Published : 15 Dec 2014 05:08 PM
Last Updated : 15 Dec 2014 05:08 PM

வசந்த கால நதிகளிலே

நான் கல்லூரியில் எம் .ஏ . இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. எங்கள் வகுப்பில் மொத்தம் 24 மாணவியர். தேர்வு நெருங்கிவிட்டது. மாணவிகளாகிய எங்களையோ பிரிவுத் துயர் பெரிதும் ஆட்டிப்படைத்தது. படிப்பையே மறக்கடித்துவிட்டது என்றும் சொல்லலாம். ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிந்து அதில் நனைந்தோம். உடம்புக்கு முடியாமல் போனாலும் லீவு எடுக்காமல் கல்லூரிக்கு வந்தோம். ஒரே நிறத்தில் டிரஸ் அணிந்தோம். சொல்லிவைத்து ஒரே நாளில் சரம் சரமாய் மல்லிகைப்பூவைச் சூடினோம். ஒரே மாதிரி காலணி செய்ய ஆர்டர் கொடுத்தோம். சினிமாவுக்குப் போனோம். ஹோட்டலில் சாப்பிட்டோம். எங்கள் வகுப்பில் பல குரூப்புகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றானோம் . மொத்தத்தில் எங்கள் வகுப்பு கல்லூரிக்கே காட்சிப் பொருளானது.

இந்தச் சமயத்தில்தான் மாணவியரின் ஒட்டுமொத்த வாக்குகளையும் குவித்த எங்கள் அபிமானத்துக்குரிய பேராசிரியை ஒரு நாள் எங்களிடம் பேசினார்.

“அநேகமா நீங்க எல்லாருமே கல்யாணமாகி செட்டில் ஆகிடுவீங்க. உங்கள் எல்லோருக்கும் நல்ல திருமண வாழ்வு அமைய என்னோட வாழ்த்துகள் (திருமணம் என்றதும் நாங்கள் எல்லோரும் சந்தோஷமாகக் கைத்தட்டினோம்).

நீங்க எல்லாருமே கண்டிப்பா வேலைக்குப் போகணும்.

இதை ஒரு பிராமிஸாகவே நான் கேட்கிறேன். பெண்கள் கண்டிப்பா வேலைக்குப் போகணும். அது அவங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவங்களுக்கு வர்ற பிரச்சினைகளைச் சந்திக்கறத் தெம்பையும் கொடுக்கும். அதனால எல்லோரும் கண்டிப்பா வேலைக்குப் போங்க (சிறிது நேரம் மவுனத்தில் கழித்தார் ). உங்களைப் பிரியறதை என்னால தாங்க முடியல. கொஞ்ச நாள் என் கனவுல வருவீங்க. என்னால சாப்பிட முடியாது, சரியா தூங்க முடியாது. என்ன பண்ண ? இதுதானே வாழ்க்கை. நாம இதை ஏற்றுத்தானே ஆகணும்?”

- கண்களில் நீர் மல்க அவர் சொல்லி முடித்ததும் எங்கள் கண்களும் குளமானது. இறுக்கமான சூழலில் கனத்த இதயத்துடன் அவர் விடை பெற்று சென்றது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது .

இப்போது இதே அறிவுரையை என் மாணவிகளுக்கு நான் சொல்லி வருகிறேன். அதைத்தான் என் பேராசிரியைக்கு நான் காட்டும் மரியாதையாக நினைக்கிறேன்.

ஜே .லூர்து, மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x