண்டு மாலைநேர வகுப்பு எடுத்து, தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடிக்க உதவி செய்ய வேண்டும் என கோமதியிடம் கேட்டனர்.
ஆசிரியர் கனவுடன் இருந்த கோமதிக்கு இந்த வாய்ப்பு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடனே செயல்படத் தொடங்கினார். சீனிவாச நகர் குடியிருப்பில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியரை கணக்கெடுத்து அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி, தினமும் மாலையில் தான் நடத்தும் டியூஷனுக்கு அனுப்பிவைக்கச் சொல்லிக் கேட்டார். 2003-ம் ஆண்டு முதல் இவரது டியூஷன் செயல்படத் தொடங்கியது.
ஆரம்பித்த புதிதில் வர மறுத்த பலர் கோமதியின் தொடர் முயற்சியால் பகலில் பள்ளிக்கும், மாலையில் டியூஷனுக்கும் வந்தனர். இடம் உள்படப் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவிலும் இவரது டியூஷன் சேவை தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடந்துவருகிறது.
எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகள் 6 மணிக்கு வருகின்றனர். அவர்கள் சென்றவுடன் 7 மணிக்கு மேல் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 9 மணி வரை பாடம் நடத்துகிறார். இரண்டு பிரிவாக நடக்கும் டியூஷனில் 60-க்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு நடைபெறும்போது காலை 6 மணியில் இருந்து 8 மணி வரை சிறப்பு வகுப்பும் எடுக்கிறார்.
“நான் இதே பகுதியில் தெருவிளக்கின் ஒளியில் படித்து பட்டம் பெற்றேன்” என்று சொல்லும் கோமதி, கல்லூரியில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கிய பின் நூலகருக்கான எம்.எல்.ஐ.எஸ்சி., எம்.ஃபில்., முடித்தார்.
ரைஸ்மில், மார்க்கெட் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் வாழும் பகுதி, சீனிவாச நகர். பள்ளி சென்றுவரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி பெற்றோர் அறிவுறுத்துவதில்லை. பணம் செலவழித்துத் தனியார் டியூஷனில் படிக்க வைக்கும் நிலையிலும் இல்லை. இதனாலேயே சரியாகப் படிக்க முடியாத பெரும்பாலான மாணவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
கோமதி இங்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்த பின் கடந்த 10 ஆண்டுகளில் ஒருவர்கூட படிப்பைப் பாதியில் நிறுத்த வில்லை. இவரிடம் டியூஷன் படித்த மாண வர்கள் பொறியியல், செவிலியர், டிப்ளமோ, பட்டப் படிப்பு ஆகியவற்றைப் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 பேர் 400-க்கு அதிகமாகவும், 15 பேர் 300-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளதைப் பெருமையாகச் சொல்கிறார் கோமதி.
திண்ணைப் பாடம்
முதலில் சீனிவாச நகர் 4-வது தெருவில் ஆரம்பித்த டியூஷன், அடுத்த ஆண்டு 5-வது தெரு, அப்புறம் 6-வது தெரு, பிறகு 2-வது தெரு என இடம் மாறி, தற்போது 3-வது தெருவில் செயல்பட்டு வருகிறது. தெருத்தெருவாக டியூஷனை மாற்ற இடப்பற்றாக்குறைதான் காரணம்.
“ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையால் போதிய இடவசதியின்றி சிறிய தெருவில் இருந்து கொஞ்சம் பெரிய தெருவுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மழைக்காலம் என்றால் அதிகம் அவதிப்படுவோம்” என்று கோமதி சொல்லும்போதே மழை தூறியது. உடனே மாணவர்கள் எதிரில் இருந்த இரண்டு வீடுகளின் வராண்டாவில் தஞ்சம் புகுந்தனர். வாசற்படியில் அமரும் கோமதி, அவர்களுக்குப் பாடம் சொல்லித்தருகிறார். அடைமழையிலும் அணையாமல் சுடர்விடுகிறது கல்வி விளக்கு!
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT