Published : 07 Jul 2019 09:42 AM
Last Updated : 07 Jul 2019 09:42 AM
சிறுவன் தாவூது கோலியாத்தை வீழ்த்திய கதை பலருக்கும் தெரிந்ததுதான். ஜூலை 1 அன்று அந்தக் கதையை நினைவுபடுத்தியது விம்பிள்டன் போட்டியில் கிடைத்த முடிவு. ஐந்து முறை விம்பிள்டன் பட்டம் வென்ற 39 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சக நாட்டு வீராங்கனையான 15 வயதே நிரம்பிய சிறுமி கோரி காஃப் வீழ்த்தி, புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.
வீனஸ் வில்லியம்ஸ் முதல் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றபோது கோரி காஃப் பிறக்கவே இல்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கோரி காஃபின் ரோல் மாடல் வீனஸ் வில்லியம்ஸ்தான். என்றாவது ஒருநாள் அவரைப் போலவே வர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு விளையாடத் தொடங்கியிருக்கும் கோரி காஃப், அவரையே வீழ்த்தித் தனது பயணத்தைத் தொடங்கி யிருப்பது எல்லோருக்கும் கிடைத்துவிடாத ஓர் அரிய வாய்ப்பு.
ஈடு இணையில்லா வெற்றி
கோரி காஃபின் செல்லப் பெயர் ‘கோகோ’. புகழ்பெற்ற டென்னிஸ் ஓபன் தொடரான விம்பிள்டன் தொடரில் விளையாட 15 வயதில் தகுதிபெற்ற முதல் வீராங்கனை இவர். விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் போட்டிக்கு ‘வைல்ட் கார்டு’ மூலம் சிறப்புத் தகுதி பெற்றுப் பங்கேற்றார்.
விம்பிள்டன் நம்பர் 1 கோர்ட்டில் விளையாட வேண்டும் என்ற பல நாட்களாகவே காத்திருந்தார் காஃப். முதல் போட்டியே வீனஸ் வில்லியம்ஸுடன் என்ற அறிவிப்பு வெளியானபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி.
ஆனால், தன்னுடைய ஆதர்சன வீராங்கனையை எதிர்த்து விளையாடப் போகிறோம் என்ற பதற்றம் அவரிடம் துளிக்கூட இல்லை. போட்டி தொடங்கியபோது விரைவில் முடிந்துவிடும் என நினைத்து ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
ஆனால், போட்டியில் தரவரிசையில் 44-வது இடத்திலிருக்கும் வீனஸை, 313-வது இடத்திலிருக்கும் கோரி காஃப் அநாயசமாக எதிர்கொண்டார். வீனஸின் சர்வீஸ்களை அதே வேகத்தில் திருப்பி வீனஸுக்கு நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டை 6 - 4 என்ற கணக்கில் 39 நிமிடங்களிலேயே வீனஸை வீழ்த்தி காஃப் முன்னிலை பெற்றபோது ஒட்டுமொத்த விம்பிள் டன் அரங்கமும் அதிர்ச்சியில் உறைந்துபோனது.
பயமறியா இளங்கன்று
முதல் செட்டை 35 நிமிடங்களில் வென்றுகாட்டிய காஃப்புக்குத் தனது அனுபவம் மூலம் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுப்பார் வீனஸ் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இரண்டாவது செட்டில் காஃபின் வெற்றியை வீனஸ் வில்லியம்ஸால் தள்ளிப்போட மட்டுமே முடிந்தது. ஒரு மணி நேரம் நீடித்த இரண்டாவது செட்டில், வீனஸ் வில்லியம்ஸின் பிரம்மாண்ட அனுபவத்தை எளிதாக எதிர்கொண்டு ‘இளங்கன்று பயமறியாது’ என்பதை காஃப் நிரூபித்தார். இரண்டாவது செட்டையும் 6 - 4 என்ற கணக்கில் காஃப் வென்று விம்பிள்டன் வரலாற்றில் வெற்றிக் கொடியை உயரப் பறக்கவிட்டார்.
நம்பிக்கை நட்சத்திரம்
வீனஸ் வில்லியம்ஸை நேர் செட்களில் தோற்கடித்தவுடன் ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி கோரி காஃபின் சாதனையை அங்கீகரித்தபோது, காஃப் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தேம்பியழத் தொடங்கினார். தன்னுடைய ரோல் மாடலைத் தோற்கடித்ததை நம்ப முடியாமலும் விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் வென்றதை நினைத்தும் அவர் அழுதார். அது மகிழ்ச்சியால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்.
அதே நேரத்தில் காஃப் வெற்றி பெற்றதும் முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் ஒரு மகளுக்குத் தாய் வாழ்த்து சொல்வதைப் போல வீனஸ் வில்லியம்ஸ் வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனதும் யாருக்கும் கிடைக்காத பாக்கியம்தான்!
“வழக்கமாகப் போட்டி யில் தோற்று விட்டால் நான் அழுது விடுவேன். முதன்முறையாக வெற்றி பெற்றதற் காக அழுதிருக்கிறேன். இந்த வெற்றியை எப்படி வெளிப் படுத்துவது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் வாழ்த்து மழையில் என்னை நனைத்துக் கொண்டிருக்கிறார்கள். விம்பிள்டன் நம்பர் 1 கோர்ட்டில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கோர்ட்டில் என்னுடைய ரோல் மாடலைத் தோற்கடித்தது கனவுபோல இருக்கிறது” என்று சொன்னார் காஃப்.
வீனஸ் வில்லியம்ஸும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 17 வயதில்தான் அறிமுகமானார். பின்னர் மிகக் குறைந்த காலத்திலேயே கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டங்களை வென்று முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தார். அவரைப் போலவே 15 வயதில் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அறிமுகமாகியிருக்கும் கோரி காஃபும் வீனஸ் வில்லியம்ஸைப் போலவே உருவெடுப்பார் என்று டென்னிஸ் உலகம் நம்புகிறது. வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்து முன்னுரை எழுதியிருக்கும் கோரி காஃப் அந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார்!
முதல் வீராங்கனை காஃப் 2004, மார்ச் 13 அன்று ஜார்ஜியாவில் பிறந்தார். அவருடைய தந்தை கொரே, கூடைப்பந்து வீரர். அம்மா காண்டி, தடகள வீராங்கனை. சிறு வயதில் அவருடைய தந்தை கொரேதான் காஃப்புக்குப் பயிற்சி அளித்தார். தற்போது பிரான்ஸில் செரீனா வில்லியம்ஸ் பயிற்சிபெற்ற இடத்தில் காஃபும் பயிற்சி பெற்றுவருகிறார். செரீனாவுக்குப் பயிற்சி அளித்த பேட்ரிக் மோட்ராடோகோலோ என்ற பயிற்சியாளர்தான் காஃபுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். விம்பிள்டன் போட்டியில் விளையாடிய 12-வது இளம் வீராங்கனை காஃப். ஆனால், ஒற்றையர் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் காஃப். கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை காஃப் வென்றார். ஜூனியர் விம்பிள்டன் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினார். இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் தகுதிச் சுற்றுப் போட்டியில் வென்ற முதல் இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். முதன்முறையாக விம்பிள்டன் வரலாற்றில் ஒற்றையர் போட்டியில் வெற்றிபெற்ற இளம் வீராங்கனை என்ற அழுத்தமான சாதனையை கோரி காஃப் தற்போது தன் வசமாக்கியிருக்கிறார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT