Published : 06 Aug 2017 03:13 PM
Last Updated : 06 Aug 2017 03:13 PM
இ
ன்று பல பெட்ரோல் பங்குகளில் பெண்களைப் பார்க்க முடிகிறது. சீருடை அணிந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புகிறார்கள், காசாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள். சென்னை மாதவரத்தை அடுத்துள்ள குமரன் நகரில் இருக்கும் எஸ்ஸார் கமல்தீப் எண்டர்பிரைசஸ் என்ற தனியார் பெட்ரோல் பங்கில் பத்துப் பெண்கள் வேலை செய்கின்றனர்.
இவர்களில் சிலர் குடும்ப வறுமையால் வேலைக்கு வந்தவர்கள். பெங்களூருவைப் பூர்வீகமாகக் கொண்ட வித்யா, பதினோராம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்தார். இவருடைய கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.
“என் கணவருக்கு உடம்பு சரியில்லாமப் போன பிறகு நானே குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. வீட்டு வேலைகள் முடிந்த பிறகு சும்மாதான் இருப்பேன். ஒருநாள் மாளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குப் போயிட்டு வரும்போது, இங்க பெட்ரோல் பங்க் இருந்ததைப் பார்த்தேன்.
சரி இங்க ஏதாவது வேலை கிடைக்குதான்னு கேட்டுப் பார்த்தேன். உடனே வேலை கொடுத்தாங்க. இப்போ மாசம் ஆறாயிரம் சம்பளம் வாங்குறேன். வீட்டு வாடகை, குழந்தைக்கு ஸ்கூல் பீஸ், வீட்டுப் பராமரிப்புன்னு நிறைய தேவைகளுக்கு இந்தப் பணம் கைகொடுக்குது. சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தேன். அதனால் பெட்ரோல் பங்க் வேலை கஷ்டமாக இல்லை” என்கிறார் வித்யா.
நம்பிக்கை தரும் வேலை
பொதுவாக பெட்ரோல் பங்க் என்றாலே பிரதான சாலைகளில்தான் அமைந்திருக்கும். ஆனால், இந்த பெட்ரோல் பங்க், குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“வேலைக்குச் சேர்ந்த புதுசுல சில சமயம் பெட்ரோல் போடும் குழாயைத் தவறுதலா கீழே போட்டு இருக்கேன். ஆனா இங்கே கூட வேலை பார்க்கிறவங்க, இது ஒண்ணும் பிரச்சினை இல்லை, பழகிட்டா சரியாகிடும்னு சொல்லுவாங்க” என்று சிரித்தபடியே சொல்கிறார் கவிதா. எட்டாம் வகுப்புவரை படித்திருக்கும் இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்துவருகிறார்.
“இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில் கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நடத்த முடியுது. எப்போ பார்த்தாலும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகிட்டு இருக்கற சராசரியான வாழ்க்கை எனக்குப் பிடிக்கலை.
வீட்டோட பொருளாதாரத் தேவைக்கு என்னோட பங்களிப்பும் இருக்கணும்னுதான் இங்கே வேலைக்குச் சேர்ந்தேன்” என்று சொல்லும் கவிதா, இங்கே கணக்காளராக இருக்கிறார்.
பிரியங்கா, தீபா, பிரியா என மூன்று சகோதரிகள் இந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்துவருகிறார்கள்.
“இங்கே வேலை செய்வதற்கு முன்பு கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தோம். ஆனா அங்கே சம்பளம் ரொம்ப குறைவு. அம்மா சமையல் வேலை செய்யறாங்க. அவங்க ஒருத்தரால எங்க மூணு பேரையும் படிக்கவைக்க முடியலை. அதனால் நாங்க வேலைக்கு வர ஆரம்பிச்சுட்டோம்.
என் அக்கா பிரியா, காலை ஷிப்டுக்கு வருவாங்க. நானும் தீபாவும் மதிய ஷிப்டுக்கு வருவோம். எங்க கல்யாணத்துக்கு நாங்க வாங்கும் சம்பளத்தில் இருந்துதான் சேமிக்கிறோம்” என்கிறார் பிரியங்கா.
பெண்களால் சாத்தியமான வெற்றி
பெண்களை அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தியதால் விற்பனை அதிகரித்திருப்பதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் விஷால் போரா சொல்கிறார்.
“பெண்கள் எந்த வேலையைச் செய்தாலும் கச்சிதமாக இருக்கும். எங்கள் நிறுவனத்தில் தற்போது பத்துப் பெண்களும் நான்கு ஆண்களும் உள்ளனர். சில வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு வருகிறார்கள். அதற்காகத்தான் ஆண்களையும் வேலைக்கு வைத்திருக்கிறோம். இல்லையென்றால் இது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் இடமாக இருந்திருக்கும்.
இங்கு அதிக அளவில் பெண்கள் பணிபுரிவதால் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் பங்கின் மீது நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. அதனால்தான் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்தாலும் முப்பது சதவீதம் அதிக விற்பனையை எங்கள் நிறுவனத்தால் அடைய முடிந்திருக்கிறது. இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியவர்கள் எங்கள் பெண் ஊழியர்கள்தான்” எனப் பெருமையாகச் சொல்கிறார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT