Published : 22 Dec 2014 04:13 PM
Last Updated : 22 Dec 2014 04:13 PM
இன்று பெண்கள் பல துறைகளிலும் ஆணுக்கு நிகராகத் தடம் பதிக்கிறார்கள். ஆனால் வன்பொருள்களைக் கையாளும் வெல்டிங், ஃபிட்டிங் போன்ற வேலைகளுக்குப் பெண்கள் பொருந்திவர மாட்டார்கள் என்ற எண்ணமும் இங்கே நிலவுகிறது. அந்த எண்ணத்தைத் தன் வெற்றியின் மூலம் மாற்றியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த வெல்டர் கிரிஜா.
திறமைக்குக் கிடைத்த பரிசு
திருச்சி எழில் நகரைச் சேர்ந்த கிரிஜா, பத்தாம் வகுப்பு முடித்து விட்டு பெல் நிறுவனத்தில் உள்ள ஐ.டி.ஐ-ல் வெல்டர் பிரிவில் சேர்ந்து படித்தார். ஓராண்டு முடித்த பின்னர் தொழில் பழகுநர் பயிற்சியில் முதலிடம் பெற்ற இவர், 2012-ல் தொழில் பழகுநர்களுக்கிடையே நடத்தப்பட்ட தென் மண்டல வெல்டிங் போட்டியில் முதலிடம் பெற்றார். இதைத் தொடர்ந்து அகில இந்திய போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். இவருக்கு பெல் நிறுவனம் தனது தொழிலகத்திலேயே பணி வழங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெல் நிறுவனத்தில் உள்ள பாய்லர் பிளான்ட் தொழிற்சாலையில் வெல்டராகப் பணியாற்றி வருகிறார் கிரிஜா.
“என் குடும்பத்தில் பலர் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சிறு வயதிலிருந்தே படிப்பைவிட விளையாட்டில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போது தடகளப் போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன்” என்கிறார் கிரிஜா.
போட்டியில் வெற்றி
கிரிஜாவின் அம்மா, அதிகம் படிக்கவில்லை. அதனாலேயே நன்றாகப் படிக்கும்படி தன் பெண்களிடம் அடிக்கடி சொல்வாராம். அதுதான் தனக்குக் கல்வியின் மீது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியது என்று கிரிஜா சொல்கிறார்.
‘வேர்ல்ட் ஸ்கில்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனம், தொழில்கல்வி மற்றும் பயிற்சியை உலகம் முழுவதும் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திவருகிறது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 முதல் 16-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ (Sao Paulo) நகரில் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் 46 தொழில் பிரிவுகளில் 60 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் ஏறத்தாழ 20 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
“இந்தப் போட்டியில் முதன் முறையாக நான் பங்கெடுக்க உள்ளேன். உலகத் தரத்திலான இந்தப் போட்டியில் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்ய மே மாதம் நடைபெற்ற தென் மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றேன். இதைத் தொடர்ந்து நாடு முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களில் இருந்து ஒன்பது பேர் பங்கேற்ற அடுத்தகட்ட தேர்வுப் போட்டியில் நான் உள்பட மூவர் தேர்வு பெற்றுள்ளோம்.
இந்தப் போட்டியில் கார்பன் ஸ்டீல், அலுமினியம், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், குழாய்கள் ஆகியவற்றைப் பல்வேறு நிலைகளில் அவர்கள் அளித்துள்ள விதிமுறைப்படி உரிய கால அளவில் வெல்டிங் செய்ய வேண்டும். இதில் முதல் நாள் தொடர்ந்து 10 மணி நேரமும், இரண்டாவது நாள் 11 மணி நேரமும், மூன்றாவது நாள் 3 மணி நேரமும் என மொத்தம் 24 மணி நேரம் வெல்டிங் செய்து, போட்டிக்கு அளிக்கப்பட்ட பணியைச் செய்து முடித்தேன்” என்று போட்டி குறித்து கிரிஜா விளக்குகிறார்.
மெருகேற்றும் படிப்பு
இதைத் தொடர்ந்து புதுடெல்லியில் மார்ச் மாதம் நடைபெறும் இறுதிக் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர் உலகத் திறன் போட்டியில் பங்கேற்க பிரேசில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
“இந்த வாய்ப்பை நான் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வெல்டிங்கில் எனக்குத் தேவையான பயிற்சிகளை பெல் நிறுவனத்தில் உள்ள வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் பெற்று வருகிறேன். தற்போது டிப்ளமோ படித்து வருகிறேன். இதைத் தொடர்ந்து பொறியியல் பட்டப் படிப்பையும் முடிப்பேன். இது எனது பணியை மெருகேற்ற பெரிதும் உதவும்” என்கிறார் கிரிஜா.
மனதில் உறுதியும், ஆர்வமும் இருந்தால் ஆண், பெண் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம், அதில் சாதனையும் புரியலாம் என்பதற்கு கிரிஜா போன்றவர்கள் நல்ல உதாரணம்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT