Published : 07 Jul 2019 09:42 AM
Last Updated : 07 Jul 2019 09:42 AM
‘அன்பு ஒருவருடைய பண்பை எப்போதும் உயர்த்தவே செய்யும். ஒருபோதும் தாழ்த்தாது, அது உண்மையான அன்பாக இருக்கும் பட்சத்தில்’ என மாவீரன் பகத்சிங்கின் வரிகளுடன் தொடங்குகிறது மது ஒழிப்புப் போராளி நந்தினியின் திருமண அழைப்பிதழ்.
இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளியன்று நடந்திருக்க வேண்டிய நந்தினியின் திருமணம் அவர் மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே தடைபட்டுப்போனது.
மதுரை சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே நந்தினி தன்னுடைய தந்தை ஆனந்துடன் இணைந்து மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். சமூகத்தைச் சீரழிக்கும் மதுவை ஒழிக்கத் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் இவர்களது ஒற்றைக் கோரிக்கை. ஆனால், அதற்குப் பரிசாக அவர்களுக்குக் கிடைத்தது சிறைவாசம்தான்.
சிறையில் இருந்துவிட்டுப் போகிறேன்
2014-ல் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே இருந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நந்தினியும் ஆனந்தனும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதற்காக அவர்கள் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ‘காவல் துறையினரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது, காவல் துறையினரைத் தாக்கியது’ போன்றவற்றை அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நான்கு ஆண்டுகள் கழித்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 27 அன்று நடைபெற்றது. அப்போது சாட்சியம் அளித்த காவல் துறையைச் சேர்ந்தவரிடம், “மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் மது போதைப் பொருளா, உணவுப் பொருளா, மருந்துப் பொருளா?” என நந்தினி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இந்திய தண்டனைச் சட்டம் 328-ன்படி டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்வது குற்றமில்லையா?” எனவும் அவர் கேட்டுள்ளார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது” என்றார். “என் மகள் வாதிட்டதில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் என்ன கருத்து உள்ளது” எனக் கேட்டிருக்கிறார் நந்தினியின் தந்தை ஆனந்தன்.
இதனால், நந்தினி, ஆனந்தன் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டு உடனடியாக மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணத்துக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் நந்தினி சிறையில் அடைக்கப்பட்டது தமிழக அரசின் பழிவாங்கும் செயல் என்கிறார் நந்தினியின் தங்கை நிரஞ்சனா. இவரும் சட்டக் கல்லூரி மாணவிதான்.
“திருமணத்துக்கு ஒரு நாள் முன்பாவது அக்காவை ஜாமீனில் வெளியே அழைத்து வந்துவிடலாம் என நம்பியிருந்தோம். ஆனால், ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றால் வாக்குமூலப் பத்திரத்தில் நாலு பேரோட ஷ்யூரிட்டி வேண்டும் என்கிறார்கள். இல்லையென்றால் மது ஒழிப்புப் போராட்டத்தில் இனிமேல் ஈடுபட மாட்டேன்னு திருப்பத்தூர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுக்கணுமாம்.
அரசின் இந்த நிபந்தனைகளை நந்தினி ஏற்றுக்கொள்ளில்லை. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதைவிட நான் சிறையில் இருந்துவிட்டுப் போகிறேன். திருமணத்தைப் பல வருஷம் கழித்துகூட நடத்தலாம்னு அக்கா தீர்க்கமா சொல்லிட்டாங்க” என்கிறார் நிரஞ்சனா. அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து ஜூலை 8-ம் தேதி (நாளை) மதுரை சட்டக் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகவும் நிரஞ்சனா அறிவித்திருக்கிறார்.
வாதிடுவது குற்றமா?
நீதிமன்றத்தில் தன்னுடைய தரப்பு நியாயத்தைக் குற்றம் சுமத்தப்பட்டவரே எடுத்துச் சொல்லலாம் எனச் சட்டம் உள்ள நிலையில் வழக்கறிஞர் படிப்பு முடித்துள்ள நந்தினி தன் சார்பில் வாதாட உரிமையில்லையா எனக் கேள்வி எழுப்புகிறார் சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.
“மது ஒழிப்புக்காக நந்தினி நடத்திவரும் தனி மனிதப் போராட்டம்தான் இன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்னெடுக்க முக்கியக் காரணம். மது போதைப் பொருளா என நந்தினி கேட்பதற்கு முன்பே இந்தக் கேள்வியை காவல் துறையினரிடம் நீதிபதி கேட்டிருக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல. நீதிமன்றம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நீதிபதிகள் நடுநிலைமையோடு நடந்துகொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்டத்தான் நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை புதுவிதமாக உள்ளது. நந்தினியின் வழக்கை மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டும்” என்கிறார் பாலபாரதி.
மக்கள் நலனே முக்கியம்
மதுவுக்கு எதிரான முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகையுடன் டாஸ்மாக் கடைகளின் முன்பு அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதுதான் நந்தினின் வழக்கம். போராட்டம், சிறை என இருக்கும் நந்தினி எப்போதும், ‘இந்த ஊரில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்’ என்றுதான் அறிவிப்பார்.
ஆனால், கடந்த மாதம் தன்னுடைய திருமணம் குறித்து அவர் அறிவித்தபோது அது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்பாவின் நண்பருடைய மகன் என்ற காரணத்துக்காக மட்டுமல்லாமல் தன்னுடைய கருத்தை ஆதரித்துப் போராட்டக் களத்தில் அப்பாவுக்கு அடுத்தபடியாக ஜோதிபாசுவும் இருப்பார் என்றார் நந்தினி.
இந்நிலையில் நந்தினியின் திருமணம் தடைபட்டது அவர்களின் உறவினர்களை வருத்தமடையச் செய்துள்ளது. மணமகன் குணா ஜோதிபாசு, “திருமணத்துக்குப் பிறகும் நந்தினி எப்போதும்போல் மக்கள் நலனுக்காகப் போராட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். ஆனால், திருமணமே போராடித்தான் நடக்கும் என்ற நிர்ப்பந்தத்தை அரசு உருவாக்கியுள்ளது.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நந்தினி சிறை சென்றதில் எங்களுக்குப் பெருமைதான். அவர் நல்லபடியாக விடுதலையாகி வரும்வரை காத்திருப்பேன்” என்று சொல்கிறார் குணா ஜோதிபாசு. தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு என்னும் சின்னதொரு கடுகு உள்ளத்திலிருந்து விலகி, சமூகத்துக்காகப் பாடுபடும் பாரதிதாசனின் தம்பதியை நினைவுபடுத்துகின்றனர் நந்தினியும் குணா ஜோதிபாசுவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT