Published : 20 Aug 2017 01:48 PM
Last Updated : 20 Aug 2017 01:48 PM
இ
ந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவிலும் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் போராட்டமும் முழுமையடைவதில்லை. வரலாறும் நிதர்சனமும் இப்படியிருக்கும் நிலையில் தமிழக முதல்வர், “போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பது, இப்போது ஃபேஷனாகிவிட்டது” எனக் கூறியுள்ளார். பெண்கள் என்றாலே வீட்டுக்குள் இருக்க வேண்டும், அரசியல் பேசக் கூடாது, போராட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது எனப் பல கட்டுப்பாடுகளைக் கொண்ட நம் சமூகத்தில், பெண்கள் ஏன் போராட்டங்களில் அதிகமாகக் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்?
பெண்களின் உலகம், பாதுகாப்பின் அடிப்படையில் உருவானது. எதற்கான பாதுகாப்பு? நமது கண்ணியம், சுயமரியாதை, நம் குழந்தைகளின் நலம், பசியால் வாடுபவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு. மனித உணர்வின் மிகச் சிறந்த வெளிப்பாடு என்பது பாதுகாப்பு அளிப்பதாகும் என்கிறார் சுற்றுச்சூழல் பெண்ணியவாதி வந்தனா சிவா.
போராட்டத்தில் பெண்கள்
அதன் தொடர்ச்சியாக வீட்டு வேலை, குழந்தைகளையும் முதியவர்களையும் பேணுதல், கால்நடைகளைப் பராமரிப்பது என்ற விடுபட முடியாத சங்கலித் தொடரான பொறுப்புகள் போராட்டங்களில் இருந்து பெண்களைத் தள்ளிவைத்துள்ளன. இருந்தாலும் இவற்றையெல்லாம் கடந்து இந்தியப் பெண்கள் பெருவாரியாகக் களத்தில் இறங்கிப் போராடும் வாய்ப்பை இந்தியச் சுதந்திரப் போராட்டம் அளித்தது. சுதந்திர இந்தியாவில் மதுவுக்கு எதிரான போராட்டம், ரேஷன் முறைகேடுகளை எதிர்த்துப் போராட்டம், நில உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டம், பெரு முதலாளிகளுக்கு எதிரான போராட்டம் என பல்வேறு வாழ்வாதாரப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
சமீபகாலமாகத் தமிழகத்தில் நடைபெற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், பெண்கள் அதிக அளவில் பங்கேற்ற போராட்டமாகக் கருதப்படுகிறது. அதேபோல் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம், நெடுவாசல் போராட்டம், கதிராமங்கலம் மீதேன் திட்டத்துக்கு எதிரான போராட்டம், மணல் கொள்ளையைத் தடுப்பதற்கான போராட்டம் என இன்றைக்குப் பெண்கள் பங்கேற்கும் போராட்டங்கள் அனைத்தும் வர்க்கம், சாதி, மதம் கடந்த போராட்டங்களே.
அரசியல் நோக்கம்
பொதுவாக அரசியல் கட்சிகள் நடத்துகிற போராட்டங்களில் பெண்கள் கலந்துகொள்வது உண்டு. ஆனால், இன்று தெளிவான அரசியல் நோக்கத்தோடு தங்களின் உரிமை குறித்த புரிதலோடும் தொலைநோக்குப் பார்வையோடும் போராட்டங்களில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள். பெண்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர், எதிர்க்கின்றனர். தாங்கள் வாழும் மண் மீதும், நீர் மீதும், பண்பாட்டின் மீதும் தங்களுக்கு உள்ள உரிமையைக் கோருகின்றனர். அரசின் நியாயமற்ற திட்டங்கள் தொடர்பான மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர்.
போராட்ட முறைகள்
இலக்கு எவ்வளவு முக்கியமானதோ, அது போன்று அதை அடையும் வழியும் முக்கியமானது என்பதை உணர்ந்தவர்கள் பெண்கள். ‘பிரச்சினை வந்தால் பெண்கள் கூடுவார்கள், பிள்ளை அழுதால் உடனே வீட்டுக்கு ஓடிவிடுவார்கள்’ என்ற எண்ணத்தை தற்காலப் பெண்கள் பொய்யாக்கிவிட்டனர். அதற்கு உதாரணம்தான் கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம். அந்தப் போராட்டப் பந்தலில் குழந்தைகளுக்குத் தொட்டில்கள் கட்டி, அங்கேயே பாலூட்டி போராட்டத்தையும் தொடர்ந்தார்கள் பெண்கள். இடைவெளி இன்றி பல மாதங்களுக்கு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெண்கள் எந்த நிலையிலும் பின்வாங்கவேயில்லை. இதே நிலைமைதான் தற்போது கதிராமங்கலத்திலும் நெடுவாசலிலும் நடந்துகொண்டிருக்கிறது.
கைதாகிச் சிறை செல்லவும் பெண்கள் அஞ்சுவதில்லை. வளைகரங்கள் ஒன்றிணைந்து வலிமையடைந்து வருகின்றன. இன்றைக்குப் போராடும் பெண்கள் உண்ணாவிரதம் இருப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது, சாலை மறியலில் ஈடுபடுவது, மணல் லாரிகளைச் சிறைபிடிப்பது, மதுக்கடைகளை முற்றுகையிடுவது எனச் சூழ்நிலைக்கு ஏற்ப வியூகத்தை மாற்றிப் போராடிவருவதே இதற்கு எடுத்துக்காட்டு.
கற்றதும் பெற்றதும்
போராட்டங்களின் வாயிலாகப் பெண்கள் கற்றதும் பெற்றதும் ஏராளம். பெண்கள் என்றால் அரசியல் அறிவற்றவர்கள் என்ற மாயத் தோற்றத்தைப் போராட்டங்களால் இவர்கள் தகர்த்து எறிந்துள்ளனர். பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட மாட்டார்கள் என்ற பார்வையும் போராட்டங்களால் பொய்யாகியுள்ளது. போராட்டங்களில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க ஆரம்பித்திருப்பதால் குடும்ப அமைப்பில் மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. வீட்டு வேலைகள் இருவருக்கும் பொது என்ற சிந்தனை பரவலாக ஆரம்பித்துள்ளது. பெண்கள் போராட்டங்களில் பங்கேற்பதால், ஒட்டுமொத்தக் குடும்பமும் போராட்டக் களத்துக்கு வருகிறது. எனவே, இன்றைய பெண்கள் தெளிவான புரிதலோடுதான் போராட்டக் களத்துக்கு வருகிறார்களே தவிர, அதை ஃபேஷனாக நினைத்துச் செயல்படுகிறார்கள் என்கிற வாதம் இதனால் அடிபட்டுப் போகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT