Last Updated : 25 Jan, 2015 12:28 PM

 

Published : 25 Jan 2015 12:28 PM
Last Updated : 25 Jan 2015 12:28 PM

தேசிய பெண் குழந்தை தினம்: ஜனவரி 24 - குழந்தைத் திருமணங்களால் சிதையும் எதிர்காலம்:

‘உலகம் முழுவதும் நடக்கும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படும் சிறுமிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள்’ என்கிறது யுனிசெஃப் நிறுவனம்(ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்). குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படாவிட்டால், 2050-க்குள் நூறு கோடி சிறுமிகள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது அந்த நிறுவனம்.

2009-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜனவரி 24-ம் தேதி, தேசிய பெண் குழந்தை தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு இந்தியத் தொழிற் கூட்டமைப்பும்(CII), யுனிசெஃப் நிறுவனமும் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து வளரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெண்களும், பெண் குழந்தைகளும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். தாண்டவன், பெண் கல்வி துறைத் தலைவர் பாரதி ஹரிசங்கர், சிஐஐ-சிஎஸ்ஆர் தலைவர் ராணி முரளிதரன், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜி. பழனிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குழந்தைத் திருமணங்கள்

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது என்று யுனிசெஃப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சமூக, பொருளாதாரக் காரணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தமிழகப் பெண்கள் அடைந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கிருஷ்ணகிரி இதில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 சதவீதப் பெண்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன்னால் திருமணம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கிறது யுனிசெஃப்பின் அறிக்கை.

நவீன பிரச்சினைகள்

குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் நவீன காலத்திற்கேற்ற நவீன பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர். “சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கியிருக்கும் வளரிளம் பெண்கள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும்போது அவர்களை அடையாளம் கண்டு உதவுவது சமூக அமைப்புகளுக்கு ஓரளவு எளிதாக இருக்கிறது. ஆனால், சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேறிய வளரிளம் பெண்கள் இதே பிரச்சினையால் பாதிக்கப்படும்போது அவர்களை அடையாளம் காணுவது எளிதானதாக இல்லை” என்று சொல்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ரீட்டா ஜான்.

தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நடக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 25.5 சதவீதம் என்றால், நகரங்களில் அது 21.4 சதவீதமாக இருக்கிறது. கிராமங்களுக்கு இணையாக நகரங்களில் சமூக, பொருளாதாரத்தில் முன்னேறிய சூழலில் வசிக்கும் வளரிளம் பெண்களும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர். “நகரங்களில் சிறுவயது திருமணத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான தளம் இன்னும் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. கல்வி, தொழில்நுட்பம், சுதந்திரம் என நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு வசதிகள் இருந்தாலும் இந்தப் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஒரு தளத்தை விரைவில் உருவாக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ரீட்டா ஜான்.

சர்வதேச பார்வை

குழந்தைத் திருமணத்தால் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவது உலகளவிலும் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருக்கிறது. “இந்தியாவில் 27 சதவீத பெண்களுக்குப் பதினைந்து வயதுக்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்தப் பெண்கள் குடும்ப வன்முறை, குழந்தைப் பேறு சிக்கல், பிரசவகால மரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சமீபத்தில், தருமபுரியில் நிகழ்ந்த சிசு மரணங் களுக்கு இந்தச் சிறுவயதுத் திருமண மும் ஒரு முக்கிய காரணம்” என்று சொல்கிறார் தமிழகக் குழந்தைகள் உரிமை ஆய்வகத்தின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ சேசுராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x