Last Updated : 30 Jun, 2019 10:43 AM

 

Published : 30 Jun 2019 10:43 AM
Last Updated : 30 Jun 2019 10:43 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 12: வீடு கூடும் விழா

 

அமுதாவுக்கு நல்லபடியாகக் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறந்ததும் அமுதா வேறொரு அமுதாவாக மாறிவிட்டாள். தன் கணவனைப் போல் சிவப்பு உருட்டையாகச் சீனிக்கட்டியாகப் பிறந்த பிள்ளையைப் பார்த்த உடனே, சற்று முன் வலித்த வலியெல்லாம் அவளுக்கு மறந்தேபோனது. இன்னும் அஞ்சாறு பிள்ளைகளைக்கூடப் பெற்றுக்கொள்ளலாம் போலிருந்தது. அப்படியொரு ஆசை அவளுக்கு மகன் மீது உண்டாயிற்று.

அதோடு, தலைப் பிள்ளையாக ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டாள் என்று ஊர்க்காரர்கள் இவளைப் பாராட்ட, அமுதாவுக்கு உண்டான பெருமையைச் சொல்ல முடியாது. பிள்ளை பெற்றது இருக்கட்டும். இனி மருந்து சாப்பிட்டு ஆக வேண்டும். அப்போதெல்லாம் இன்றைய காலம் மாதிரி ஊசி, மாத்திரை என்று எதுவும் கிடையாது. மருந்துப் பொருட்களை அரைத்தும் இடித்தும் கொடுப்பார்கள்.

மஞ்சள் அழகி

பிள்ளை பெற்றவளுக்காகத் திப்பிலி, சேதாரக் குச்சி, சித்தரத்தை, ஓமம், பெருங்காயம் என எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்துக் காயவைத்து உரலில் போட்டு இடிப்பார்கள். ஒருமுறை இடித்தால் போதாதென்று சொளகு வைத்துத் தெள்ளித் தெள்ளிப் பொட்டாக இடிப்பார்கள். அப்படி இடித்தபின் அதோடு கருப்பட்டி வட்டுகள் இரண்டு, மூன்றைப் போட்டு இடிப்பார்கள். மருந்தையும் கருப்பட்டியையும் சேர்த்து இடிக்க, அது அப்படியே இறுகிவிடும். அதை எடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டுவார்கள். ஏற்கெனவே செக்கில் கொடுத்து ஆட்டிவைத்திருக்கும் நல்லெண் ணெய்யில் இந்த மருந்து உருண்டையைப் போட்டுவைப்பார்கள். 30 நாளைக்குத் தினமும் காலையில் இரண்டு உருண்டைகளைச் சாப்பிட்டே ஆக வேண்டும். முடியாது என்று சொல்லவோ மறுக்கவோ முடியாது. பெருசுகள் படுத்தி எடுத்துவிடும். அது மட்டுமல்ல; இரண்டு குடம் பிடிக்கும் மொடாப் பானையில் உடம்பு சூடு பொறுக்க அதிலும் கொஞ்சம் கூடுதல் சூட்டோடு வெந்நீர் வைப்பார்கள். அந்த வெந்நியில் இரண்டு பிடியளவு புளிய இலையைப் பிடுங்கிப் போடுவார்கள். இடித்த மருந்து உடலின் உள்ளே உள்ள காயத்துக்கு. குழந்தை பெற்றவளை அங்கனக்குழியில் வைத்து வெந்நியை உடம்பில் வீசி வீசி அடித்து ஊற்றிய பின், உடம்பில் ஊற்றிக் குளிப்பாட்டுவார்கள். இப்படி குளிப்பாட்டும்போது அம்மியில் கஸ்தூரி மஞ்சள் செறட்டை நிறைய இருக்கும். அதை நெற்றியிலிருந்து பாதம்வரை பூசிக் குளிப்பாட்டுவார்கள். இதற்கென்றே சொந்த பந்தமென்று இரண்டு, மூன்று பெருசுகள் வந்துவிடுவார்கள். அந்த வழி போனாலே மஞ்சள் வாசனை நெஞ்சை அள்ளும். அப்படி இருக்கும்போது பிள்ளை பெற்றவளைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? அவள் கருப்பாக, சிவப்பாக எப்படி இருந்தாலும் சரி. மூன்று மாதத்துக்கு மஞ்சள் அழகியாகத்தான் இருப்பாள்.

குழந்தைக்கும் மருந்து

பிள்ளைகளுக்கும் லேசாக மஞ்சள் தடவிதான் குளிக்கவைப்பார்கள். தாய் மருந்து உருண்டையை 30 நாளைக்குத் தின்றாள் என்று சொல்ல முடியாது. பிள்ளைக்கும் 30 நாளுக்கு மருந்து உண்டு. தினமும் தாய் பாலில் ஒரு சங்கு எடுத்துக்கொள்வார்கள். அதில் பூசணி, சுரை, பீர்க்கை, கோவை, சிறுகீரை என்று ஏதாவது ஒன்றை ஒரு பிடி பறித்து, அதை நன்றாகக் கசக்கி ஒரே ஒரு பொட்டு அதன் சாற்றைத் தாய்ப்பாலில் விடுவார்கள். பிறகு அரிவாளை அடுப்பில் காயவைத்து அதன் நுனியை அந்தப் பாலில் முக்கி எடுத்தால் பால் சூடாகிவிடும். அந்தப் பாலைக் குழந்தைக்குச் சங்கில் வைத்து ஊட்டுவார்கள். அதைக் குடித்துவிட்டு நாள் முழுக்க அந்தக் குழந்தை அம்மாவிடம் பாலை குடிக்கவும் கழிசல் எடுக்கவுமாக இருக்கும்.

ஏழாவது நாள், ஒன்பதாவது நாள் என்று வீடு கூடுவார்கள். அதாவது ‘வீடு கூடுவது’ என்பது அத்தனை நாளும் பிள்ளையும் பிள்ளை பெற்றவளும் வீட்டுக்குள் வராமல் ‘தீட்டு’ என்று வெளியே இருக்கும் ஒரு அறையில் இருப்பார்கள். அறை என்று ஒன்று அப்போதும் யார் வீட்டிலும் அவ்வளவாகக் கிடையாது. குழந்தை பிறந்துவிட்டது என்று தெரிந்ததுமே வாசலில் மண்ணைக் கொத்தி இறுகவைத்துச் சாணி போட்டு நன்றாக மெழுகி தென்னங் கீற்றையோ பனை ஓலையையோ வைத்து ஒரு அறையாகக் கட்டிவி டுவார்கள். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் மண் சுவர்வைத்து கூரை மேய் வார்கள்.

தெருவே மணக்கும் சாம்பிராணி

இந்த ‘வீடு கூடுவது’வரை பிள்ளையும் அதன் தாயும் அந்த வீட்டில்தான் இருக்க வேண்டும். வீடு கூடிய பிறகு வீட்டுக்குள் வரலாம், கட்டிலிலோ தரையிலோ பழம் புடவைகளையோ பாயையோ விரித்துப் படுக்கலாம். அதுவரை புதிதாய் வெளியே கட்டிய வீட்டில் வைக்கோலைப் பிரித்து அதன்மேல் துணிகளை விரித்துத்தான் படுத்திருப்பார்கள். சாப்பாடும் சைவச் சாப்பாடுதான். அவரை, பீர்க்கை, கத்தரி, சுரைக்காய், புடலை என்று எல்லாக் காய்களும் கேட்காமலே இவர்களின் வீடு தேடி வந்துவிடும். அந்தக் காலத்தில் எங்கும் தோட்டங்களாக இருந்ததால் தோட்டக்காரர்கள் பிள்ளை பெற்றவளின் வீட்டுக்குப் பிஞ்சுக்காயாகப் பறித்து ஆட்கள் மூலமாகக் கொடுத்துவிடுவார்கள். முக்கால்வாசி பாசிப் பருப்பும் பீர்க்கங்காயும்தான் பிள்ளை பெற்றவளுக்கு. அதுவும் அரை உப்பும் அரை உறைப்புமாகப் போடுவார்கள்.

இந்த வீடு கூடிய நாளில் கோழி அடித்து முதல் சாற்றை இறுத்து, அதில் நல்லெண்ணெய்யை ஊற்றிக் குடிக்கவைப்பார்கள். காலையில் எண்ணெய்க் குளியலும் உண்டு. அதோடு கறிக் குழம்பும் சோறும் போடுவார்கள். அது போதாதென்று ஒரு கை நிறைய பூண்டை உரித்துக்கொடுப்பார்கள். அவ்வளவு பூண்டையும் உரித்து ஒரு வட்டுக் கருப்பட்டியைக் கடித்துக்கொண்டு தின்று முடிக்க வேண்டும். தினமும் தாயையும் மகனையும் குளிப்பாட்டுவதால் சாம்பிராணி வாடை அவர்கள் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் தெருவே மணக்கும்.

இந்த ‘வீடு கூடிய’ அன்று பேறுகாலம் பார்த்தவர்களைக் கூட்டிவந்து வாழையிலையை விரித்து முதலில் நல்லெண்ணெய்யை அவர்களின்  கைநிறைய ஊற்றிக் கருப்பட்டியைத் தட்டிப்போட்டு நாலு அகப்பை சோறு வைப்பார்கள். அந்தக் காலத்தில் கருப்பட்டியைத் தட்டிப்போட்டு எண்ணெய் ஊற்றுவது முதல் விருந்தாக இருந்தது. பிறகு கறிக்குழம்பும் சோறுமாக வயிறு நிறையச் சாப்பிடுவார்கள். கைநிறைய வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை, பொடி போடுபவர்களுக்கு அதையும் வாங்கிக் கொடுப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் சேலையும் எடுத்துக்கொடுப்பார்கள். பிறகு பிள்ளை பெற்றவளிடம் வெற்றிலை பாக்கோடு சிறு சொம்பைக் கொடுத்து அனுப்புவார்கள். வெற்றிலை பாக்கைக் கிணற்றில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டுச் சிறு வாளியில் கொஞ்சமாகத் தண்ணீர் இறைத்து, கொண்டுபோன சிறு சொம்பில் மோந்து இடுப்பில் வைத்துக்கொண்டு வருவாள். அதை வீட்டுக்குள் வைத்துவிட்டுப் படப்பில் ஒரு பிடி கூளம் பிடுங்கி மாடுகளுக்குப் போடுவாள். பிறகு உரலையும் உலக்கையையும் தொட்டுக் கும்பிடுவாள். பிறகு ஆட்டுக்கல்லையும் தொட்டுக் கும்பிட்டு வருவாள். இப்படிச் செய்வதால் இன்னும் கொஞ்ச நாளில் அவள் எல்லா வேலையையும் செய்யலாமென்று அர்த்தம்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x