Last Updated : 06 Aug, 2017 03:20 PM

 

Published : 06 Aug 2017 03:20 PM
Last Updated : 06 Aug 2017 03:20 PM

பெண் அரசியல் 16: வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி!

துரை வில்லாபுரத்தின் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் லீலாவதி. ஒரு சின்னஞ்சிறிய அறையில் தெற்கு வடக்காக நீளவாக்கில் அமைக்கப்பட்ட தறி. அதன் மூலையில் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இருக்கின்றன. தறிக்கடியில் பாய் விரித்தால் படுக்கை. இந்தச் சித்திரமே அந்த வீட்டின் ஏழ்மையைச் சொல்லிவிடும்.

தேடி வந்த வெற்றி

வறுமையின் காரணமாக மூத்த மகள் கலாவதி பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு நெசவில் ஈடுபட்டிருந்தார். அடுத்த இரண்டு பெண் குழந்தைகளும் சிறுமிகளாக இருந்ததால், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளராகவும் நெசவாளர் சங்கத்தில் துணைப் பொறுப்பிலும் லீலாவதி செயல்பட்டுவந்தார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி 1996-ல் தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மதுரை மாநகராட்சியின் 59-வது வட்டம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லீலாவதி நிறுத்தப்பட்டிருந்தார். பண பலம் மிக்க வேட்பாளர்களும் லீலாவதியை எதிர்த்துப் போட்டியிட்டிருந்தார்கள். பலத்த போட்டி நிலவியது. வீடு வீடாக ஏறி இறங்கி வாக்காளர்களைச் சந்தித்த லீலாவதியின் தன்னம்பிக்கை இறுதியில் வெற்றிபெற்றது!

வெற்றிக்குப் பிறகும்

கவுன்சிலருக்குரிய பந்தா துளியும் இல்லாமல் எளிய பெண்ணாக எல்லோரிடமும் லீலாவதி பழகிவந்தார். மக்களைச் சந்தித்துக் குறைகளை அறிவது, அவற்றைக் கோரிக்கைகளாக எழுதி அதிகாரிகளைச் சந்திப்பது போன்றவற்றுக்கு இடையே நெசவு, சமையல், இயக்க வேலை எனத் தொய்வின்றிச் செயல்பட்டுவந்தார். அவரது எளிமையான அணுகுமுறை மக்களை மிகவும் கவர்ந்தது. பேச்சாற்றலும் வசீகரமும்தான் மக்களைக் கவரும் என்ற எந்த விதியும் அரசியலில் இல்லை. ஆனால், காலங்காலமாக நம்பப்பட்டுவந்த அந்த இலக்கணத்தை மாற்றிக் காட்டிய லீலாவதி, மக்கள் ஊழியராகவே மாறினார்.

ஆக்கப்பூர்வமான களப்பணி

வில்லாபுரம் பகுதியில் தலையாய பிரச்சினைகளாகக் குடிநீர் பிரச்சினையும் கள்ளச்சாராயமும் இருந்தன. இவை தவிர ரேஷன் பொருள்களைக் கடத்திச் செல்வது, மாமூல் வசூலிப்பது போன்றவற்றில் சில சமூக விரோதக் கும்பல்கள் ஈடுபட்டிருந்தன. இவை குறித்து வேட்பாளராக இருந்தபோதே ஒரு செய்தித்தாளின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்ததுடன், அவற்றைக் களைய நடவடிக்கை எடுப்பேன் என லீலாவதி உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

இப்படிச் சொல்லியிருக்கிறோமே என்று, பூ ஒன்று புயலானதைப் போல் அவர் ஆவேசத்தோடு எழுந்துவிடவில்லை. மிக அமைதியாக, இயல்பாக மக்கள் மீதான நம்பிக்கையிலிருந்து தனது பணிகளை ஒவ்வொன்றாகத் தொடங்கினார்.

நீண்ட காலமாக அந்தப் பகுதியில் மாநகராட்சி தண்ணீர் விலைக்கு விற்கப்படுவதை அறிந்திருந்த லீலாவதி, முதலில் அதைத் தடுத்து நிறுத்த உத்தேசித்தார். கோரிக்கை மனு மூலம் அதை மாநகராட்சியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். எத்தனை லாரிகள் வருகின்றன, எத்தனை வீடுகளுக்கு விநியோகம் செய்ய முடிகிறது என்பதைக் களத்தில் இருந்து ஆய்வுசெய்தார். ஆய்வுப் பணிகளோடு நிறுத்திவிடாமல் உடனிருந்து பெண்களை வரிசைப்படுத்தித் தண்ணீர் வழங்குவதில் முனைப்பு காட்டினார். சேதமடைந்த குடிநீர் குழாய்களைச் சீர்படுத்தி, மற்ற வார்டுகளைப் போல் தன் பகுதியில் தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

எதிர்ப்பின் கோர முகம்

இந்த நடவடிக்கைகள் அப்பகுதிப் பெண்களையும் பொதுமக்களையும் பெரிதும் ஈர்த்தன. ஆனால், மறுபக்கத்தில் தண்ணீரை விலைக்கு விற்றுக்கொண்டிருந்த கும்பலின் கோபத்துக்கு ஆளானார். இவர்கள் ஏற்கெனவே தேர்தலில் லீலாவதியோடு போட்டியிட்டுத் தோற்றிருந்தவர்கள் என்பதால் அவர்களது கோபம் இரட்டிப்பானது.

அடுத்த நடவடிக்கையாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்று பொருள்கள் உரிய எடை அளவோடு கிடைக்கின்றனவா என்பதைச் சரிபார்த்து வழங்கினார். வர்த்தகர்களை மிரட்டிப் பணம் வசூலிக்கும் கும்பலை எதிர்த்து நேரடியாகப் போராட்டத்தைத் தொடங்கினார். வர்த்தகர்களை ஒன்றுபடுத்தினார். இந்தச் சம்பவங்களால் தங்கள் வருமானத்தை இழந்தவர்கள் மேலும் கோபமுற்றார்கள்.

இதற்கிடையில் லீலாவதிக்கு நேரடியான கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சூழலில்தான் 1997 ஏப்ரல் 23 அன்று காலை சமையலுக்குப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்ற லீலாவதி, ஏழு பேர் கொண்ட கும்பலால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த அவர் தப்பி ஓட முடியாத அளவுக்குச் சுற்றி வளைக்கப்பட்டார். வீச்சரிவாளைத் தடுத்து நிறுத்தப் போராடிய அவரது கரங்களும் விரல்களும் துண்டிக்கப்பட்டுத் தரையில் வீழ்ந்தன.

லீலாவதியை உயிரோடு விடக் கூடாதென்பதில் அந்தக் கும்பல் உறுதியாக இருந்தது. மொத்தம் 24 இடங்களில் வெட்டப்பட்ட லீலாவதி இனி போராடிப் பலனில்லை என்பதைப் போல் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அலறியடித்து ஓடிவந்த தன் அன்பு மகள்களின் முகத்தைக்கூடப் பார்க்க முடியாமல் லீலாவதியின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது.

இந்தக் கொடூரச் சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. கடைகள் அடைக்கப்பட்டுப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நிகழ்ந்த கல் வீச்சு சம்பவம் தவிர, வேறு அசம்பாவிதங்கள் நிகழவில்லை.

குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும், லீலாவதியைக் கொன்ற சமூகவிரோதிகள் திமுக உறுப்பினர்கள் என்பதால் அவர்களை உடனே கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். பதற்றம் சூழ்ந்த அந்த நேரத்திலும் இரங்கல் ஊர்வலம் அமைதியாக நடந்தது.

அரசியல் அதிசயம்

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே பாதிக்கப்பட்ட லீலாவதியின் புதல்விகளைச் சந்திக்க அன்றைய முதல்வர் கருணாநிதி வில்லாபுரம் வந்தார். அவரைத் தொடர்ந்து கருப்பையா மூப்பனார், வைகோ உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மதுரைக்கு வந்து ஆறுதல் தெரிவித்தார்கள்.

இந்தியா முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுன்சிலர் வீட்டுக்குக் கடையே செல்லும் காலத்தில், கடையைத் தேடி கவுன்சிலர் சென்ற அதிசயம் என ஊடகங்களும் நாளேடுகளும் லீலாவதியின் மரணத்தைக் கண்டித்தும் அவரது சேவையைப் புகழ்ந்தும் எழுதின.

பெண்ணுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வந்தபோது, அதன் முதல் பலியாக லீலாவதி ஆனது மிகுந்த வருத்தத்தையும் துயரத்தையும் என்னைப் போன்றவர்களிடத்தில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஒரு பெண்ணால் அரசியலில் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வியை உடைத்தெறிந்த லீலாவதியின் சாதனைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருந்தன. வறுமையில் வாழ்ந்தாலும் நேர்மையோடு அரசியலை முன்னெடுத்த உறுதிமிக்க ஒரு தலைவர் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் பேச வைத்ததே அவருடைய பெரும் சாதனை!

வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி, அரசியலில் அதிசயம்; வரலாற்றின் அற்புதம்!

(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x