Published : 02 Nov 2014 02:37 PM
Last Updated : 02 Nov 2014 02:37 PM

குழந்தைகளுக்கு விளையாட நேரம் இருக்கிறதா?

குழந்தைகளுக்குத் தற்போது சேர்ந்து விளையாடவோ, பொழுதைக் கழிக்கவோ, சாவகாசமாகத் தங்கள் இயல்புக்கு ஏற்ப கற்பதற்கோ போதிய நேரமில்லை. ஆனால் குழந்தைகளைப் பொருத்தவரை சாவகாசம் அவசியமானது.

எனது ஏழு வயது மகள் என்னிடம் ஒரு நாள் ஹேண்ட் சானிடைசரை வாங்கித்தரச் சொன்னாள். நான் எதற்கு என்று கேட்டேன். பள்ளிக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்றாள். “வேகமாகக் கையைச் சுத்தம் செய்துவிட்டு, டிபன் பாக்ஸைத் திறக்கலாம்” என்று காரணம் சொன்னாள். அவ்வளவு அவசரம் ஏன்? என்று கேட்டேன். “நாங்கள் கீழே போய் கையைத் தண்ணீரில் கழுவிவிட்டு வந்து சாப்பிட்டால் போதுமான நேரம் கிடைக்காது. நான் இரண்டு வாய் சாப்பிடுவதற்குள் பெல் அடித்துவிடும்” என்றாள். கொடுத்துவிடும் சாப்பாட்டை முழுமையாக அவள் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம் எனக்கு இப்போது விளங்கியது.

“சாப்பிட்ட பிறகு விளையாட மாட்டீங்களா” என்று அவளிடம் கேட்டேன். வகுப்பறையை விட்டு வெளியே போக அனுமதி கிடையாது என்றாள். “ஆனால் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டால் கிளாஸுக்குள்ளேயே ஸ்டோன்-பேப்பர்-சிஸர் விளையாட்டு விளையாட நேரம் கிடைக்கும்” என்றாள்.

என் மகளிடம் இந்த ஒரு வருடமாக நான் பல விஷயங்களைக் கவனிக்கிறேன். சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, எடை குறைவு, பசியின்மை, சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கான காரணம் இப்போது என்னவென்று தெரிந்தது.

நான் இந்தியாவின் மத்தியில் இருக்கும் மாநிலத்திலிருந்து இதை எழுதினாலும், மற்ற இடங்களிலும் இதே நிலைதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு அதிகரித்துவரும் பாடச்சுமையும், அடுக்கடுக்கான ப்ராஜக்ட்களும் அவர்களது இளைப்பாறும் இடைவேளை நேரத்தைக் கபளீகரம் செய்துவருகின்றன.

மற்ற குழந்தைகளிடம் பேசும்போதும் அவர்களது விளையாட்டு நேரம் குறைந்துவிட்டது தொடர்பான அதிருப்தியையும் கோபத்தையும் என்னால் உணர முடிகிறது. பள்ளி நிர்வாகங்கள், பேராசையான பெற்றோர்களுடன் சேர்ந்து குழந்தைகளின் அடிப்படைத் தேவையான விளையாட்டைத் திருடிவருகின்றன. அவர்களுக்கென்று இருக்கும் சுதந்திர வெளியில் விளையாடவும், கண்டுபிடிக்கவும், சந்தோஷமாகவும் இருக்கும் வாய்ப்புகளைப் பறித்துவருகிறோம்.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்வி மையங்கள் கற்றல் தொடர்பான விதவிதமான கோட்பாடுகளைச் சொல்கின்றன. குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாகப் போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களைச் சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்துவிட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணைப் பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.

ஆனால் இந்தச் செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோகோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது கள்ளாட்டம் எது என்பதை குழந்தைகள் அறிந்துகொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.

சின்னச் சின்னக் காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தைப் பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்? அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்? பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன. பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்?

இந்த வாய்ப்புகள் அனைத்தும் இல்லாமல் குழந்தைகளின் மனம் எப்படி இருக்கும்? பெரிய கிரேடுகளை வாங்குவது எப்படியென்ற சிந்தனையும், மனப்பாடம் செய்த பதில்களாலும் மட்டுமே நிரம்பி இருக்கும். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை. சொந்தமாகச் சிந்திக்கும் வாய்ப்போ, சிந்தனைகளை ஒருங்கிணைத்து சுயமான மொழியில் பேசுவதற்கான சூழலோ இல்லை. சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெறப் போகிறார்கள்?

விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள்.

குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்தச் செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களைக் கற்கவிடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.

‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x