Published : 27 Aug 2017 03:02 PM
Last Updated : 27 Aug 2017 03:02 PM
ம
ன்னராட்சியில் தொடங்கி தற்போதுவரை இரு நாடுகளுக்கு இடையிலோ இரு குழுக்களுக்கு இடையிலோ போர் நடைபெறும்போதெல்லாம் பெண்களும் குழந்தைகளும்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பின்னாட்களில் வெவ்வேறாகத் திரித்துச் சொல்லப்பட்டாலும் வரலாற்றில் சில கறுப்பு நிகழ்வுகளை அழித்தெடுத்துவிடவே முடியாது. ஆறாத காயங்களைச் சுமந்திருப்பவர்கள், தங்களுக்கோ தங்கள் முன்னோருக்கோ நேர்ந்த கொடூரத்தை நினைவுபடுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். தென்கொரிய மக்களும் தற்போது அதைத்தான் செய்திருக்கிறார்கள். சியோல் நகரில் ஓடும் பேருந்துகளில் பயணிகளோடு ஒரு இளம்பெண்ணின் சிலையும் பயணிக்கிறது. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெறுமையாக அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண் சிலை யாருடையது?
இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் போரின் போதும் தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு லட்சம் சிறுமிகளும் பெண்களும் அடிமைகளாகச் சிறைபிடிக்கப்பட்டனர். ‘ஆறுதல் மகளிர்’ (comfort women) என்றழைக்கப்பட்ட அவர்கள், ஜப்பான் நாட்டுப் பாலியல் விடுதிகளில் அடைத்துவைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டனர். தங்கள் நாட்டின் மீது விழுந்துவிட்ட இந்தக் களங்கத்தைத் துடைக்கும் நோக்கத்துடன், கடந்த 2015-ம் ஆண்டின் இறுதியில் ஜப்பான் மன்னிப்புக் கோரியதுடன் பாதிப்புக்குள்ளான பெண்களின் வாழ்க்கையைச் சீரமைக்க சுமார் 9 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதாகவும் அறிவித்தது. இனி இந்த விஷயத்தில் ஜப்பானை அவதூறாகச் சொல்லக் கூடாது என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டது. தென்கொரியப் பெண்களுக்கு நேர்ந்தது எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாத கொடுமை என்றாலும் ஜப்பானின் கோரிக்கைக்குத் தென்கொரிய அரசு சம்மதித்தது.
புதைக்கப்பட்ட அநீதி
ஜப்பானின் இந்த நிதியுதவி அறிவிப்பு குறித்து, “நான் பழைய நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். அடிப்படை மனித உரிமைகள்கூட மறுக்கப்பட்டு நாங்கள் அனைத்தையும் இழந்து நின்றோம். இந்த நிதியுதவி என்னைத் திருப்தியடையச் செய்யாது” என்று பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் தென்கொரியாவைச் சேர்ந்த 88 வயது யு ஹீ நம். ஜப்பானில் கம்ஃபர்ட் விமனாக அடைத்துவைக்கப்பட்டு இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
ஆனால், ஜப்பானின் அறிவிப்பை இரண்டே மாதங்களில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷின்ஸுகே சுகியாமா. ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய அவர், “தென்கொரியப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக ஜப்பான் நடத்தவில்லை. அப்படி நடந்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார். ஜப்பானின் இந்தச் செய்கையால் கோபமடைந்த தென்கொரிய அரசு, தங்கள் நாட்டுப் பெண்களுக்கு ஜப்பான் இழைத்த அநீதியை மீண்டும் உலகுக்கு அறிவிக்க முடிவெடுத்து, நாடு முழுவதும் கம்ஃபர்ட் விமன் சிலைகளை அமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் சியோல் மாநகரப் பேருந்துகளில் கம்ஃபர்ட் விமன் சிலையை அமைப்பது.
சியோல் நகரில் ஐந்து பேருந்துகளில் இந்தச் சிலையை அமைத்திருக்கும் ஒரு போக்குவரத்து நிறுவனம், இரண்டாம் உலகப் போரின்போது இரண்டு லட்சம் தென்கொரியப் பெண்கள் அனுபவித்த துயரத்தை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ம் தேதியைப் பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.
தியாகத்துக்கு அஞ்சலி
பேருந்துகளில் அமைக்கப்பட்டிருக்கும் கம்ஃபர்ட் விமன் சிலைகள் செப்டம்பர் இறுதிவரை நகரம் முழுவதும் சுற்றிவரும். பிறகு நாடு முழுவதும் ஆங்காங்கே நிரந்தரமாக வைக்கப்படும். இவை தவிர ஆளுயர வெண்கலச் சிலை ஒன்று, இரண்டாம் உலகப் போரால் உருக்குலைக்கப்பட்ட இந்தப் பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிறுவப்படும் என்று தென்கொரிய அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கொடுமையை அடுத்த தலைமுறையும் தெரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.
நேர்ந்துவிட்ட தவறை வேறு எதனாலும் நேர் செய்ய முடியாது என்கிற நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காவது ஜப்பான் ஏதாவது செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போன்ற அதன் நடவடிக்கை, தென்கொரியப் பெண்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது.
“இந்தப் பெண்ணின் சிலையைப் பார்த்ததுமே உடைந்து போய்விட்டேன். இவருக்கும் என் வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பெண்கள் அனுபவித்த கொடுமைகளைக் கற்பனை செய்து பார்ப்பதே திகிலூட்டுவதாக இருக்கிறது” – இப்படிச் சொல்லியிருக்கிறார் பேருந்தில் கம்ஃபர்ட் விமன் சிலையைப் பார்த்த 19 வயது தென்கொரியப் பெண். இருக்கும்போது மட்டுமல்ல; இறந்த பிறகும் பெண்களின் போராட்டம் ஓயாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT