Published : 28 Dec 2014 01:16 PM
Last Updated : 28 Dec 2014 01:16 PM
உதிர்ந்து விழும் மலரோ, காய்ந்து கிடக்கும் விதையோ எதுவாக இருந்தாலும் கண்ணகி இளமதியின் கைவண்ணத்தில் அழகுகூடிவிடுகிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவருக்கு விதவிதமான கைவினைப் பொருட்களைச் செய்வது கைவந்த கலை.
பள்ளிப் பருவத்தில் இருந்தே கண்ணகிக்குக் கைவினைக் கலைகள் மீது அலாதி ஆர்வம். இப்போதுபோல் இருபதாண்டுகளுக்கு முன்னால் கைவினைக் கலைகள் குறித்தோ, அவற்றைச் செய்வதற்கான மூலப் பொருட்கள் குறித்தோ பலருக்கும் தெரியாது. அதனால் கையில் கிடைக்கிற பொருள்களை வைத்தே தன் திறமையைக் கண்ணகி வெளிப்படுத்தினார். கோலம் போட்டுவிட்டு மீதமாகும் கோல மாவு, சலித்த மணல் இவற்றைக் கொண்டு சுவற்றில் மாட்டிவைக்கக்கூடிய அழகு சட்டகத்தை உருவாக்கியிருக்கிறார்.
பிறகு தெர்மகோலில் 3டி பிம்பங்களை உருவாக்கினார். அவற்றுக்கு கிடைத்த பாராட்டு, கண்ணகியைத் தொடர்ந்து கலைகளோடு இருக்கவைத்தது. திருமணத்துக்குப் பிறகு அதிக ஆர்வத்துடன் கலைப் பொருட்களைச் செய்தார். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதில் புதிதாக என்ன செய்ய முடியும் என்று யோசிப்பார். ஆல்மண்ட் ஓடுகள், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பாட்டில் இப்படி நாம் தூக்கியெறிகிற எந்தப் பொருளுக்கும் அழகான மறுவடிவம் கொடுக்கிறார். தூங்குவதிலும், தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து நேரத்தை வீணடிப்பதிலும் தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்லும் கண்ணகி, தினமும் ஒரு மணி நேரத்தைத் தனக்காக நேரமாக்கிக் கொள்கிறார்.
“அந்த ஒரு மணி நேரம் நான் எனக்கான உலகத்தில் இருப்பேன். மனதில் எந்தக் கவலை இருந்தாலும் அது மாயமாகிவிடும்” என்று சொல்லும் கண்ணகி, தன்னிடம் பலர் கைவினைக் கலை கற்றுக் கொள்வதற்காக வந்தாலும் அதில் அவர்கள் முழுமைபெறாமலேயே நின்றுவிடுகின்றனர் என்று வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
“முதல் நாள் இருக்கிற ஆர்வம் அடுத்தடுத்த நாள் குறைந்துவிடுகிறது. ‘இதெல்லாம் எனக்கு வராது, அவ்ளோ பொறுமை எனக்கு இல்லை. நீங்களே செய்யுங்க. நாங்க வாங்கிக்கறோம்’னு நிறைய பேர் சொல்றாங்க. அதைக் கேட்கும்போது வருத்தமா இருக்கும். கைவினைக் கலைகளில் ஈடுபட கலை நுணுக்கம் எதுவும் தேவையில்லை. பொறுமையும் ரசனையும் போதும்” என்கிறார் கண்ணகி இளமதி.
கண்ணகி செய்கிற கலைப் பொருட்களின் முதல் ரசிகர்கள் அவரது குடும்பத்தார். சிறியப் பொருளைச் செய்தாலும் அதைக் கண்ணகியின் அம்மா வியந்து புகழ்வாராம். தம்பியோ கைவினைக் கலை தொடர்பான புத்தங்களை வாங்கி அனுப்புவாராம்.
“எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் என் கலைப் பொருட்களைப் பற்றி நான் பேசுகிறேனோ இல்லையோ என் கணவர் நிச்சயம் பேசுவார். ‘இது என் மனைவி செய்தது’ என்று ஒவ்வொன்றையும் பெருமையோடு அவர் சொல்வதைக் கேட்கும்போது இன்னும் நிறைய கலைப் பொருட்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் கண்ணகி.
படங்கள்: பி. கல்யாணகுமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT