Published : 30 Nov 2014 02:55 PM
Last Updated : 30 Nov 2014 02:55 PM
பராக் ஒபாமாவை 2012-ம் ஆண்டின் மிகச் சிறந்த மனிதர் என்று டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது. அவருடன் 5 பேர் சிறந்த மனிதர் போட்டியில் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஃபேபி யோலா ஜியானோட்டி. இவர் அரசியல்வாதியோ, நடிகையோ, ஃபேஷன் டிசைனரோ, போராட்டக் காரரோ அல்ல. பிறகு யார் இந்த ஃபேபி யோலா?
இத்தாலியைச் சேர்ந்த 54 வயது அணுத்துகள் இயற்பியல் விஞ்ஞானி. உலகம் முழுவதும் அறிவியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி (CERN) நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக 2016-ம் ஆண்டு பதவி ஏற்க இருக்கிறார். அறிவியல் துறையில் மிக உயர்ந்த பதவிக்கு முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்! ATLAS என்ற அணுத்துகள் ஆராய்ச்சியில் 38 நாடுகளில் இருந்து 175 நிறுவனங்களைச் சேர்ந்த 3000 இயற்பியலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை 2009-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை வகித்தவர் இவர். கடவுள் துகள் எனப்பட்ட ஹிக்ஸ் போஸான் அணுத்துகள் கண்டுபிடிப்புகளின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டவர்.
ஃபேபியோலா 1962-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் பிறந்தார். அவருடைய அப்பா புவியியல் ஆராய்ச்சியாளர். தன் மகளை அழைத்துக்கொண்டு மலைகள் மீது முடிவில்லாப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். இதனால் ஃபேபியோலாவுக்கு இயற்கை மீது ஆர்வம் வந்தது. இசை, நடனம் போன்றவற்றையும் கற்றுக்கொண்டார். பள்ளியில் கிரேக்கம், லத்தீன், இலக்கியம் பயின்றார். கல்லூரிப் படிப்புக்குத் தத்துவத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் விரைவில் இயற்பியல் மீது ஆர்வம் திரும்பியது. அறிவியல் ஆராய்ச்சி என்பது நேரம், காலம் பார்க்கக்கூடிய பணி கிடையாது. ஆனாலும் ஃபேபியோலா நன்றாக பியானோ வாசிக்கிறார், விதவிதமாக சமையல் செய்கிறார், நிறையப் படிக்கிறார்.
கலைகளில் இருந்த ஆர்வம் எப்படி அறிவியலுக்குத் திரும்பியது?
என்னுடைய அடிப்படையான கேள்விகளுக்கு இயற்பியலால்தான் பதில் அளிக்க முடியும். அது இறுதியான பதிலாக இல்லாவிட்டாலும்கூட, ஏற்கெனவே இருந்த ஒரு விஷயத்திலிருந்து ஒரு அடி முன்னேறக்கூடிய பதிலாக இருக்க முடியும் என்பதை உணர்ந்ததும் என் ஆர்வம் இயற்பியலுக்குத் திரும்பியது. இசையும் கணிதக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். அதே நேரத்தில் இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கும் கற்பனையும் ஃபேண்டஸியும் அவசியம். மாமேதை ஐன்ஸ்டைனும்கூட வயலினும் பியானோவும் வாசிப்பார்!
ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறீர்கள். இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அறிவியலில் பொதுவாக எந்தக் கண்டுபிடிப்புமே ஒரு தனிப்பட்ட நபரின் முயற்சியில் உருவான கண்டுபிடிப்பாகப் பெரும்பாலும் இருப்பதில்லை. நமக்கு முன்னால் பலர் இதில் வேலை செய்திருப்பார்கள். அவர்கள் செய்துவைத்த ஆய்வுகளில் இருந்துதான் அடுத்தவர்கள் தொடர்ந்து ஆராய்வார்கள். அப்படித்தான் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பும். இது பலருடைய உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. எந்த ஒரு கண்டுபிடிப்பையுமே உலகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் ஒரு பெரிய காலடியாகவே நான் பார்க்கிறேன்.
ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அறிவியல் மீது ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அறிவியலில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
அறிவியலைப் புரிந்துகொண்டால் மிகவும் சுவாரசியமான விஷயமாக மாறிவிடும். குழந்தைகள் மீது எந்த விஷயத்தையும் திணிக்கக் கூடாது. அறிவியல் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் இருந்தால் தாராளமாக இந்தத் துறைக்கு வரலாம். மற்ற எந்தத் துறையையும்விட அறிவியலுக்கு அதிக உழைப்பு, அதிகப் பொறுமை, விடாமுயற்சி தேவைப்படும். உங்கள் உலகமே அதுவாக மாறிவிடும். முக்கியமாகத் தோல்விகளைக் கண்டு கலங்கக் கூடாது. இவற்றுக்கெல்லாம் தயாராக இருந்தால் உங்களை இரு கரம் நீட்டி வரவேற்க அறிவியல் உலகம் காத்திருக்கிறது. உலகத்தை ஒரு அடி முன்னேற்றும் முயற்சியில் நம் பங்களிப்பும் இருக்கிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான, நிறைவான விஷயம்!
உலகம் முழுவதும் அறிவியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?
நிச்சயம் சமூகமும் குடும்ப அமைப்பும்தான் காரணமாக இருக்க முடியும். அறிவியலுக்கு ஆர்வமாக வருகிற பெண்கள் பாதியிலேயே காணாமல் போவது அவர்களுக்கு இருக்கும் குடும்பப் பொறுப்புகளால்தான். அறிவியலை விடக் கணிதத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.
எல்லோருக்கும் நீங்கள் ரோல் மாடலாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் ரோல்மாடல்?
நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். ரீட்டா லெவி மோண்டால்சினி இத்தாலியைச் சேர்ந்தவர். நரம்பியலாளர். ஒரு பெண்ணாகவும் யூதராகவும் அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். நோபல் பரிசு பெற்ற ரீட்டா, 103 வயது வரை வாழ்ந்தவர். சமையலறையில் சூப்பையும் பக்கத்து அறையில் கதிரியக்க ஆய்வையும் செய்த மேரி க்யூரியும் எனக்கு விருப்பமானவர்.
கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளரான உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?
கடவுள் துகள் என்று நாங்கள் பெயரிடவில்லை. பத்திரிகைகள் தங்கள் விற்பனைக்காக வைத்துக்கொண்ட பெயர்தான் அது. எனக்கு மதங்கள் மீது நம்பிக்கை இல்லை. இயற்பியல் கடவுளை இதுவரை நிரூபிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
எந்த விஷயத்திலும் புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரேவிதமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தால் அங்கே புதிய விஷயங்கள் பிறக்காது. அறிவியலோ, கலையோ, சமையலோ எதுவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்கள் கற்பனையைச் சேர்த்துப் புதுமையான விஷயமாக மாற்ற முயலுங்கள். வாழ்க்கையும் சுவாரசியமாக இருக்கும். சமூகத்துக்கும் பயன்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT