Last Updated : 07 Dec, 2014 11:22 AM

 

Published : 07 Dec 2014 11:22 AM
Last Updated : 07 Dec 2014 11:22 AM

முகம் நூறு: குழந்தைகளுக்காக அம்மாக்கள் நடத்தும் பள்ளி

மலை நாட்டுப்படையினரால் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்காக அடிவார நாட்டு வீரர்கள் மலையேறிக் கொண்டிருந்தனர். செங்குத்தான மலை என்பதால் தடுமாறினார்கள். அப்போது எதிரே ஒரு பெண் கைக்குழந்தையுடன் வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வீரர்கள், “யாரம்மா நீ?” என்று கேட்க, “நானும் உங்கள் நாட்டுப் பிரஜைதான்” என்றாள் அவள். அவர்களுக்கு ஆச்சரியம். “அதெப்படி இவ்வளவு கடினமான மலையில் உன்னால் ஏற முடிந்தது?” என்று கேட்டு முடிப்பதற்குள் பதில் வந்தது. “கடத்தப்பட்டது என் குழந்தையாயிற்றே?”

மதுரை ஷைன் பள்ளியைத் தொடங்கிய பெண்களும், இந்தத் தாய்க்கு நிகரானவர்கள் தான். மன வளர்ச்சி குன்றிய தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கிடைக்குமா என்று பரிதவித்த மூன்று தாய்மார்கள், நம்மைவிட இந்தக் குழந்தைகளை யாரால் சிறப்பாக பார்த்துக் கொள்ள முடியும் என்று தாங்களே ஒரு பள்ளியைத் தொடங்கினார்கள். 2003-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி தற்போது 85 குழந்தைகளின் வருங்காலத்தை வளமாக்கும் முயற்சிகளோடு செயல்பட்டு வருகிறது. மைதிலி நெப்போலியன், விசாலாட்சி சுப்பிரமணியன், மகேஸ்வரி சுப்புராஜ் ஆகியோர்தான் அந்த வெற்றிப் பெண்மணிகள்.

சிறப்புக் குழந்தைகளுக்குத் தினமும் ஒன்றரை மணி நேரம் பிஸியோதெரபி மட்டும் போதாது, பள்ளிக்குச் சென்றால்தான் உடல், மன வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும். வீட்டிலேயே அடைந்து கிடந்தால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று மைதிலியிடம் டாக்டர் சொல்லியிருக்கிறார். ஆனால், சிறப்புக் குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகள் உள்ள சிறப்புப் பள்ளி எதுவும் அருகில் இல்லை. இருந்த பள்ளியிலும் பிஸியோதெரபி வசதி இல்லாததால், இடையில் அனுமதி பெற்று வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய நிலை.

“அரசு விதிப்படி, 17 வயது பூர்த்தியான குழந்தைகளைப் பொதுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள். என் மகனுக்கு அப்போது 19 வயதாகிவிட்டது. இதுபோன்ற நேரத்தில்தான் நாமே ஒரு பள்ளியைத் தொடங்கலாம் என்ற எண்ணம் வந்தது” என்கிறார் மைதிலி.

உமாமகேஸ்வரியின் மகன் கிருஷ்ணாவுக்கும் இதே பிரச்சினைதான். தவழ வேண்டிய வயதில் தவழவில்லை. உட்கார வேண்டிய பருவத்தில், அவனால் உட்கார முடியவில்லை. ஆதரவாக இருக்க வேண்டிய உறவினர்களே, என்ன பாவம் செய்தாளோ? இப்படிப் பிள்ளை பிறந்திருக்கிறது என்று அனல் வார்த்தைகளால் வதைத்திருக்கிறார்கள். வண்ண வண்ணத் தோரணங்களையும், கொட்டு மேளத்தையும் பார்க்க மகன் ஆசைப்படுவானே என்று திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றால், ‘இதையெல்லாம் கூப்பிட்டுக்கிட்டு வரலைன்னு யார் அழுதா?’ என்று உமாமகேஸ்வரியின் காதுபடவே சிலர் பேசியிருக்கிறார்கள்.

ஆனால் இப்படித் தன்னையும் தன் மகனையும் இழிவாகப் பேசுகிறவர்களைப் பற்றி உமாமகேஸ்வரி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.

“பேசுறவங்க பேசட்டும். வீட்டுக்குள்ளேயே பிள்ளைய வச்சிருந்தா, நம்ம காலத்துக்குப் பிறகு அதோட வாழ்க்கை என்னாகும்? எப்பாடுபட்டாவது பிள்ளைய நல்ல நிலைக்கு கொண்டு வரணும்னு நினைச்சேன். நாமே பள்ளியைத் தொடங்கலாம் என்ற மைதிலி அம்மாவின் கருத்து பிடித்திருந்தது. நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். என் மகனுக்கு 15 வயசாயிடுச்சி. இப்ப வரைக்கும் அவன் இங்கேதான் படிக்கிறான்” என்கிறார் உமா மகேஸ்வரி.

மன வளர்ச்சி குன்றிய நிலையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் தன் மகன் கௌதம் உள்பட 14 பேரை, பொதுப் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்படிப்பையும் முடித்துள்ளார்கள் என்று கூறும் விசாலாட்சி சுப்பிரமணியன், பள்ளியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திட்டம் பற்றி பேசினார்.

“புறஉலக சிந்தனையற்ற ஆட்டிஸம் குழந்தைகள், கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள், கவனச்சிதைவு உள்ள குழந்தைகள் என்று இப்போது இங்கே 85 பேர் படிக்கிறார்கள். அவர்களுக்கு மனதை ஒருங்கிணைக்கும் பயிற்சி, பேச்சுப்பயிற்சி, கணினி, இசை, நடனம், தொழிற்பயிற்சி போன்றவற்றுடன் பிஸியோதெரபி சிகிச்சையும் அளிக்கிறோம்” என்று சொல்லும் விசாலாட்சி, வறுமை காரணமாக யாருக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில், ஸ்பான்ஸர் பெற்றாவது அவர்களைப் படிக்க வைக்கிறோம் என்கிறார்.

பெற்றோர்களின் அங்கீகாரத் துடன், அரசின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள். தற்போதைய வாடகைக் கட்டிடத்தில் போதிய வசதி இல்லாததால், கடச்சனேந்தல், அ.புதூர் இடையே சொந்தமாக இடம் வாங்கி, கட்டிடப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். ஏழு குழந்தைகளுக்கு ஒரு வகுப்பறை, பிஸியோதெரபி அறை, நீச்சல் குளம், குதிரையேற்றம் என்று உலகத்தரத்தில் பள்ளியைக் கட்ட வேண்டும் என்பது இவர்களது கனவு.

“எங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறோம். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வாழ்க்கையில் எங்களால் சிறு அளவுக்காவது ஒளியைப் பாய்ச்சமுடியும் என்று நம்புகிறோம். உதவும் எண்ணமுள்ளவர்கள் எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவார்கள்” என்று மூவரும் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x