Last Updated : 18 Jan, 2015 03:49 PM

 

Published : 18 Jan 2015 03:49 PM
Last Updated : 18 Jan 2015 03:49 PM

எல்லா இடங்களிலும் நிலவும் பேதம்

அது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தலைமைப் பயிற்சி முகாம். 80 பேரில் 30 சிறுமியரும், 50 சிறுவர்களும் இருந்தனர். முகாமில் குழு நடவடிக்கைக்காக 10 பேர் கொண்ட எட்டுக் குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர். எல்லாக் குழுவிலும் சிறுவரும் சிறுமியரும் கலந்து இருந்தனர்.

குழு உறுப்பினர்கள் அவர்களாகத் தங்கள் குழுவின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழுவின் தலைவர் குழுவுக்குத் தரப்படும் தலைப்பில், அனைவரையும் கருத்துகளைப் பகிரச் செய்து அதைத் தொகுத்தளிக்க வேண்டும். அந்தந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை, (வரைதல், படங்களை ஒட்டுதல்) உறுப்பினர்களை வைத்து ஒருங்கிணைத்து முடித்துத்தர வேண்டும்.

முகாமை ஒருங்கிணைத்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். “எத்தனை சிறுமியர் குழுத் தலைவராகப் பணியாற்றினர்” என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சற்றே யோசித்து விட்டு, “சிறுமியர் ஒருவரும் இல்லை. எல்லாக் குழுவிலும் சிறுவர்கள்தான் குழுத்தலைவராகப் பணியாற்றினர்” என்றார். 30 சிறுமியர் உள்ள ஒரு இடத்தில், ஒருவர்கூட தலைமைப் பொறுப்பில் செயலாற்றவில்லை என்பது ஏற்புடையதல்ல. இது வெறுமனே ஒரு பள்ளிக் குழந்தைகளின் முகாமில் நடந்ததுதானே என்று கடந்துவிட முடியாது. இதன் பின்னே இருக்கும் உளவியல் மற்றும் சமூகக் காரணிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

போற்றி வளர்க்கப்படும் பேதம்

ஆண், பெண் பேதம் என்பது உயிரியல் ரீதியானது மட்டுமல்ல, உணர்வுகளோடு பின்னப்பட்டது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஆணுக்கென்றும், பெண்ணுக்கென்றும் பிரத்யேகமான அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆணின் தைரியமும், சாகசமும் பாராட்டப்படும்போது, ஆண்மையின் ஆதிக்க உணர்வு வளர்க்கப்படுகிறது. பெண்ணின் பொறுமையும், வீட்டு வேலைகளை ஏற்கும் பொறுப்பும் நல்ல மனைவிக்கான, மருமகளுக்கான குணநலங்களை வரித்தெடுப்பதும்தான் பெண்மையின் தன்மையாக உருவாக்கப்படுகிறது.

சமூகத்தில் தான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் குழந்தை தன் பெற்றோரிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறது. சாதி, மதம், மொழி, இனம் போன்றவையும் இந்தக் கருத்தாக்கத்தின் மேல் தங்களின் தாக்கத்தைச் செலுத்துகின்றன. ஆடை அணிதலில் தொடங்கி, பழக்க வழக்கங்கள், விளையாட்டுகள், சிறு சிறு வேலைகள் என உயிரியல் ரீதியான அடையாளத்தை வைத்து, அதன் அடிப்படையில் சமூக அடையாளங்களை உருவாக்குகிறது. சமூக விழுமியங்கள் பல்வேறு நடைமுறைகள் மூலமாக ஆண், பெண் பேதத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆண்மை, பெண்மை என்பது சமூகம் உருவாக்கிய கருத்தாக்கமே!

பின்தொடரத்தான் பெண்ணா?

குழந்தைகள் வளரும்போதே, தங்கள் மீது திணிக்கப்பட்ட கருத்தாக்கங்களின் வழியேதான், தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பார்க்கிறார்கள். ஆண் வழிநடத்துபவனாகவும், பெண் அவனைப் பின்தொடர்கிறவளாகவும் காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவர்கள் மனதில் பதிந்து விட்டது.

அதனால்தான், சக மாணவர்களாக இருப்பவர்களிடையே, தலைமைப் பொறுப்பு என்று வரும்போது, ஆசிரியரின் தலையீடு இன்றி, அவர்களாக விவாதித்து, தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்களாகவே இருந்துள்ளனர். இருபாலர் பயிலும் பள்ளியில் முதலிடம் பெறுவது, போட்டிகளில் பங்கேற்பது ஆகியவற்றில் பெண்கள் முன்னணிப் பாத்திரம் வகித்தாலும், சமூகத்தில் நிலவும் பாரபட்சம் அங்கேயும் நிலவுவதைத் தவிர்க்க முடியவில்லை.

புதிய இடங்களுக்குச் செல்லும்போது, பொதுவாக யாரும் பெண்களிடம் வழி கேட்பதில்லை. ஆண்களிடம்தான் கேட்பார்கள். பெண்களுக்கு வீடு, சமையலைத் தவிர வேறு பொது விஷயங்கள் அவ்வளவாகத் தெரியாது என்பது நம் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்ததன் விளைவுதான் இது. எந்தத் துறையில் பெண்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டாலும், அவர்கள் பெண்களாகத்தான் பார்க்கப்படு கிறார்களே தவிர, நிபுணர்களாக அல்ல.

சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்தபோது, அவரைக் குறித்த செய்திகள் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்துவிட்டார் என்றே வெளிவந்தன. கவிஞர்களையும்கூடப் பெண் கவிஞர்கள் என அடையாளப்படுத்துவதையும் பார்க்கிறோம். பெண் கவிஞர்கள் எதைப் பற்றி எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்றெல்லாம் சமூகத்தின் பல தரப்பினரிடமிருந்து, அறிவுரைகள் வந்த வண்ணம் உள்ளன.

காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்ட விதத்தில் இயற்கை, தாய்மை என்பது குறித்து எழுதினால் பிரச்னை இல்லை. மரபு என்று கட்டமைக்கப்பட்டதற்கு மாறாகப் படைப்புகளைக் கொடுத்தால், ஒரு பெண் இப்படி எழுதலாமா? இப்படிக் கருத்து சொல்லலாமா என்று கலாச்சாரக் காவலர்கள் பொங்கி எழுகின்றனர். படைப்பாளிகளை பாலினச் சிமிழுக்குள் அடைப்பது ஆணாதிக்கச் சிந்தனையேயன்றி வேறென்ன?

பலவிதமான தடைகளை மீறி, இன்று பல பெண்கள் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்கள். அவர்களது நடவடிக்கைகள், பெண்களின் நடவடிக்கைகளாகவே மதிப்பீடு செய்யப்படு கின்றன. ஐ.டி துறையிலும், புதிய புதிய திட்டங்களுக்கான குழுக் கள் அமைக்கப்படும் போது, குழுவின் தலைவருக்கான தகுதியுடைய பெண்கள் இருந்தாலும்கூட, அது பல நேரங்களில் உப்பு சப்பில்லாத காரணங்களால் நிராகரிக்கப்பட்டு, ஆண்களுக்குத் தலைமைப் பொறுப்பு தரப்படுவது இயல்பாக நடக்கிறது. பெண்ணின் தலைமை, குழு உறுப்பினரான ஆண்களின் செயல்பாட்டுக்கும், ஒருங்கிணைப்புக்கும் பங்கம் விளைவிக்கும் என்கிற தவறான கருத்தின் வெளிப்பாடுதான் அது.

மாறுவது எப்போது?

பள்ளி மாணவர்களிடம் ஒருமுறை டாக்டர், நர்ஸ், ஆகியோரின் படங்களை வரையுமாறு சொல்லப் பட்டது. அனைவரும் வரைந்தது ஒரு ஆண் டாக்டர், ஒரு பெண் நர்ஸ் படங்களைத்தான். எத்தனையோ பெண் மருத்துவர்கள் இன்று வெற்றிகரமாக சமூகத்தில் செயலாற்றி வந்தாலும், மருத்துவர் என்கிற நிபுணத்துவம் வாய்ந்த நிலைக்கு, பெண்ணைப் பொருத்திப் பார்க்க அந்தக் குழந்தை பயிற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை.

மாற்றங்கள் தொடங்கப்பட வேண்டியது பாடத் திட்டங்களில்தான். பாலின சமத்துவ நோக்கோடு அவை வடிவமைக்கப்படுவதும், ஆசிரியர்கள் பாலினச் சமத்துவம் குறித்த பயிற்சியோடும் இருந்தால்தான் மாணவர்களிடம் பாலினச் சமத்துவம் குறித்த புரிதல் சரியாக இருக்கும். அதுதான் அவர்கள் வாழ்க்கையிலும் வெளிப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x