Published : 06 Aug 2017 03:22 PM
Last Updated : 06 Aug 2017 03:22 PM
லா
ட்வியா நாட்டில் சர்வதேசக் கலைஞர்கள் பங்கெடுத்த கலாச்சாரத் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் கர்னாடக இசைப் பாடகி காயத்ரி வெங்கட்ராகவன்.
லூதியானா, எஸ்டோனியா நாடுகளுக்கு இடையில் பால்டிக் கடலை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் அழகிய நாடு லாட்வியா. இந்த நாட்டின் தலைநகரம் ரீகா. அடர்ந்த காடுகளையும் பசுமையான சமவெளிகளையும் நீண்ட அழகிய கடலையும் கொண்ட நாடு இது. லாட்வியா 900 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன், அதன் பின் ரஷ்யாவின் கீழ் இருந்தது அந்நாட்டு மக்கள் பழமையைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். உலகப் போரில் சிதறுண்ட கட்டிடங்களையும் தேவாலயங்களையும் அழிந்த பழங்குடிப் பாடல்களையும் கலாச்சாரங்களையும் அதன் பழைமை மாறாமல் மீட்டெக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
“எங்கு பார்த்தாலும் மலர்கள். சந்திக்கும்போது பரஸ்பரம் பூச்செண்டு கொடுத்துக்கொள்ளும் அவர்களின் கலாச்சாரத்தை நேரில் பார்த்தபோது ரம்மியமாக இருந்தது” என்று சொல்லும் காயத்ரி, லாட்வியா நாட்டில் நடந்த இசை நிகழ்ச்சி குறித்து பகிர்ந்துகொண்டார்:
தியானமே ஆதாரம்
“உள்ளொளிப் பயணம் என்கிற அர்த்தம் தொனிக்கும் வகையில் ‘ஆட்லூயிஸம்’ என்ற இந்தக் கலாச்சார விழாவை நடத்தினர். பரபரப்பு நிறைந்த வாழ்க்கைச் சூழலில் நம்மை அமைதிப்படுத்தும் ‘மெடிடேடிவ் கான்சர்ட்’டாக இந்தத் திருவிழாவைக் கட்டமைத்திருந்தனர்.
ரீகா நகரத்திலிருக்கும் பழமையான (16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட) தேவாலயத்தையே அரங்கமாக மாற்றியிருந்தனர். ஒலி அமைப்பு உயர்ந்த தரத்தில் இருந்தது. முழுவதும் ஐரோப்பிய ரசிகர்கள் குழுமியிருந்தனர். நிறையப் பேர் பத்மாசனத்தில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். சங்கராபரணம், கீரவாணி ராகங்களில் அமைந்த சாகித்யங்களை அங்கே பாடினேன். தேவாரம் பாடினேன். நிகழ்ச்சி நடந்த இரண்டு மணி நேரமும் ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருந்த அந்த இடம், நிசப்தத்தின் உறைவிடமாக இருந்தது.
வழக்கமாக உள்நாட்டில் நடத்தும் கச்சேரிகளில் புதிதாக என்ன கொடுக்கப் போகிறோம் என்கிற தவிப்பு இருக்கும். ஆனால், அங்கு நம்முடைய சங்கீதத்தில் இருக்கும் இறை உணர்வையும் அதில் லயிக்கும்போது ஏற்படும் ஏகாந்தமான அனுபவத்தையும் ரசிகர்களுக்கு உணர்த்துவதே முக்கிய நோக்கமாக இருந்தது. இசையே ஒரு தியானமாக மாறும் விழிப்புணர்வுக் கச்சேரியாக அது அமைந்தது” என்கிறார் காயத்ரி.
காயத்ரி வெங்கட்ராகவனுக்கு வயலினில் மைசூர் ஸ்ரீகாந்தும் மிருதங்கத்தில் என்.மனோஜ்சிவாவும் பக்கபலமாக இருந்திருக்கின்றனர். மாஸ்கோவிலிருந்து இணையத்தின் வழியாக காயத்ரியிடம் இசை பயிலும் மாணவி அலிஸா கிருஷ்ணா, தம்புரா வாசித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT