Published : 15 Dec 2014 05:07 PM
Last Updated : 15 Dec 2014 05:07 PM
பெண்ணைப் போற்றி வளர்க்க வேண்டும் என்பார்கள். அவள்தான் இந்த சமுதாயத்தின் அங்கமான குழந்தையைச் சுமப்பவள். ஆரோக்கியமான சமுதாயம் அமைய, பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பது பிரபல சொலவடை. ஊரான் பிள்ளை என்பது தன் மகனை மணந்து இல்லத்திற்கு வரும் பெண். அவள் ஆரோக்கிய உணவு உண்டு வளர்ந்தால் அவள் வயிற்ரில் வளரும் தன் குல பிள்ளை தானே ஆரோக்கியமாக வளரும் என்பதே இதன் பொருள்.
இப்பெண் திருமணமாகிச் சென்று ஊரான் பிள்ளையாக மாறுவதற்கு முன்னரே, பிறந்த இல்லத்தில் பேணி காக்கப்பட வேண்டும். அதிலும் அவளது பெண்மைக்குரிய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் காலத்தின் கட்டாயம்.
பெண் பிறந்தவுடனேயே அவளது திருமணத்திற்காகத் தங்க நகைகள் வாங்கிச் சேர்ப்பது பெற்றோர்களின் சமுதாயக் கடமையாக மாறிவிட்டது. அதைவிட முக்கியம் பொன் போன்ற அவளது ஆரோக்கியம். ஒரு ஆண் படித்தால் அவன் மட்டுமே மேன்மையுறுகிறான். ஆனால், ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால் தன் குடும்பத்தையே அறிவு பெற வைக்கிறாள் என்பது உலகறிந்த உண்மை.
இந்த நிலையில் சிறுமிகள் குறிப்பிட்ட காலத்தில் பூப்பெய்தாவிட்டால், பெற்றோருக்கு அது கவலையாகவே மாறிவிடுகிறது. இது குறித்து டாக்டர் காமாட்சி நினைவு மருத்துமனையின் நிதி, நிர்வாக இயக்குநர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி, பல மருத்துவத் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பெண் குழந்தை கருப்பையுடனேயே பிறப்பதுபோல, அவள் பூப்பெய்துவதற்குத் தேவையான ஹார்மோன்களும் உடலில் பொதிந்து இருக்கும். உரிய காலத்தில் இது சுரக்கத் தொடங்கும். குறிப்பிட்ட வயது வந்தவுடன் தூண்டப்பட்டு, மெதுவாக வெளிப்படத் தொடங்கும். கருமுட்டைபை இயக்கி, மேலும் சில இயக்கங்களுக்குப் பிறகு மாதவிடாய் தோற்றுவிக்கப்படுகிறது.
மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுவதே சரியான சுழற்சி. இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளியில் தோன்றாமல் மாதம் ஒரு முறை தோன்றுவதற்கு முக்கியமான காரணம் உண்டு. பெண் பல ஆண்டுகள் கழித்து கருக்கொள்ள, பூப்பெய்தியதில் இருந்தே மாதம் ஒரு கரு முட்டை வெளியீடு நடக்க வேண்டும் என்பது இயற்கை. இத்தகைய பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சினை இருக்காது.
மாதவிடாய் ஏற்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண்ணின் உடல் தயாராவது மார்பக வளர்ச்சி மூலம் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். இந்த நேரத்தில்தான் பெற்றோர் மாதவிடாய் குறித்து விளக்க வேண்டும். இத்தகைய மாறுதல்கள் இயல்பாகவே குறித்த காலத்தில் ஏற்படாவிட்டால், கால தாமதம் செய்யாமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.
முதல் முறை மாதவிடாய் ஏற்பட்ட பின், இரண்டாவது சுழற்சி தள்ளிப் போகலாம். இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 21 நாளில் இருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் பூப்பெய்தும் காலம் 13 வயதிலிருந்து 14 வயது வரை இருக்கலாம். இயல்பான மாதவிடாய் சுழற்சி ஏற்பட சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். உடல்பருமன் ஏற்படாமல் இருக்க ஓடியாடி விளையாட வேண்டும். அன்றாட உடற்பயிற்சி மிக அவசியம்.
சிலருக்கு உடல் பருமனால் முதல் மாதவிடாய் முன்கூட்டியே வந்துவிடும். சிலருக்குக் கால தாமதம் ஆகும் நிலையும் உண்டு. ஒல்லிக்குச்சியாக, அதாவது `ஜீரோ சைஸ்` இருக்க விருப்பமுள்ளவர்கள் உணவை அறவே தவிர்ப்பார்கள். இது தவறானது. உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றை உட்கொண்டு ஒல்லியான உடல்வாகு என்றால் பிரச்சினை இல்லை. இவை அனைத்தும் இருந்தால், பூப்பெய்த 17 வயதுவரைகூடக் காத்திருக்கலாம். அதிகமான ஊட்டச்சத்து முன்கூட்டி பூப்பெய்த செய்துவிடும். அதேபோல ஊட்டச்சத்து குறைந்தால் கால தாமதமாகும்.
இதைத் தவிர்க்க சத்தான உணவில் புரதச் சத்து, இரும்புச் சத்து மற்றும் கால்சியம் ஆகியவை இருக்க வேண்டும். புரதச் சத்து என்றால் முளைவிட்ட பயிறு, மாமிசத்தில் ஈரல், மீன், முட்டை, உலர் கொட்டைகள் முக்கியமாக வேர்க்கடலை. இரும்பு சத்து என்றால் முருங்கை கீரை, வெல்லம், பேரீச்சம் பழம், ஈரல், முட்டையின் கரு, பிஸ்தா, காய்ந்த திராட்சை. கால்சியத்திற்கு பால், சீதாப்பழம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் மாதவிடாய் ஏற்பட்டு வந்தால் பின்னாளில் கருத்தரித்தல் பிரச்சினை வராது என்கிறார் டாக்டர் சிவரஞ்சனி.
-இந்த முனைப்பில் ‘தி இந்து’ மீடியா பார்ட்னர்
பிராணா கருத்தரிப்பு மையம் மகப்பேறு குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கக் காத்திருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 044-33031242 என்று எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். 2015 ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பிராணா கருத்தரிப்பு மையம் சார்பில் மகப்பேறு தொடர்பான முகாம் நடைபெறுகிறது. முன்பதிவு செய்துகொள்ள விரும்புகிறவர்கள் 044-33031242 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT