Published : 30 Jun 2019 11:22 AM
Last Updated : 30 Jun 2019 11:22 AM
தென்கொரிய இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் டான் லீ. யூடியூபில் இவர் பதிவேற்றும் அழகுக் குறிப்புகளுக்கு ரசிகர்கள் அநேகர். டான் லீயிடம் இருந்து அழகுக் குறிப்பு வீடியோவை எதிர்பார்த்துக் காத்திருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தந்தது அவர் வெளியிட்ட வீடியோ. புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை நாட்களை வீடியோவாக வெளியிட்டார் டான் லீ. இந்த வீடியோ பலரையும் கலங்கவைத்துவிட்டது.
டான் லீக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது பிப்ரவரி மாதம் உறுதி செய்யப்பட்டது. மருத்துவத் துறையின் முன்னேற்றத்தால் பல்வேறு நோய்களுக்கு இன்று தீர்வுகாணப்பட்டாலும் புற்றுநோய் என்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அதுவும் ரத்தப் புற்றுநோய் என்றால் மீண்டு வருவது கடினம் என்ற நினைப்பாலேயே பலர் அதிக மனநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். ஆனால், டான் லீ நிதர்சனத்தைப் புரிந்துகொண்டார். கவலைப்படுவதால் நோய் தீரப்போவதில்லை என்பதையும் உணர்ந்தார். ஆனால், தன்னால் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார். அந்த நம்பிக்கைதான் வீடியோ வடிவம் எடுத்திருக்கிறது.
தனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நாளிலிருந்து நடந்தவற்றை வீடியோவாகப் பதிவுசெய்யத் தொடங்கினார் டான் லீ. கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு அதிகமாக முடி உதிரத்தொடங்கியது. தன் விரல்களால் முடியை அவர் கோதிவிட, கொத்துக் கொத்தாக முடி கையோடு வந்தது. தலையில் வழுக்கை விழத் தொடங்கியது. “எல்லாம் சரியாகிவிடும். என்னுடைய கூந்தல் முன்புபோல் அழகாக வளரும்” என்று புன்னகைத்தபடியே அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார் லீ. டான் லீயின் கடினமான நாட்களில் உறுதுணையாக இருந்தவர் அவருடைய நண்பர். ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதெல்லாம் லீயின் படுக்கையில் நூற்றுக்கணக்கான முடிகள் உதிர்ந்திருக்குமாம். இதனால் லீக்குக் கவலை ஏற்படக் கூடாது என்பதற்காக அவருடைய நண்பர் லீயின் படுக்கை விரிப்பை வெள்ளை நிறத்திலிருந்து கறுப்பு நிறத்துக்கு மாற்றினார்.
போர் வீராங்கனை
முடி அதிகமாக உதிர்ந்ததால், மொட்டை அடுத்துக்கொள்ள லீ முடிவுசெய்தார். மொட்டை அடிக்கத் தொடங்கியபோது தைரியமாகத்தான் இருந்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே உடைந்து அழத் தொடங்கினார். லீக்கு ஆறுதலாக அவருடைய நண்பர், “நீ மிகவும் தைரியமானவள். நீ இப்போதும் அழகாகத்தான்
இருக்கிறாய்” எனக் கூறினார். இதைக் கேட்டதும் லீ அழுதுகொண்டே சிரித்தார். ரத்தப் புற்றுநோயால் லீயின் உடல்நிலை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டேவந்தது. கீமோதெரபி சிகிச்சையால் நகங்கள் நிறம் மாறத் தொடங்கின. இதிலிருந்து விடுபட நினைத்த லீ, மீண்டும் யூடியூப் வீடியோக்கள் மூலம் அழகுக்கலைப் பயிற்சியை வழங்கத் தொடங்கினார். புற்றுநோய் பாதித்த நிலையிலும் டான் லீயின் இந்தச் செயலுக்கு அவருடைய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
மொட்டைத் தலையுடன் கேமராவின் முன் அமர்ந்து மேக்கப் போடும் லீயின் கண்களில் கம்பீரம் தெரிகிறது. “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இந்த அழகுக்கலை வீடியோ உதவியாக இருக்கும் என நம்புகிறேன். தொடக்கத்தில் சிகிச்சைக்காகக் கழுத்தின் கீழ் ஃபிஸ்டுலா பொருத்தப்பட்டபோது எனக்கு அவமானமாக இருந்தது. ஆனால், இப்போது இதைப் பார்க்கும்போது நான் என்னை ஒரு போர் வீராங்கனையாக உணர்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட பதக்கமாக இதைப் பார்க்கிறேன்” என்கிறார் லீ. ரத்தப் புற்றுநோயால் ஒருநாள் மரணத்தைத் தழுவ நேரிடும் என்பது லீக்குத் தெரியும். ஆனால், லீ தன் புன்னகையை ஒருநாளும் மறைத்து வைக்கவில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT