Published : 15 Dec 2014 05:08 PM
Last Updated : 15 Dec 2014 05:08 PM
விடுதலைப் புலிகள் குறித்து நடிகை குஷ்புவின் கருத்துக்கு எதிர்வினையாகப் பலர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கேள்வியெழுப்பியதை டிசம்பர் 07-ம் தேதியிட்ட ‘பெண் இன்று’ இணைப்பில் வெளியிட்டிருந்தோம். அதற்கு வாசகர்களிடம் இருந்து வந்து குவிந்த கடிதங்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு...
எந்த ஒரு செயலுக்கும், கருத்துக்கும், இயக்கத்துக்கும் மாற்றுக் கருத்து உடையவர்கள் இருப்பது இயல்பானது. குஷ்புவின் கருத்துக்கான எதிர்வினையும் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரது அரசியல் பிறழ் நிலையையோ வரலாற்றறிவின்மையையோ அடிப்படையாகக் கொண்டே, எதிர்வினைகள் அமைந்திருக்க வேண்டும். அதை விடுத்து அவரது தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கநிலைகளைக் கேள்விக்குறியாக்குவது நல்லதல்ல. பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களின் பால் ஒழுக்கத்தைக் கேலி செய்கிறவர்கள், அவர்களது கருத்துக்கு அறிவு சார்ந்த பதில் சொல்லத் திராணியற்ற நபர்களாகவே கருதப்பட வேண்டும்.
- பாப்பாக்குடி இரா. செல்வமணி, திருநெல்வேலி.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவெளியில் கருத்துகளைச் சொல்ல உரிமையுடையவர்களே. இரு பாலாரையும் சரிசமமான கண்ணோட்டத்தில் அணுகுவதே ஆரோக்கியமானது. நடிகை குஷ்புவின் கருத்துக்கு எதிர்வினையாற்றுவதில் நாகரிகம் தேவை.
- கு. இரவிச்சந்திரன், ஈரோடு-2.
குஷ்பு ஒரு கட்சியின் பிரதிநிதி, நடிகை என்பதையெல்லாம் தாண்டி அவர் ஒரு குடும்பத்தலைவி. அவர் கொள்கைகளை விமர்சனம் செய்யலாம். அவர் குணத்தை விமர்சனம் செய்வது எப்படிச் சரியாகும்? பெண்களை இழிவுபடுத்துவதும், அதிகாரத்தை அவர்கள் மீது பிரயோகிப்பதும் ஆண் வர்க்கத்துக்கு அவமானமே தவிர வீரச்செயலோ, துணிவான செயலோ அல்ல.
- முத்து ஆனந்த், வேலூர்.
ஆண்கள் மாற்றுக் கருத்து தெரிவிக்கும்போது அவர்களுடைய நடத்தையைப் பற்றி விமர்சிக்காத நாம், அதே இடத்தில் ஒரு பெண் இருந்தால் அவரது ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம்?பாதுகாப்பின்மையாலும் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு வலுவின்மை யாலும்தான் நம் நாட்டில் பல பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். குஷ்பு ஒரு நடிகை என்பதால் இந்த விஷயம் வெளியே தெரிகிறது, அவ்வளவுதான்.
- எஸ். பிரேமலதா,
தருவைகுளம், தூத்துக்குடி.
பெண்ணை அடக்கி ஆளுமை செய்து பழகிப் போன சமுதாயம், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பெண்ணின் நடத்தை மீது வசைபாடுவதுதான் இப்போதும் நடந்திருக்கிறது. இப்படிப் பெண் களைத் தூற்றிப் பேரு வகை கொள்ளும் அத்தனை ஆண்களும் உத்தமர்கள்தானா?
- லலிதா சண்முகம், துறையூர், திருச்சி.
படைப்பில் பெண் பலவீனமானவள் என்று கருதுவதால்தான் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த பெண்களை மட்டும் கேவலமாக விமர்சிக்கிறார்கள். ஒரு நடிகையின் ஒழுக்கத்தைக் கேவலப்படுத்துவதில் அங்கே ஓர் ஆண் மறைக்கப்பட்டிருக்கிறான் என்பது அனைவரும் உணரக்கூடிய உண்மைதானே.
- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.
நடிகை குஷ்பு, தான் பேசியது தவறு என்று நினைக்கும்படி எதிர்வினையாற்ற வேண்டுமே தவிர, அவர் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்தியும் சமூக வலைத்தளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சிப்பதும் தவறு. ஒரு நடிகர் இப்படிப் பேசியிருந்தால் அவர் ஒழுக்கத்தை இப்படி விமர்சிக்கும் தைரியம் உண்டா?
- எஸ். மங்கையர்க்கரசி, நெய்வேலி.
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசுகிற இந்த நாட்டில்தான் ஒரு பெண் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால், அவளது தனிப்பட்ட வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். அரசியலை நாகரிகமாக நடத்துவது நல்லது. சேற்றில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது.
- ஜே.சி. ஜெரினாகாந்த்,
சென்னை-16.
நடிகை குஷ்புவின் குரலை ஒடுக்க வேண்டுமென நினைத்தாலும் அதற்கான தளத்திலேயே அதை எதிர்கொள்ள வேண்டும். மாறாக, வெறி பிடித்தவர்கள்போல் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக ஆபாசப் படங்களைக் களமிறக்கியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ், தமிழ்ச் சமூகம், தமிழ்நாடு எனக் கொள்கை முழக்கமிடும் நாம் முதலில் நம் மரபின் தொடக்கத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். தாய்வழிச் சமூகமே நமது ஆதிச் சமூகம். பெண்கள் எந்தக் கருத்தைச் சொன்னாலும் உடனே அவர்களின் கற்பு நோக்கி அம்புகளைத் தொடுத்துக் காயப்படுத்த முனையும் கோழைத்தனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.
பெரும்பாலான ஆண்களால் பெண்களின் துணிவை, முன்னேற்றத்தை, சாதுர்யத்தைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அவளின் துணிவை அடித்து நொறுக்கும் மிக பலமான ஆயுதம் நடத்தை சார்ந்த அவதூறுகள் மட்டுமே. இதற்குப் பெரும்பாலான பெண்கள் பலியாகி விடுகின்றனர். ஒரு பெண்ணின் சமுக உணர்வு, அவதூறு பேச்சுகளால் வெளி வராமலேயே நசுக்கப்படுகிறது.
- முனைவர் சுகிர்தா, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
ஒரு ஆண் தவறு செய்தால் அது மன்னிக்கப்படும், மறக்கப்படும், புறக்கணிக்கப்படும். ஆனால் பெண்ணுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு. எத்தனை காலமாக இருந்தாலும் அவளது செயலைச் சுட்டிக் காட்டி மட்டம் தட்டிக்கொண்டேதான் இருக்கும் இந்தச் சமூகம். என் தோழி ஒருத்தி கல்லூரி முடித்து, உடனே வேலையில் சேர்ந்து, ஒரு வருடத்திலேயே பதவி உயர்வு பெற்றாள். அதற்கு அவளின் நிறமும் நடத்தைப் பிறழ்வுமே துணை நின்றன என்று அவள் காதுபடவே பலர் பேசினார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்தச் சமூகம் மாறப்போவதில்லை.
- உஷாமுத்துராமன், திருநகர்.
நம் நாட்டில் தட்டிக் கொடுக்கப்பட்டு வளர்ந்த பெண்களைவிட மட்டம் தட்டப்பட்டு வளர்ந்த பெண்களே அதிகம். பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கினால் அவர்கள் வளைந்து கேள்விக்குறியாகவே நின்று விடுவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்கான மூலகாரணம். இன்று ஒரு பெண் வெற்றி பெற்றுவிட்டால் அவள் பல்வேறு அவமானங்களையும் வலிகளையும் தாங்கித்தான் சாதித்திருக்கிறாள் என்பதைச் சமுதாயம் உணரத் தொடங்கிவிட்டது.
- ஜே. லூர்து, மதுரை.
அரசியல் பக்குவம் இல்லாமல் கருத்துகளைத் தெரிவிப்பதனால் தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் நடத்துவதைப் பெண் என்ற முறையில் எதிர்க்கிறேன். ஆனால், குஷ்புவின் அரசியல் நிலைப்பாடு ஒழுங்கீனமானது.
- மெய்யப்பன் சாந்தா, மதுரை.
பொது வாழ்வில் ஈடுபடும் ஆணோ, பெண்ணோ அவர்களின் சமுதாயப் பங்களிப்பைத்தான் பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் படுக்கையறை ஜன்னலை எட்டிப் பார்க்கக் கூடாது. அந்த வகையில் நடிகை குஷ்புவின்
மீது தொடுக்கப்படும் வார்த்தைக் கணைகள் கடும் கண்டனத்துக்குரியவை. ஜனநாயக நாட்டில், தான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் கொள்கைக்கும் ஏற்ற வகையில் தன்னுடைய கருத்துக்களைச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. குஷ்புவை ஒரு பெண் என்று கருதாமல் நடிகை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது நல்லதல்ல.
- மு.க. இப்ராஹிம், வேம்பார், தூத்துக்குடி.
அத்திப் பழத்தைப் பிய்த்துப் பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பதைப்போல் ஒவ்வொருவருடைய அந்தரங்க வாழ்க்கையையும் உற்றுக் கவனிப்போமானால் அனைவரின் அந்தரங்கமும் அசிங்கமானதாகவே இருக்கும். இதனாலேயே நம் முன்னோர்கள் நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் பார்க்கக் கூடாது என்றார்கள். அரசியலில் ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த கருத்துகளை எடுத்து வைக்கும்போது, குஷ்புவும் தனது கருத்தை எடுத்து வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது ஈழப் பிரச்சினையாய் இருந்தாலும் சரி, இங்குள்ளவர்களின் பிரச்சினையாய் இருந்தாலும் சரி.சமூக வலைத்தளங்களில் தரம் தாழ்ந்த கருத்துகளைப் பதிவிடும் தரங்கெட்டவர்கள் அதிகரித்துவிட்டனர். இதில் குஷ்பு மட்டுமல்ல ஐந்து முறை தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதியும் தப்பவில்லை. இதில் தப்பியிருக்கும் ஒரே நபர் என்றால், அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. காரணம் அவர்மீது தவறான கருத்துத் தெரிவித்தால் தப்ப முடியாத அளவுக்கு நிச்சயம் நடவடிக்கை பாயும் என்பதே. எளியோரை எள்ளி நகையாடுவதும், வலியோரைக் கண்டால் வாலைச் சுருட்டிக் கொள்வதும் இப்படிப்பட்ட கருத்துக் கந்தசாமிகளின் வேலை. பெண்கள் என்றால் இவர்களுக்குக் கூடுதல் வசதி.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார், தூத்துக்குடி.
ஆண்கள் என்ன வேண்டுமானாலும் பேட்டி, அறிக்கை, கருத்து போன்றவற்றை அளிக்கலாம். அது அறிவுஜீவிகளின் கண்ணோட்டம். ஆனால், ஒரு பெண் தலைமைப் பதவிக்கு வந்தாலோ அல்லது எந்த ஒரு நாட்டு நடப்பைப் பற்றி விமர்சித்தாலோ அதைத் தாங்க முடியாது.
விபச்சார வழக்கில் இன்னும் அழகிகளை மட்டுமே கைது
செய்து ஊடகங்களில் அவமானம் செய்யும் சமூகம்தானே இது. அந்த அழகிகளுடன் சேர்ந்து குற்றம் செய்த அழகன்களின்(?) முகம் மட்டும் ஏனோ பத்திரிகைகளில் இடம்பெறுவது இல்லை.
எந்த ஒரு சண்டையிலும் ஒரு ஆணை இன்னொரு ஆண் வசைபாடும்போது உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அவனுடைய தாய், சகோதரி, மனைவி, மகளின் கற்பு நிலை குறித்த மோசமான, இழிவான வார்த்தைகளாகத்தான் இருக்கின்றன. அது குறித்து இந்த ஆண்கள் சமூகம் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை. எப்போதும் பெண்களின் அந்தரங்கத்தையே ஏன் இந்தச் சமூகம் நோட்டமிட்டுக்கொண்டு அலைகிறது?
சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்லும் ஆண்கள்(?) தைரியம் இருந்தால் பொது இடத்தில் அதேபோல் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்களா? முகம் காட்ட முடியாதென்ற தைரியம்தானே இப்படி அருவருப்பான வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி வீசச் செய்கிறது?
- தேஜஸ், காளப்பட்டி, கோவை.
மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பவர்கள் முதலில் தங்களைக் கொஞ்சம் பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அரசியல் ரீதியான நடிகை குஷ்புவின் கருத்துக்கு எதிர்மறையாகத் தனிப்பட்ட விஷயங்களில் பதிலளிப்பதால் அவர் கூறிய கருத்தை மறுத்துப் பேச தங்களிடம் விஷயம் இல்லை என்பதோடு அவர் பேசிய செய்தியும் உண்மைதான் என்றாகிவிடும் என்பதை எதிர்ப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- ம.சுந்தரேஸ்வரி, மதுரை.
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற வரலாற்று மொழி ஒரு பெண்ணைத்தான் சுற்றிவருகிறது. அப்படி ஒரு வேளை அந்தச் சொலவடைபெண்ணின் ஒழுக்கம் சார்ந்ததாக இருக்குமானால், ஒரு பெண்ணின் மீது குத்தப்படுகிற முத்திரைக்கு மறுபக்கத்தில் ஆண் சமூகமும் இருக்கிறது என்பதுதானே யதார்த்தம் ? அரசர்கள், ஆட்சி
பீடத்தில் இருப்போர், சமுதாயத்தின் மேன்மக்கள் போன்றோர் ஆண்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களின் ‘மறுபக்க'த்தைப் பற்றி எவரும் ஓசையுடன் பொதுவெளியில் பேசுவதில்லை . இந்தக் கூற்றுக்குச் சில விதிவிலக்குகள் இருக்கலாம் . ஆனால் ஒரு பெண் அவள் எந்த அரிதாரம் பூசிக்கொண்டு வலம் வந்தாலும், அவள் ஆண்களின் பார்வைக்கு இழிபொருளாக மாறிவிடுகிறாள். ஆண்களின் ஒழுக்க வாழ்வைப் பற்றி அக்கறை கொள்ளாத இந்தச் சமூகம் மாறுவதற்கு, ஆண் வகிக்கும் அத்துணை அரசியல், சமூக உயர் பதவிகளையும் பெண் சமூகம் அபகரித்துக்கொள்ளும் வகையில், அதன் விழுக்காடு அதிகரிக்க வேண்டும்.
- சந்திரா மனோகரன், ஈரோடு.
ஒரு அலுவலகத்தில் ஆண் முன்னேறினால் அவனுக்கு உடம்பெல்லாம் மூளை என்று பாராட்டிப் பேசுகிறவர்கள், ஒரு பெண் முன்னேறி வந்தால், அவளைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவார்கள். இது காலம் காலமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்போதுதான் இந்த அவலநிலை மாறுமோ?
- பிருந்தா ரமணி, மதுரை.
தவறு யார் செய்தாலும் தவறுதான். ஆணுக்கு ஒரு விதமாகவும் பெண்ணுக்கு ஒருவிதமாகவும் பழிச்சொற்கள், விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அது அறிவு சார்ந்தோ, கற்பு சார்ந்தோ இருக்கலாம். பொது வாழ்க்கை என்று வரும்போது இதைப் பற்றி கவலையே படக் கூடாது.
- வசந்தி, மதுரை.
மற்ற தொழில்களைப் போல் நடிப்பும் ஒரு தொழில். நடிப்புத் தொழிலில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த விதத்தில் நியாயம்? கற்பு என்பது நடிகைக்கு மட்டும்தானா? குஷ்பு அவர்கள் சொன்ன கருத்து தவறெனில், மாற்றுக் கருத்து சொல்ல வேண்டுமே தவிர பெண்ணை தரம் தாழ்த்திப் பேசுவது அகங்காரமே.
- கேசவ் பல்ராம், திருவள்ளூர்.
பொதுவெளியில் இயங்கும் பெண்களின் கருத்துகளைவிட அவர்களின் உடலும் உடல் சார்ந்த விஷயங்களை மட்டும் உற்றுப்பார்க்கும் நாகரிக ஞானிகள்தானே இங்கே உலவுகின்றனர். இந்த அதிகாரத்தை இவர்களுக்குக் கொடுத்தவர்கள் யார்? இது அவர்களின் மனவளர்ச்சியின்மையையே காட்டுகிறது.
- அகலின் நிழல், மும்பை, இணையதளம் வழியாக
விமர்சனம் செய்யும்போது ஆணை நிறுத்திப் பார்க்கும் இடத்தில் பெண்ணை இவர்கள் வைத்துப் பார்ப்பதில்லை. இருக்கவே இருக்கிறது பெண்ணைச் சாட நடத்தை என்னும் கூர் மழுங்கிய ஆயுதம். அதை வைத்து விளாசலாம் என்பது அறிவீனம் என்பதை உணர வேண்டும்.
- மனுஷி, ஹைதராபாத், இணையதளம் வழியாக
வசை பாடுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மிடம் சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டதா? இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உண்டு, அவரவர் கருத்தைத் சொல்ல உரிமையும் உண்டு.
- இப்ரஹீம், தோஹா,இணையதளம் வழியாக
பொது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதற்காக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டும் என்பது கிடையாதுதான். ஆனால், பொது வாழ்க்கையில் உள்ளவர் மற்றவர்க்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
- ராஜ்குமார், சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT