Published : 20 Aug 2017 01:51 PM
Last Updated : 20 Aug 2017 01:51 PM
உ
ள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் வேர்கள் எனப் போற்றப்படுகின்றன. ஆனால், போற்றப்படக்கூடிய அளவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்றால் இல்லை. ஏழை, பணக்காரர், நடுத்தரப் பிரிவினர் எனச் சமுதாயம் எப்படி இருக்கிறதோ அதேபோன்றுதான் ஏழைகளிலும் ஏழைகளாக வருவாயே இல்லாத பஞ்சாயத்துகளும் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இல்லாத உள்ளாட்சிகளில் வரிவருவாயை மட்டுமே நம்பியிருக்கும்படியான சூழ்நிலை நிலவுகிறது.
தெருவிளக்குகளுக்கு மின்பாக்கிகூடச் செலுத்த முடியாத பல ஊராட்சி அமைப்புகளும் உள்ளன. காலியான கஜானாக்களும் உடைந்த நாற்காலிகளும் பாய்விரித்து அமர்ந்து பேசும் பரிதாப நிலைகளுமே உள்ளன. அங்கே உடைந்துகிடக்கும் நாற்காலிகளைப் பழுதுபார்க்கவே நிதி இருக்காது.
வறுமையில் வாடும் உள்ளாட்சிகள்
உள்ளாட்சி அமைப்புகளின் நிதித் தேவையை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதேயில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8 முதல் 10 சதவீதம் வரையிலான நிதி உயர்வைக்கூட மாநில அரசுதான் வழங்கியது. இது யானைப்பசிக்குச் சோளப்பொரி போன்றது.
மத்திய, மாநில அரசுகளின் தனித் தனித் திட்டங்களும் எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் நிதி ஆகியவையும் உள்ளாட்சி சபைகளின் கவனத்தோடும் ஆலோசனையோடும் நடைபெறுவதில்லை. எது ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளே எஜமானர்களாக மாறிவிடுகிறார்கள். அதற்குக் காரணமாக இருப்பது ஒப்பந்த முறைதான்.
ரூ.20 லட்சத்தில் சாலை போட வேண்டும் என்றால் 25 சதவீத கமிஷன் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்படுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் கமிஷன் கொடுப்பதும் வாங்குவதும் ஊரறிந்த ரகசியமாக இருந்துவருகிறது.
ஒப்பந்த முறையில் கட்டிடம் கட்டுபவர் சிவில் இன்ஜினீயரிங் முடித்தவரா என்றால் அதுவும் இல்லை. ஒப்பந்ததாரர், அதிகாரத்திலிருக்கும் ஏதோ ஒரு அரசியல்வாதிக்கோ அவருடைய உறவினருக்கோ நெருக்கமானவராக இருப்பார். அதுவும் அவரது பெயரில் உரிமம் இருக்காது. அவருடைய மனைவி பெயரில்தான் இருக்கும். நான் அறிந்தவரை பல ஒப்பந்ததாரர்கள், அவர்களுடைய மனைவியின் பெயரில்தான் உரிமம் பெற்றுள்ளார்கள்! அந்த அளவுக்கு இத்துறையில் ‘பெண்ணுரிமை’ கொடிகட்டிப் பறக்கிறது!
ஏன் தர வேண்டும் கமிஷன்?
2006 உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சித் தலைவர்களை கவுன்சிலர்கள் வாக்களித்துத் தேர்வுசெய்கிற முறையைத் திமுக அரசு சட்டத் திருத்தம் மூலம் கொண்டுவந்தது. ஆனாலும் பெண்களுக்கான ஒதுக்கீடு அப்படியே தொடர்ந்தது. அத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றிபெற்றவர்தான் ஆர். மல்லிகா. கோவில்பட்டி நகர் மன்றத்தின் பெண் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தார்.
கோவில்பட்டி நகர மன்றத்தில் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய்க்கான நிதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நிறைவேறவில்லை. மாறாகப் பெண் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கொண்டுவந்தார்கள். முதன்முறையாக நகர மன்றத் தலைவராக இருந்த மல்லிகாவுக்கு வருத்தமாக இருந்தது. மக்கள் பணிக்குத்தானே மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தோம். பிறகு ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. பிரச்சினையை மேலோட்டமாகப் பார்த்தால் புரியாதல்லவா?
அங்கே எழுதப்படாத சட்டமாகவே கமிஷன் பரிமாற்றம் இருந்தது. கவரும் கமிஷனும் பிரிக்க முடியாத இரட்டையர்கள். இதற்குப் பெயர் லஞ்சமா, ஊழலா, தட்சணையா? அது இருந்தால் தீர்மானம் நிறைவேறும். இல்லையென்பதால்தான் அது வீழ்த்தப்பட்டது என்பதை மல்லிகா புரிந்துகொண்டார். ஆனால், ஒப்பந்ததாரர்களை அழைத்து அனைவருக்கும் கமிஷனைப் பிரித்துக்கொடு என உத்தரவு போடவில்லை.
ஊழலுக்கு எதிரான போராட்டம்
கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்தால் டெண்டரை ரத்து செய்வேன் என உறுதியாக மறுத்துவிட்டார். ‘காலங்காலமாக இப்படித்தாம்மா நடக்குது’ என்று கூறியவர்களையும் பயந்தவர்களையும் ஓரம் கட்டினார்.
இதெல்லாம் அரசாங்கம் தருகிற சம்பளம் என அப்பாவித்தனமாய் நினைத்திருந்தவர்கள் தங்கள் உரிமை பறிபோவதாக நினைத்து மறியல் செய்ய முன்வந்தார்கள். நகராட்சித் தலைவி தங்களை மதிப்பதில்லை என்று சொல்லி, குய்யோ முறையோ என்று கூச்சலிட்டார்கள். மிக இழிவான வார்த்தைகளால் அர்ச்சித்தார்கள். இங்குள்ள நிலைமையை அப்படியே அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றார் மல்லிகா.
உண்மையை உணர்ந்த அதிகாரிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்துக்கு வரவில்லை. கமிஷனுக்காக ஒன்றுசேர்ந்த சில கவுன்சிலர்கள் ஜனநாயகத்துக்காகப் போராடத் தொடங்கினார்கள். அதிகாரிகள் கூட்டத்துக்கு வராமல் போனதைக் கண்டித்தார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் மிக மோசமாகத் தலைவரை மிரட்டத் தொடங்கவே, அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்காகப் பல பெண் அமைப்புகளும் மல்லிகாவுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட ஆரம்பித்தார்கள்.
இத்தகைய தள்ளுமுள்ளுகள், மிரட்டல்கள், கமிஷனுக்கான போராட்டங்கள் போன்றவை நடந்துகொண்டிருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை மதிப்பதிலும் அவர்கள் வார்டுகளில் நிறைவேற்றவேண்டிய பணிகளைக் கட்சி வேறுபாடில்லாமல் முன்னெடுப்பதிலும் மல்லிகா வித்தியாசமான அணுகுமுறையைக் கடைபிடித்தார்.
கோவில்பட்டி 2-வது பைப்லைன் குடிநீர் திட்டத்தை இவரது போராட்டங்கள் மூலமாகவே கொண்டுவர முடிந்தது. மேலும், நகரக் குப்பைகளை வெளியேற்றுவதற்கு 16 ஏக்கர் நிலத்தைப் பெற்று, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தினார்.
இரண்டாவது முறையாகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள். ஆனால், அந்தத் தீர்மானத்தை முன்மொழிய அவர்களிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையை ஆதரவாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற திமுக அரசின் சட்டத் திருத்தம் பல பெண் தலைவர்களைப் பாதுகாத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆகவே, மல்லிகாவுக்கு எதிராக இரண்டாவது முறையாகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், அறிமுக நிலையிலையே தோல்வியடைந்தது.
கற்றுத் தெளியும் தலைவிகள்
கமிஷன் என்பது தமிழக அரசியலில் புரையோடிப்போயிருக்கும் புற்றுநோய் என்று கடுமையாகச் சாடுகிற மல்லிகா, தனது பதவிக் காலத்தில் அதற்கு எதிரான போராட்டத்தைச் சமரசமில்லாமல் நடத்துகிறார் என்றே சொல்ல வேண்டும்.
அதேபோல் துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவி ரொக்கையா, இஸ்லாமியக் குடும்பத்திலிருந்து பல எதிர்ப்புகளைக் கடந்து வெற்றிபெற்றவர். 10 லட்சம் ரூபாய் கடனிலிருந்த நிதி நிலைமையைச் சரி செய்வதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். பேருந்து நிலையக் கடைகளைப் புதுப்பித்து, அதன் பொது வருவாயை 3 கோடி ரூபாய்வரை உயர்த்தினார். பாழடைந்த குளங்களை மீட்டெடுத்து மீன்வளர்ப்புத் திட்டம் மூலம் நல்ல வருமானத்தைப் பேரூராட்சிக்குச் சேர்த்தார்.
வருமானம் குறைவாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் எத்தகைய பணிகளை மேற்கொண்டால் வருவாயைப் பெருக்க முடியும் என்பதற்கான பயிற்சிக்கூடங்கள் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பழனிதுரையால் பிரத்யேகமாக நடத்தப்பட்டது பல பெண் தலைவிகளுக்குப் பேருதவியாக இருந்தது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
நல்லதை, கெட்டதை, ஆபத்தை, வீரத்தை, தியாகத்தை இப்படித்தான் அவர்கள் கற்றுக்கொண்டார்கள். இன்னும் அவர்கள் கற்க வேண்டும் மக்களை, மக்களுக்கான சேவையை!
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT