Published : 13 Aug 2017 01:37 PM
Last Updated : 13 Aug 2017 01:37 PM
பெ
ண்களின் வாழ்க்கை முழுவதுமே ஏதோவொரு வன்முறையால் ஆனதுதான். எனினும் பருவ வயதில் அவள் அனுபவிக்கும் இன்னல்கள், இன்றைக்குப் பன்மடங்காகி வருகின்றன. இந்த நாட்டில் இந்திய ஆட்சிப் பணியாளர் ஒருவருடைய மகளுக்குக்கூட தன்னைப் பின்தொடர்ந்து சீண்டி பாலியல் தொந்தரவு கொடுக்கும் இளைஞனைச் சட்டப்படி தட்டிக் கேட்க முடியவில்லை என்பது இன்றைய செய்தி.
இங்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சமுதாய அங்கீகாரத்தைச் சார்ந்தே இருக்கிறது. எனவே, சமுதாய மதிப்பீடுகள் மிக முக்கியமாகின்றன. பெண் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்குச் செல்கிறாள். கல்லூரிக்குச் செல்கிறாள். பணி நிமித்தம் செல்கிறாள். மிக அரிதாகத் தனியாக அல்லது தோழிகளுடன் அல்லது ஆண் நண்பர்களுடன் தனது மகிழ்ச்சிக்காக வெளியில் செல்கிறாள். ஆனால், வெளி உலகத்தின் ஒவ்வோர் பகுதியிலும் ஒரு பெண் என்பதற்காக, அவளுக்குத் தனித்த துன்பங்கள் காத்திருக்கின்றன. பேருந்து நிறுத்தம் தொடங்கி எங்கும் பரவி நிற்கிறது இந்தத் துன்புறுத்தல் வலை. தன்னைத் தொடர்ந்து உற்றுப் பார்ப்பது, பின்தொடர்வது போன்றவற்றைப் பிறரிடம் சொல்லக்கூட முடியாத அளவில், அவளின் மனத்தில் அச்சமும் நிம்மதியின்மையும் நிரம்பிக் கிடக்கின்றன.
வாயடைப்பு
பெண்கள் பலர், ‘அவன் உன்னைப் பார்க்கிறான் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ அவனைப் பார்க்காதே’ என்று அறிவுரை சொல்லிக் கேட்டிருப்பீர்கள். முதலில் சரி என்பது போலத் தோன்றும் இந்த அறிவுரை, உண்மையில் நியாயமற்றது. தன்னை ஒருவன் பின்தொடர்வதை, உற்றுப் பார்ப்பதை எந்தப் பெண்ணாலும் மிக இயல்பாகத் தெரிந்துகொண்டுவிட முடியும். ஆனால், இப்படி எதற்கெடுத்தாலும் அறிவுரை சொல்லும் சமுதாயத்தில், அவள் யாரிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்வாள்?
படிப்பதற்கும் வேலைக்குப் போவதற்கும் இருக்கும் உரிமை தனக்கும் தன் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒன்றல்ல, வேறு வேறானது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக நன்றாகவே தெரியும். தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அனுமதி எந்த நேரத்திலும் ரத்துசெய்யப்படலாம் என்பதும் அவளுக்குத் தெரியும். இந்நிலையில் இது போன்ற இடையூறுகள் குறித்து வெளியில் தெரிவிப்பது எந்த அளவுக்குச் சரியான அல்லது விவேகமான செயலாக அமையும்? வேறு வழியில்லாமல், பல நேரம் இது மாதிரியான சூழல்களில் அவர்கள் மௌனமாகிவிடுகிறார்கள்.
நள்ளிரவு யாருக்கு?
அவ்வாறில்லாமல் துணிந்து காவல்துறைவரை போகிற பெண்களைப் பார்த்து, ‘நள்ளிரவில் ஏன் வெளியே வருகிறீர்கள்’ என்று இந்த நாட்டின் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கேட்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் எவ்வளவு நேர்மையற்றவர்கள்? அந்நியச் செலவாணிக்காக இரவு பகல் பாராமல் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை இங்கே தொடங்க அனுமதிப்பார்கள். அங்கு பணிபுரிய இவர்களுக்குப் பெண்கள் வேண்டும். ஆனால், அதன்பின்னும்கூட நள்ளிரவு அவர்களுக்குச் சொந்தமில்லை. இவர்களுக்குச் சுதந்திர ஒப்பந்தம் போடவும் வரிக் கொள்கையை அறிவிக்கவும் மட்டுமே நள்ளிரவு இவர்களுக்கு வருகிறது போலும்.
சரி. நள்ளிரவில் நடமாடினால் பெண்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாது என்று பேசுகிற இவர்கள் பகலில் பாதுகாப்பை முழுமையாக உறுதிசெய்து விட்டார்களா என்ன? பல பெண்களின் படுகொலைகள் பட்டப்பகலில் நடக்கவில்லையா? உண்மையில் பாலியல் சீண்டல் சம்பவம் ஒன்று நடந்தவுடன், இவர்கள் அந்தப் பெண் தனது உல்லாசத்துக்காகத்தான் வெளியில் சென்றாள் என்பது போன்ற ஒரு பிம்பத்தை அவசரஅவசரமாகக் கட்டமைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. இவர்கள் கட்டமைக்கிற சுதந்திர பெண்ணின் பிம்பத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத சாதாரண பெண்கள்தான் மிக அதிக அளவில் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
இவ்வாறு பெண்கள் மீது திணிக்கப்படும் மௌனமும் அவர்களுக்கு எதிராகவே விவரம் புரியாத பையன்கள் அல்லது ஆண்களால் மொழிபெயர்க்கப்படுகிறது. இன்றைய இளைஞர்களிடம் வளர்ந்துவரும் சில உளவியல் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியாக வேண்டும். பெண் என்னும் பிம்பம் அவர்கள் மனதில் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் வேறு. அவர்கள் மனதிலிருக்கும் பெண் இன்றும் அச்சத்தையும் நாணத்தையும் அணிகலனாக அணிந்தவள். ஆனால், தனது சூழலைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னளவில் சுதந்திரமாக இயங்கத் துணியும் பெண்களின் தோற்றமும் நடவடிக்கையும், தங்களது ஈகோவுக்குச் சவாலாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். பெண்களை ஏதோவொரு வகையில் தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே, காதல், காமம் இது இரண்டையும் தாண்டி வன்ம உணர்வுகளோடு இவர்கள் பெண்களுடன் பயணிக்கிறார்கள்.
கட்டமைக்கப்படும் வன்மம்
காதலும் காமமும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. ஆனால், இந்த வன்ம உணர்வு? பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருக்கும் பல நடிகர்களைத் தாக்கியும் தூக்கியும் அன்றாடம் இணையதளங்களில் எழுதிக் குவிக்கப்படுகின்றன. அதில் தங்களுக்குப் பிடிக்காத பெண்களைப் பற்றி எழுதும்போது, அவர்கள் பயன்படுத்தும் சொற்கள் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. அவர்கள் யாரைத் தாக்க விரும்புகிறார்களோ அவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதை அசிங்கமான சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறார்கள். ஒரு பெண்ணின் உடம்பு மீதுள்ள ஆசையால் அல்ல, மாறாக அவள் மீது ஏற்படும் கோபத்தாலும் வெறுப்பாலுமே ஓர் ஆண் அவளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறான்.
இந்த இடத்தில்தான் பாலியல் வன்முறைக்குக் காரணம் பெண்கள் அணியும் ஆடை என்ற வாதத்தை தீவிரமாக மறுக்க வேண்டியதாக இருக்கிறது. ஆணின் மன அமைப்பை பகுப்பாய்வு செய்து சீரமைக்க முயலாமல், பெண்ணின் உடை மீது திசைதிருப்புவது எப்படிச் சரியாகும்? இன்னொரு புறம் பெண்களுக்கு அளிக்கப்பட்ட உடையும் அலங்காரமும் ஆண்களைத் திருப்தி செய்யும் விதமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும்கூட பெண்ணின் தேர்வல்ல. அதுவே அவளுக்கு எழுதப்பட்ட விதியாக இருக்கிறது.
பையன்களுக்குள்ள மற்றொரு முக்கிய பிரச்சினை ஒரு பெண்ணின் மறுப்பில் தனது ஆண்மை இழிவுபடுத்தப்படுவதாகக் கருதிக்கொள்வது. உண்மையில் அவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டியது ‘ஆண்மை’ என்கின்ற பதமே, ஒரு போலி மயக்கம் என்பதைத்தான். அதனால்தான் பெரியார் “ஆண்மை என்கின்ற பதம், பெண்களால் அழிக்கப்பட்டாலொழிய பெண்களுக்கு விடுதலை இல்லை” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT