Last Updated : 30 Jun, 2019 11:19 AM

 

Published : 30 Jun 2019 11:19 AM
Last Updated : 30 Jun 2019 11:19 AM

நட்சத்திர நிழல்கள் 12: வாய்மையின் குரலான பிரியங்கா

உண்மை வலுக்கொண்டது. அதை எதிர்கொள்ள அசாத்திய மன வலிமை தேவை. அது இல்லாத மனிதர்கள் பொய்யிடம் புகலடைந்துவிடுவார்கள். ஆனால், பொய்யே சொல்ல மாட்டேன் என்று ஒரு பெண் முடிவெடுத்துவிட்டால் நிலைமை என்னவாகும்? பூமி தாங்குமா? உண்மை, அதுவும் பெண் பேசும் உண்மையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் யாருக்கு உண்டு? அப்படிப்பட்ட பெண் ஒரு குடும்பத்தில் இருந்தால், குடும்பம் பொறுத்துக்கொள்ளுமா? அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்து என்னவெல்லாம் நிகழும்? அறிந்துகொள்ள ஆர்வமாகத்தான் இருக்கும். ஆனால், கற்பனை அளவுக்கு உண்மை சுவாரசியமானதன்று. உண்மையால் பிரியங்காவுக்குப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் துன்பமே கிடைத்தது.

சுதானு குப்தா எழுதிய கதைக்கு ராஜ்குமார் சந்தோஷியுடன் இணைந்து திரைக்கதை அமைத்து, தயாரித்து இயக்கியிருப்பவர்  நீலகண்டா. இந்தியில் ‘தாமினி’ என்ற தலைப்பில் மீனாட்சி சேஷாத்ரி நடிப்பில் வெளியான படத்தின் மறு ஆக்கமே ‘பிரியங்கா’ (1994). வசனமாவது மண்சார்ந்து இருக்கட்டும் என்பதற்காகத் தமிழில் P. கலைமணியை வசனம் எழுதவைத்திருக்கிறார்கள். வடமொழி வாசனை தூக்கலாக இடம்பெற்றிருக்கும் இந்தப் படத்தில் பிரியங்காவாக நடித்திருந்தார் ரேவதி. நீதிக்காகப் போராடும் கதாபாத்திரம் இது. பெண்ணுக்கு வெளியில் நீதி கிடைத்தாலும் கிடைத்துவிடும். ஆனால், வீட்டுக்குள் நீதி கிடைப்பது குதிரைக் கொம்பு. குடும்பம் என்பது பெண்ணுக்கான சுதந்திரவெளி அல்ல; அது ஒருவகையான சிறை. அதில் சிறைப்பட்ட பெண்கள் மீள்வது கடினம். அதிலேயே அவர்கள் உழல வேண்டியதுதான். 

பண்பால் பிறந்த காதல்

பிரியங்கா எளிய குடும்பம் ஒன்றில் பிறந்தவள். அவளுடைய தந்தை கிருஷ்ணன் சாதாரண அரசு அலுவலர். அவளுக்கு ஒரு அக்கா. பெற்றோரால் வரதட்சிணை கொடுத்து மணம் முடித்துவைக்க முடியாத சூழலில் அவளாகவே மனதுக்குப் பிடித்த மணவாளனுடன் சென்று தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவள். இதற்கு நேரெதிரான குடும்பச் சூழல் அமையப் பெற்றவன் சேகர். இந்த வேடத்தில் நடித்திருப்பவர் ஜெயராம். படத்தில் மையப் பாத்திரமான பிரியங்காவே நீதி கேட்டுப் போராடுவார். அவரை வெறுமனே ரேவதி எனக் குறிப்பிடும் படத்தின் டைட்டில், ‘புரட்சி தென்றல்’ என ஜெயராமைச் சுட்டுகிறது. இதுதான் யதார்த்தம் என்பது சுடுகிறது. 

ஊரின் மிகப் பெரிய குடும்பம் ஒன்றில் பிறந்தவன் சேகர். அவனுடைய தந்தை ராம் பெரும் தொழிலதிபர். அவரைப் போலவே மற்றொரு புகழ்பெற்ற தொழிலதிபரான கோகுல்நாத் தன் மகளை சேகருக்கு மணம் முடித்துத் தரக் காத்திருக்கிறார். இரண்டு குடும்பங்களும் அந்த நன்னாளுக்காகக் காத்திருக்கின்றன. இந்தச் சூழலில் சேகரின் மனம் பிரியங்காவின் பக்கம் சாய்ந்துவிடுகிறது. உண்மையைப் பேசும் பிரியங்காவின் குணத்தால் ஈர்க்கப்பட்ட சேகர், மணந்தால் பிரியங்காவைத்தான் மணப்பது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான். எந்த உண்மை அவனை ஈர்த்ததோ அந்த உண்மை அவனை அலைக்கழிக்கவும் செய்கிறது. 

பெண் பார்க்க வந்த அன்றே, தன் குடும்பம் பற்றிய எல்லா உண்மைகளையும் எந்த மனக்கிலேசமும் இல்லாமல் போட்டு உடைத்துவிடுகிறாள் பிரியங்கா. சேகரின் தாயார் ஆடிப்போய்விடுகிறார்; தந்தையோ சேகருக்கான துணையாக பிரியங்காவைத் தேர்வுசெய்து விடுகிறார். ஏன் இந்த முடிவை எடுத்தோமென அவர் மனம் வருந்தும்படியான நிகழ்வுகளை எல்லாம் அவர் பின்னர் எதிர்கொள்கிறார்.

எது குடும்ப கௌரவம்?

புகுந்த வீட்டில் பிரியங்காவுக்கு ஆறுதலாக இருப்பவர்கள் சேகரும் வீட்டின் பணிப்பெண்ணான கங்காவும்தாம். இல்லாத வீட்டுப் பெண்ணைச் செல்வந்தக் குடும்பத்தில் தாங்கவா செய்வார்கள்? வார்த்தைக்கு வார்த்தை அவளை வதைப்பதிலேயே சுகம்காண்கிறார்கள். சேகர் அலுவலகம் சென்ற பொழுதில் எல்லாம் அவளது துணை கங்கா மாத்திரமே. அந்த கங்கா பெரியவளாகிறாள். அந்தப் பெண்ணின் சந்தோஷமான அந்தத் தருணத்தைப் பகிர்ந்துகொள்ள பிரியங்கா மட்டுமே பிரியப்படுகிறாள். அந்த வீட்டில் வேறு யாருமே அந்த நிகழ்வுக்கு இன்முகம் காட்டவில்லை. வேலை பாதிக்குமே என்பதே அவர்கள் கவலை. பிரியங்கா மட்டுமே அதில் மகிழ்ந்து கங்காவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாள்.

அந்த கங்காவை சேகரின் தம்பி  வினோத் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். வீட்டில் நடந்தேறிய அந்தக் கொடுமையைப் பார்த்து அதிர்ந்துபோன பிரியங்கா, சேகர் உதவியுடன் அவனுக்குத் தண்டனை வாங்கித் தர விரும்புகிறாள். இப்போதுதான் மனிதர்களின் நிஜ முகத்தை அவள் தரிசிக்கிறாள். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை கங்கா எனும் அபலைப் பெண்ணை அரவணைப்பதில் இல்லை. அப்படியொரு சம்பவமே அந்த வீட்டில் நடைபெறவில்லை எனச் சாதிக்கிறார்கள். சேகருமே பிரியங்காவைச் சமாதானப்படுத்தித் தன் தம்பி யையும் கௌரவத்தையும் காப்பாற்றவே பார்க்கிறான்.

பிரியங்கா சொல்லும் உண்மையால் கங்காவுக்கு நீதி கிடைக்கும். ஆனால், ராமின் குடும்ப கௌர வம் தரைக்கு வந்துவிடும்; தனது மண உறவும் கேள்விக்குள்ளாகிவிடும் எனும் இக்கட்டான நிலைமைதான். யதார்த்தத்தில் இப்படியொரு நிலைமை வந்தால் பெரும்பாலான பிரியங்காக்கள் சேகர் பக்கம் சாய்ந்துவிடுவார்கள். ஆனால், இந்த பிரியங்கா காவிய கதாபாத்திரம். அவள் கங்காவுக்கு ஆதரவு தரத் துணிந்துவிடுகிறாள். வாக்கப்பட்டுவந்த குடும்பத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் படியேறுகிறாள் என ராம் குடும்பத்தினர் அவளைத் தூற்றுகிறார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி கங்காவுக்கான நியாயத்துக் காகப் போராடுகிறாள் பிரியங்கா. இந்தப் போராட்டத்தின் நடுவில் கங்காவை அதிகாரம் கொன்றுவிடுகிறது.

கூனிக் குறுகும் உண்மை

‘வாய்மையே வெல்லும்’ என்று சொல்லும் நீதி மன்றத்தில் பிரியங்காவின் உண்மை பந்தாடப்படு கிறது. ஸ்ரீராம் தரப்பு வழக்கறிஞர் ருத்ரய்யா உண்மையை அறிந்துகொள்ளக் கேட்கும் கேள்வியில் கூனிக் குறுகிப் போய்விடுகிறார் பிரியங்கா. பொய்யுரை யின் படோடாபத்தின் முன்னர் அவளுடைய உண்மை பலவீன மாக, சன்னமான குரலில் ஒலிக்கிறது. ஆர்ப்பாட்டமான வாதத்திறமைகொண்ட ருத்ரய்யா, பிரியங்கா மனரீதியான பாதிப்பு கொண்ட பெண் என வாதிடுகிறார். பிரியங்காவின் தந்தையே தன் மகள் புகுந்த வீட்டில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக அது உண்மையெனப் பொய்யுரைக்கிறார். சேகரும் அவள் மனப்பிறழ்வு கொண்டவளே என்கிறான். நீதிமன்றத்துக்குத் தேவையான சான்றுகளின் அடிப்படையில் பிரியங்கா மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறாள்.

அதிலிருந்து மீண்டுவந்துவிடுகிறாள் பிரியங்கா. ஆற்றல்மிக்க அவளது உண்மை, அவளுக்கான வலுவைக் கொடுக்கிறது. வழக்கறிஞர் அர்ஜுனின் உதவி அவளுக்குக் கிடைக்கிறது. கடவுளுக்கே இல்லாத வசதி கதையாசிரியருக்கு உண்டே.  அவர் தான் நினைத்த மாதிரியெல்லாம் கதாபாத்திரத்தைச் செல்ல வைக்கலாமே. ஆகவே, நீதிமன்றத்தில் பிரியங்கா வென்றுவிடுகிறாள். அவளுடைய உண்மை வினோத்துக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் தண்டனை பெற்றுத் தந்துவிடுகிறது.

குடும்ப கௌரவத்துக்காகத் தன் தந்தை தன்னையும் பிரியங்காவையும் கொல்லத் துணிந்ததை அறிந்தபிறகுதான் சேகருக்கு விபரீதம் புரிகிறது. அவன் பிரியங்காவைப் புரிந்துகொள்கிறான். மீண்டும் பிரியங்கா சேகருடன் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தொடங்குகிறாள் என்பதாகப் படம் நிறைவடைகிறது. ஆனால், குடும்பம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தனி மனிதர்களைக் காவு கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை பிரியங்காக்கள் உணர வேண்டும் என்பதையே படம் உணர்த்துவதாகத் தோன்றுகிறது.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள:

chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x