Published : 06 Aug 2017 03:22 PM
Last Updated : 06 Aug 2017 03:22 PM
உ
லக அரங்கில் விளையாட்டு வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்துவரும் காலம் இது. இப்போது சென்னையைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை ஒருவர் சர்வதேச வெற்றியைப்பெற்றுள்ளார். ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கோலோச்சிவரும் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியா பெறும் முக்கிய சர்வதேச வெற்றி இது. இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி.
வெற்றி மீது வெற்றி
சென்ற வாரம் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் மொத்த தேசத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்தச் சென்னைப் பெண். இந்த வெற்றி மட்டுமல்லாது ஆசிய சாம்பியன் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் ஏற்கெனவே வெள்ளிப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ள பவானி, ஆரம்பத்தில் வகுப்புகளிலிருந்து தப்பிக்க மைதானத்தில் ஒதுங்கியவர். ஏதாவது விளையாட்டு ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றதும், வாள் வீச்சைத் தேர்வுசெய்தவர்.
தண்டையார்பேட்டையிலுள்ள முருக தனுஷ்கோடி பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்தார். அவரது சாதனைக்கான முதல் விதை இங்கேதான் தூவப்பட்டது. பள்ளியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாள் வீச்சை அவர் தேர்வுசெய்தது அவரது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இந்திய வாள் வீச்சு விளையாட்டுக்கும் முக்கியமான தருணம்.
பள்ளி அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் எதிர்பார்க்காத வெற்றிகளைக் குவித்தார். அதுவரை அவருக்கான பயிற்சி செலவுகளை அவரது குடும்பமே கவனித்துவந்தது. இந்தத் தொடர் வெற்றிகளால் கேரள மாநிலம் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற வாள் வீச்சுப் பயிற்சியாளரான சாகர் சுரேஷ் லாகுவிடம் வாள்வீச்சு நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். 2007 துருக்கியில் நடந்த வாள் வீச்சுப் போட்டியின் மூலம் சர்வதேச வாள் வீச்சுப் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், அந்தப் போட்டியில் 3 நிமிடம் தாமதமாக வந்ததற்காக அவருக்கு பிளாக் கார்டு காட்டப்பட்டு விளையாட அனுமதிக்கப்படவில்லை.
முன்னிலை நோக்கி
சாதாரணப் பின்னணியுடன் பல தடைகளுக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிக்கு வந்து விளையாட முடியாமல் போனாலும் மனோதிடம் அவரை வலுப்படுத்தியது. அந்த ஆண்டிலேயே மலேசியாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். சர்வதேச அளவில் பவானிக்குக் கிடைத்த முதல் பதக்கம் அது. அதற்கு அடுத்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்று, தனது முத்திரை வெற்றிகளைத் தொடர்ந்தார்.
இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் 93-வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய வீரர்கள் 100 இடங்களுக்குள் வருவது அபூர்வமானது. மூத்த வாள் வீச்சு வீராங்கனைகளான ரீஷா புத்துசேரி, டயானா தேவி ஆகியோர் முறையே 144, 142 இடங்களுக்குத்தான் முன்னேறியுள்ளனர்.
வெண்கலப் பதக்கங்களாக வாங்கிக் குவித்த பவானி, அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2012-ம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் வெட்டரன் வாள் வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த டஸ்கனி போட்டியில் முதலிடம் பெற்றார். சர்வதேசப் போட்டியில் பவானி வென்ற முதல் தங்கம் இதுதான்.
ஊக்கம் தரும் பெற்றோர்
பெண்களுக்கு என இலக்கணம் வகுக்கப்பட்ட நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பவானியின் இந்தத் தொடர் வெற்றிகளுக்குப் பின்னால் அவருடைய பெற்றோரின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் பிரபலமாகாத விளையாட்டைத் தேர்ந்தெடுத்த மகளைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திவந்துள்ளனர். பவானி ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பதைப் போல இந்தியாவைப் பொறுத்தவரை வாள் வீச்சு செலவு பிடிக்கக்கூடிய விளையாட்டு. விளையாட்டுப் பொருட்களின் செலவே லட்சங்களைத் தாண்டும்.
மேலும், சர்வதேச அளவிலான போட்டிக்குச் செல்ல வெளிநாட்டில் பயிற்சிபெறுவது அவசியம். ஆனால், அதற்காகச் செலவு செய்யும் அளவில் தேசிய வாள் வீச்சு விளையாட்டு அமைப்பு இல்லை. இந்நிலையில் பவானியுடன் இணைந்து அவருடைய பெற்றோரும் உதவிக்காக அலைந்துள்ளனர். அதன் பலனாகத் தமிழக அரசின் உதவி கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கோ ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் உதவியும் கிடைத்துள்ளது.
கைகூடிய கனவு
இந்த உதவியால் உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர்களான அமெரிக்காவின் எட்வார்ட் கோர்ஃபெண்டி, இத்தாலியின் நிக்கோலோ சனோட்டி ஆகியோரிடம் பவானிபயிற்சி எடுத்துள்ளார். இந்தப் பயிற்சி மூலம் சர்வதேசப் போட்டிகளின் சில நுட்பங்களைக் கற்ற பிறகுதான் அவரால் சர்வதேச வெற்றிகளைச் சுவைக்க முடிந்தது.
ஐஸ்லாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் பவானி, சர்வதேச வாள் வீச்சுத் தரவரிசையில் 81-வது இடத்திலிருந்து 36-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் ஐம்பது இடங்களுக்குள் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி வீராங்கனைகளே தொடர்ந்து இருந்துவரும் நிலையில், முதன்முறையாக இந்திய வீராங்கனை பவானி இடம்பிடித்துள்ளார்.
சக இந்திய வீராங்கனைகளான டயானா தேவி, ஜோஸ்னா கிறிஸ்டி, ரீஷா, நிஷா ராம் நிரஞ்சன், சங்கீர்த்தனா, ரவீணா, மனுதீப்தி ஆகியோர் தரவரிசையில் 300-க்கும் கீழே உள்ளனர். ஆனால், இந்த வெற்றிகளுடன் பவானி நின்றுவிடப் போவதில்லை. “டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் எனது கனவு” என்கிறார். பெண்களின் கனவுகள் நனவாகும் காலம் இது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT