Published : 14 Jul 2019 09:51 AM
Last Updated : 14 Jul 2019 09:51 AM

பார்வை: நாமே தீர்ப்பு எழுதுவதை நிறுத்துவோமா

பெண்கள் சொல்கிற பாலியல் புகார்கள் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை மையமாக வைத்தே அணுகப்படுகின்றன. ஒன்று யார் புகார் கொடுத்தார்கள் என்பது; இரண்டாவது யார் மீது புகார் கொடுத்தார்கள் என்பது. இந்தப் பெண்ணெல்லாம் பாலியல் புகார் கொடுக்கலாமா என்ற சிந்தனைக்குச் சற்றும் குறைவில்லாதது, இவர் மேல் எல்லாம் எப்படிப் புகார் தரலாம் என்ற அணுகுமுறை.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றுதான் இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. அதைப் பொறுத்தவரை வாதி, பிரதிவாதி ஆகிய இரண்டே தரப்புதான். ஆனால், நாமோ அந்த இரண்டு தரப்பையும் நமக்குப் பிடித்தமான நிறத்தில் கண்ணாடி அணிந்துகொண்டு பார்ப்பதுடன், அதுதான் உண்மையாக இருக்கக்கூடும் எனவும் பரப்புரை செய்கிறோம். விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளியே வரும்வரைக்கும் பொறுமை காக்கப் பலராலும் முடிவதில்லை. நாமே நீதிமான்களாக மாறி தீர்ப்பெழுதிவிடுகிறோம்.

 ‘#நானும்கூட’ பாதிக்கப்பட்டேன்

தங்கள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் சுரண்டலையோ அத்துமீறலையோ பெரும்பாலான பெண்கள் வெளியே சொல்வதில்லை. காரணம் குடும்பமும் சமூகமும் தருகிற நெருக்கடிகள் அப்படி. தங்கள் குடும்பத்தைச் சேராத ஆண்களிடம் ஒரு பெண் சிரித்துப் பேசினாலே அவளது ஒழுக்கத்தையும் நடத்தையையும் விமர்சிக்கிறவர்கள், அந்தப் பெண் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் சும்மா விட்டுவிடுவார்களா? ‘கெட்டுப் போனவள்’ என்கிற பட்டத்தைக் கொடுத்து, அந்தப் பெயரையே ஊர் முழுவதும் பரப்பிவிட மாட்டார்களா? ஊர் வாயை மூடப் பயப்படும் பெண்கள் தங்கள் வாயை மூடி அத்துமீறலை பொறுத்துக்கொண்டோ அந்த இடத்திலிருந்து விலகியோ இருக்கப் பழகிக்கொள்கின்றனர்.

இப்படி உள்ளுக்குள் குமைகிற பெண்களுக்குச் சற்றே ஆசுவாசம் தருவதாக இருந்தது ‘#மீடூ’ இயக்கம். தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்  குறித்துப் பெண்கள் எந்த அச்சமும் இன்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் தரனா புர்க், 2006-ல் ‘மீடூ’ இயக்கத்தைத் தொடங்கினார்.

அப்படியொரு இயக்கம் செயல்பட்டுவருவது 2017-ல்தான் பரவலாகத் தெரிந்தது. அதுவும் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிறகு.

அதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த சட்ட மாணவி ராய சர்க்கார், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறலை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஒரு பெயர்ப்பட்டியலைத் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

தன் தோழிகள் சிலரிடமிருந்தும் பெயர் பரிந்துரைகளைப் பெற்று வெளியிட்ட அவர், குற்றமிழைத்தவரைப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவதுதான் அந்தப் பட்டியலின் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார். பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் அந்தப் பெயர்ப் பட்டியல் உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பல தரப்பிலிருந்தும் பலவிதமான எதிர்வினைகள் வெடித்துக் கிளம்பின. எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்துவது பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் அடிப்படை நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எனச் சில பெண்ணியவாதிகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

எதிர்மறை விமர்சனங்கள்

ஆனால், ராய சர்க்காரின் இந்த முன்னெடுப்பு பல பெண்களுக்குத் துணிவைத் தந்தது. தனக்குத் துணையாக ஒரு பெண் இருக்கிறார் என்ற நம்பிக்கையில், ‘நானும்கூடப் பாதிக்கப்பட்டேன்’ என்று பல பெண்கள் பொதுவெளியில் பேசத் தொடங்கினார்கள். திரைத் துறையைச் சேர்ந்த பெண்களும் அதில் அடக்கம்.

ஆனால், சமூகம் என்ன செய்தது? தங்களிடம் அத்துமீறிய ஆணைப் பற்றி ஒரு பெண் பொதுவெளியில் சொன்னதுமே, ‘உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா?’ என்கிற பாணியிலான எதிர்வினையைச் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படுத்தியது. ‘இதையெல்லாம் ஏன் இப்படிப் பொதுவெளியில் சொல்ல வேண்டும்? அதற்கென புகார்க் குழு இருக்குமே. அங்கே சொல்லலாமே’ என்றுகூட சிலர் கேட்டார்கள்.

பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் உள்ளகப் புகார்க் குழு (ஐ.சி.சி.) இல்லை என்பதும் அப்படியே இருந்தாலும் எந்தப் பெண்ணும் புகார் தந்துவிட்டு அதே நிறுவனத்தில் பணியைத் தொடர முடியாது என்று தெரிந்தும்தான் அப்படியொரு கேள்வி அறச்சீற்றத்துடன் முன்வைக்கப்பட்டது.

திரைத் துறை பிரபலங்கள் மீதோ பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்கள் மீதோ பாலியல் குற்றச்சாட்டைச் சொல்கிற பெண்களை இன்னும் ஒரு படி மேலே போய் கேள்விகள் கேட்பது வழக்கமாகிவிட்டது. ‘திரைத் துறையில் இதெல்லாம் சாதாரணம். இப்போது மட்டும் ஏன் புகார் சொல்ல வேண்டும்?’ என்பதில் தொடங்கி ‘ஏன் அப்போதே சொல்லவில்லை. இப்போது சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது’ என்பதுவரை பலதரப்பட்ட விமர்சனங்கள் இதற்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கறைபடியாததாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பைப் புறக்கணித்துவிட முடியாது. அதையும் எதிர்கொண்டுதான் அவர்கள் பயணம்செய்ய வேண்டும். ஒருவர் தவறு செய்யாதபட்சத்தில் தன் மீது வைக்கப்படும் புகாரைச் சட்டரீதியாக எதிர்கொண்டு தன்னை நிரூபித்துவிட்டு வெளியே வர வேண்டும்.

ஆனால், அதற்காக அப்படியானவர்கள் மீது சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் செய்த மற்றப் பணிகள் அனைத்தையும் புறக்கணிப்பதும் மறுப்பதும் எப்படிச் சரியாகும்? அதேநேரம், மக்கள் நலன் சார்ந்து பணியாற்றுவதாலேயே ஒருவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராகிவிடவும் முடியாது.

விருப்பமும் சம்மதமும்

தவிர, ஒரு பெண் தெரிந்தேதான் அந்த ஆணுடன் பழகினார் என்ற வாதத்தைவிடப் பிற்போக்குத்தனமானது வேறெதுவும் இல்லை. பாலியல் சார்ந்த அணுகுமுறையில் பெண்ணின் விருப்பத்துக்கும் சம்மதத்துக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. விருப்பம் என்பது பெண்ணின் தன்னிச்சையான முடிவு. ஆனால், சம்மதம் அப்படியானதல்ல. அது பல்வேறுவிதமான வாக்குறுதிகளின் அடிப்படையில் பெறப்படுவது.

‘உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்’ என்பதில் தொடங்கி என்னவிதமான வாக்குறுதியாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் பெண் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள். ஆனால், இப்படி வாக்குறுதி கொடுத்துப் பெண்ணின் இசைவைப் பெற்று அவளைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொள்வது தவறு என்கிறது சட்டம்.

காலத்தின் கட்டாயம்

குடும்பத்திலோ பொதுவாழ்க்கையிலோ தன் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ள ஆண் தயங்குவதற்குப் பின்னால் இருப்பதும் இந்தச் சமூகமே. இங்கே சமூகம் என்பது நம்மை ஆளும் அரசும் அதிகார வர்க்கமும் சேர்ந்ததுதான். காரணம், குற்றம் சுமத்தப்படுகிற அனைவருமே குற்றவாளிகள் என முத்திரை குத்திவிட்டுத்தான் சமூகம் விசாரணைக்குள்ளேயே நுழைகிறது.

ஒருவரது நற்பண்புகளையும் பொதுச் சேவையையும் காரணம்காட்டி அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவது சரியல்ல என்பது எப்படி தவறோ, அதேபோலத்தான் குற்றம் சுமத்தப்பட்ட எல்லோரையும் குற்றவாளியாகவே கருதும் மனநிலையும். அனைத்திலுமே விதிவிலக்குகள் உண்டு.

பாலியல் வழக்குகளில் விதிவிலக்காகச் சில ஜோடிக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் அவை சொல்லப்படும் காலம், பின்னணி என அனைத்தும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் அவற்றைக் காரணமாக வைத்து, குற்றச்சாட்டையே முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிச் செய்வது உண்மையான குற்றச்சாட்டுகளையும் நீர்த்துப்போகச் செய்வதுடன், சிலர் மேல் புகார் தரக்கூடப் பெண்கள் தயங்கக்கூடும்.

எனவே, பாலியல் குற்றச்சாட்டுகளில் ஆணோ, பெண்ணோ கடினமான விமர்சனங்களை தாங்கிக்கொண்டு உரத்துக் குரல்கொடுக்கத்தான் வேண்டும்; அது காலத்தின் கட்டாயமும்கூட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x