Published : 30 Jun 2019 11:21 AM
Last Updated : 30 Jun 2019 11:21 AM
பாலினச் சமத்துவத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துவருகிறது. வாக்குரிமை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை என அவர்களைச் சமூகத்துடன் உள்ளடக்கும் நடவடிக்கைகள் விளிம்பு நிலையிலிருந்து அவர்களை மேம்படுத்தியுள்ளன. இந்த மாற்றத்தால் பலர் தங்களை வெளிப்படையாக மாற்றுப் பாலினத்தவராக அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் தடம் பதித்துவருகிறார்கள்.
மூன்றாம் பாலினத்தவருக்கு மேலும் பெருமைசேர்க்கும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாகக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார் திருநங்கை நளினா பிரஷிதா. சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த முதல் திருநங்கை என்ற பெருமையும் நளினாவுக்கு உண்டு.
லயோலா கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் ஜூன் 21 அன்று நடைபெற்றது. காட்சித் தொடர்பியலில் பட்ட மேற்படிப்பு பயிலும் நளினா, மாணவர் பேரவையின் இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டார். மாணவர்கள் அதிகமாக இருக்கும் லயோலா கல்லூரியில் 500 மாணவிகள் படிக்கின்றனர். பெண்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய இந்தப் பதவிக்கு 400-க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இதில் நளினாவுக்கு 328 பேர் வாக்களித்துள்ளனர். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு 97 வாக்குகள் கிடைத்த நிலையில் 231 வாக்குகள் வித்தியாசத்தில் நளினா வெற்றிபெற்றுள்ளார். கல்லூரி வரலாற்றில் இந்தப் பதவிக்கு இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. மாணவர் பேரவையின் மற்ற பொறுப்புகளுக்குத் தேர்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஆண்கள் என்ற நிலையில் நளினாவின் வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.
ஊடகக் கனவு
நளினாவின் சொந்த ஊர் திண்டுக்கல். படிப்பில் ஆர்வம் அதிகம். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றிருக்கிறார். 11-ம் வகுப்புப் படித்தபோது தன்னைத் திருநங்கையாக உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். வீட்டில் தன்னைப் பற்றித் தெரிவித்தபோது திருநங்கையாக மாறிய பலரைப் போலவே இவரும் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். “படிப்பு பாதியில் நின்றது. தனித் தேர்வராக ப்ளஸ் டூ படித்து முடித்தேன்” என்று கூறும் நளினா, ஊடகத்தின் வலிமையை நன்கு உணர்ந்திருக்கிறார். “திருநங்கைகளைப் பற்றிய தவறான புரிதல் பொதுமக்களிடையே அதிகமா இருக்கு. அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஊடகத்தின் மூலம் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அப்படித்தான் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது” என்று தன்னுடைய கனவு குறித்து உற்சாகம் பொங்கப் பேசுகிறார்.
லயோலா கல்லூரியில் சேர்வதற்கான முயற்சியில் இறங்கியபோதுதான் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துபோயிருப்பதை நளினா அறிந்திருக்கிறார். திருநங்கையாக மாறிய பிறகு சூட்டிக்கொண்ட பெயரும் மதிப்பெண் சான்றிதழில் இருந்த பெயரும் வெவ்வேறாக இருக்கவே அதைத் திருத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், அழகுக்கலை நிபுணர்
பயிற்சியை முடித்த நளினா, அதன் மூலம் வந்த வருவானத்தில் படிப்புச் செலவைச் சமாளித்திருக்கிறார். வார இதழ் ஒன்றில் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றபோது திருநங்கைகள் குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும் அதிகம் எழுதி அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். திருநங்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யூடியூப் சேனல் ஆரம்பிப்பது, விளம்பரப் படங்கள் எடுப்பது போன்றவற்றைத் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களாக நளினா கொண்டிருக்கிறார்.
மேம்படுத்தும் திட்டங்கள்
கல்லூரி மாணவப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நளினா, மாணவர் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாகச் சொல்கிறார். “பெண்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டுப் பயிற்சிகளை வழங்குவது, அதிகரித்துவரும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்குகளை நடத்துவது,
பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவது, ஆபத்துக் காலத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புகளை நடத்துவது போன்றவற்றைச் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் நளினா பிரஷிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT