Published : 23 Nov 2014 01:55 PM
Last Updated : 23 Nov 2014 01:55 PM
ஒரு காலத்தில் சவுக்கு, உப்பு போன்றவற்றின் போக்குவரத்து நீர்வழித்தடமாக விளங்கிய பக்கிங்காம் கால்வாய் இன்று பொலிவிழந்து கிடக்கிறது. கால்வாயின் கரையெல்லாம் புதர்களாக வேலிகாத்தான் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. தமிழகத்தின் புகழ்மிக்க உப்பளங்கள் இருந்த இடம் சேறும், சக்தியுமாகி சிறிய கவனக் குறைவையும் சாதகமாக்கி வழுக்கி விழச்செய்துவிடும். உச்சி வெயிலையும் மீறி வேகமாக வீசிய காற்று உடலை ஜில்லிடச் செய்கிறது.
இத்தனைக்கும் நடுவே ஆளுயர நீரில் ‘பரி’ எனப்படும் பனை ஓலையால் பின்னப்பட்ட கூடையை வாயில் பற்றிக்கொண்டு நீருக்குள் மூழ்குவதும் எழுவதுமாகச் சில பெண்கள் இறால் மீன்கள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னைக்கு வடக்கே சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட அத்திப்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தின் அருணோதயா சுனாமி குடியிருப்பு, நேசன் நகர் மற்றும் நந்தியம்பாக்கம் மாரியம்மன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்தான் இப்படி நீரில் முங்கி இறால் மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பரம்பரை பரம்பரையாக பக்கிங்காம் கால்வாய் கரையோரமாக குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு இறால் மீன்களைப் பிடிப்பதே இவர்களின் தொழில். இந்தத் தொழிலில் 80 வயதைத் தாண்டிய சரோஜா, நீலா, காது கேட்காத அற்புதம் போன்ற பல பெண்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
- அற்புதம்
பக்கிங்காம் கால்வாயைச் சுற்றி அமைந்திருக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் வெளியிடும் மாசால் இவர்களின் சரி பாதி வாழ்வு தொலைந்து போனது. அதனால், மாற்றுத் தொழிலாக சிலர் மீன் பிடிப்பதற்காகப் பயன்படும் பூச்சிகளை (சேற்றிலிருக்கும் பூரான்களைப் போன்ற ஒருவித பூச்சிகள்) தற்போது பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உயிரைப் பணயம் வைத்து
இறால் மீன்களைப் பிடிக்கும் போது நண்டு மற்றும் பாம்புக் கடிக்கு ஆளாவதாகவும் இவர்கள் சொல்கிறார்கள். கரையிலிருக்கும் 30 வயதுள்ள ஒரு இளம் பெண்ணைச் சுட்டிக்காட்டி 80 வயது மதிக்கத்தக்க ராணி, “இதோ இவ பேர் கஸ்தூரி. எங்கிட்டேயிருந்து கொஞ்சம் எட்ட எறா தடவிக்கிட்டிருந்தவ திடீர்னு வலிப்பு வந்து அப்படியே நீருலே சரிஞ்சிட்டா. என்னாலேயும் தூக்க முடியலே. கடைசியிலே சத்தம்போட்டு பக்கத்துலேயிருந்த எங்காளுங்களைக் கூப்பிட்டு கரைக்குக் கொண்டுவந்து உயிரைக் காப்பாத்தினோம்!” என்று சொல்கிறார்.
மழையோ, வெயிலோ எதற்கும் அசராமல் இந்த இருளர் இனத்துப் பெண்கள் தவறாமல் கால்வாயில் இறங்கி இறால் பிடித்தால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். இந்தப் பகுதி பக்கிங்காம் கால்வாய், கடற்கழியுடன் இணைந்து வங்கக் கடலில் கலப்பதால் கடலின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பக்கிங்காம் கால்வாயில் நீர் வரத்து இருக்கும். ஏற்றம் இருக்கும்போது ஆழத்தில் சென்று சேற்றில் மறைந்திருக்கும் இறால்களைச் சேற்றுக்குள் தடவித் தடவிப் பிடிக்க வேண்டும்.
அப்படி ஆழத்தில் முங்கும்போது, சேற்றில் குடும்பம் குடும்பமாய் ஒன்றோடு ஒன்று ஒட்டி உயிர் வாழும் கிளிஞ்சல் இனத்தைச் சேர்ந்த ஆலிகள் பெண்களின் வளையல்களையும், தலை முடிகளையும் பற்றிப் பிடித்து விட்டால் அவற்றிலிருந்து விடுபடுவது சிரமம் என்று குளிரில் நடுங்கிக் கொண்டே சொல்கிறார் 80 வயதைத் தாண்டிய நீலா. இவர் குளிருக்கு மேலாடையாக பாலித்தீன் உறையை அணிந்திருக்கிறார்.
- கஸ்தூரி
“எறா பிடிக்கும்போது, ‘கோயி’ன்னு ஒரு மீன், உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்கும். ரொம்ப விஷம். அது உடம்புல பட்டுடுச்சுன்னா ஒரு வாரத்துக்கு பட்ட எடம் கடுக்கும். தொழிலும் செய்ய முடியாது!” என்கிறார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 25 வயது வள்ளிம்மா.
“சுற்றியிருக்கிற அனல் மின்நிலைய சாம்பல் தூசுவால முன்புபோல அதிகளவு இறால் மீன்கள் கிடைப்பதில்லை. உண்மையைச் சொல்லப்போனா இந்த மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கிதான் போய்கிட்டிருக்கு!” என்கிறார் அத்திப்பட்டு மார்க்கெட் குத்தகைதாரர் மூவேந்தன்.
வேண்டும் அடிப்படைத் தேவைகள்
இருளர் இன மக்கள் வசிக்கும் சுனாமி நகர் எனப்படும் அருணோதய நகர் தன்னார்வ அமைப்பு குடியிருப்புகளை அமைத்துத் தந்துள்ளது. ஆனால், நந்தியம்பாக்கத்தின் மாரியம்மன் நகரோ நீரால் சூழப்பட்டுள்ளது. சாலை வசதியில்லாமல் சேறும் சகதியுமாய் காணப்படுகிறது.
அருணோதயா நகரில் வாழும் 47 வயதான முத்தாயாவின் கணவர் 18 ஆண்டுகளாக நோயுற்றிருக்கிறார். இந்த நெடிய நாட்களை எவ்வித முகச் சுளிப்புக்கும் ஆளாக்காமல் குடும்பத்தின் அத்தனை பாரத்தையும் முத்தாயா சுமந்து வருகிறார். இறால் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார்.
இறால் பிடிக்கச் செல்ல முடியாத நேரங்களில், கூலி வேலைக்குச் செல்லும் இவர்களைப் பிழிந்தெடுத்துவிட்டு, கூலியையும் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறார் அத்திப்பட்டு நேசன் நகரைச் சேர்ந்த 27 வயதான தேசம்மா. “உழைச்சதுக்கான கூலி கேட்டா தராததோடு எங்கள அடிக்கவும் வர்றாங்க!” என்கிறார் பரிதாபமாக.
நகர்புறத்துக்கு அருகில் இருந்தும் இருளர் இன மக்கள் இன்னும் கல்வியறிவு பெறவில்லை. சமூக அமைப்பில் போதிய விழிப்புணர்வும் பெறவில்லை. ஒரு நாளில் காலையிலிருந்து மாலைவரை கிட்டதட்ட 12-14 மணி நேரம் இருளர் இனப் பெண்கள் தண்ணீருக்குள் முங்கிதான் இறால் மீன்களைப் பிடிக்கிறார்கள். இப்படி சிரமப்பட்டு பிடித்துவரும் இறால் மீன்களை அத்திப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றால் அதை வாங்க வருபவர்களில் சிலர் மிரட்டி விலைக்குறைவாக வாங்கிச் செல்வதாகவும் சொல்கிறார்கள்.
இருளர் இன மக்கள் வசிப்பிடங்களுக்குப் பட்டாக்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கான ரேஷன் அட்டைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இருளர் இனத்துக்கான சாதிச் சான்றுகளை வழங்க வேண்டும். நீரில் முங்கித் தொழில் செய்வதற்கு மாற்றாகச் சிறு படகுகளும், வலைகளும் வேண்டும் என்று அடிப்படைத் தேவைகளைப் பட்டியலிடுகிறார்கள் இவர்கள்.
- ராணி
அதேபோல, இருளர் இனத்துப் பெண்கள் பயனடையும் வகையில் சிறுதொழிலுக்கான மாற்று ஏற்பாடுகள், முதியோர் ஓய்வூதியம் ஆகியவையும் அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வது அவர்களின் மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இருளர் இனத்துப் பெண்களை மீட்டெடுக்க அரசின் கவனம் அவர்கள் பக்கம் திரும்ப வேண்டும்.
“எங்கள் குடும்பங்கள்ள பத்தாவது வரை படிச்சிருக்கிற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரணும். நாங்களும் உங்களை மாதிரி மனுஷங்கதானே. எங்களையும் மத்தவங்களைப் போலவே நடத்தணும்!” என்கிற கீதாவின் ஆதங்கம் தீரும் நாளில்தான் ஒரு சமூகத்துக்கான விடியல் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT