Published : 27 Aug 2017 03:03 PM
Last Updated : 27 Aug 2017 03:03 PM
சன் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிவரும் ‘நட்சத்திரக் கபடி’ நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் ‘கடல் பின்னணியில் கபடி’ என்ற வித்தியாசமான சுற்று ஆரம்பமாக இருக்கிறது. இது குறித்து அதன் தொகுப்பாளர் ஆடெம், “நயன்தாரா சிறப்பு நேர்காணலுக்காகக் கிடைத்துவரும் பாராட்டுகளால் இப்போ வரைக்கும் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தபடி இருக்கு. அடுத்து இப்போ ‘கடல் கபடி’. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சின்னத்திரை சீரியல் நட்சத்திரங்களும் தெலுங்கு சின்னத்திரை சீரியல் நட்சத்திரங்களும் விரட்டிப் பிடித்துக்கொள்ள இருக்கிறார்கள். முதன்முறையாகக் கடல் பின்னணியில் படமாக்குகிறோம். மொத்தம் 6 சுற்றுகள். இந்த வாரம் முதல் தொடங்குகிறது. புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கும்போது எப்போதுமே மகிழ்ச்சிதான். இந்த மகிழ்ச்சியோடு அடுத்து ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதுவும் விரைவில் ரிலீஸ்!’’ என்று மகிழ்கிறார்.
அரசியல் நையாண்டி
சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கியிருக்கிறார் நிவேதா. ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘கிச்சன் கேபினெட்’ நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
“இதுக்கு முன்னாடி நான் தொகுத்து வழங்கிய ‘சினிமா முனிமா’ நிகழ்ச்சியை எப்படி எனக்குப் பிடிக்குமோ, அதே மாதிரி ‘கிச்சன் கேபினெட்’ நிகழ்ச்சியும் எனக்குப் பிடிக்கும். தன்வி பாப்பா பிறந்ததால ஏழு மாதங்கள் சின்னதிரையிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டேன். வீட்டில் தன்வியோடு அதிகம் நேரம் செலவழிப்பதால் இந்த ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும்தான் நேரம் ஒதுக்க முடியுது. மீண்டும் நான் கிச்சன் கேபினெட் நிகழ்ச்சிக்குள்ள வந்த நேரமோ என்னவோ அதிமுக அணிகள் இணைப்பு, எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டில் ஓய்வு என்று தமிழ்நாட்டோட அரசியல் சூழல் சுவாரசியமா இருக்கு. இந்த மாதிரி பரபரப்பான சூழலில் யாரையும் புண்படுத்தாமல் அரசியல் நிகழ்ச்சிகளை நையாண்டியாகத் தொகுத்து வழங்குவது சுவாரசியம்தான்!’’ என்கிறார் நிவேதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT