Published : 20 Aug 2017 01:47 PM
Last Updated : 20 Aug 2017 01:47 PM
பெ
ரும்பாலோர் தொழுநோயாளிகளைக் கண்டாலே விலகிச் செல்வார்கள். சிலரோ அவர்களை அருவருப்பாகப் பார்ப்பார்கள். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக எவ்வித முகச் சுளிப்பும் இல்லாமல் தொழுநோயாளிகளுக்குப் பணிவிடை செய்துவருகிறார் ஜெயின்மேரி.
77 வயதான இவர், கடந்த 25 ஆண்டுகளாகக் கும்பகோணம் தூய இருதய ஆண்டவர் தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் பணிவிடை செய்துவருகிறார். தொழுநோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதையே தன் வாழ்நாள் லட்சியமாகக்கொண்டிருக்கிறார்.
தொண்டுசெய்ய விருப்பம்
கேரள மாநிலம் புனலூர் அருகே முக்கூடு என்ற சிறிய மலைக்கிராமத்தில் பிறந்தவர் ஜெயின்மேரி. அவருடைய தந்தை தாமஸ், தாய் சாரா. அவருடன் பிறந்தவர்கள் 7 சகோதரர்கள், 6 சகோதரிகள். 14 பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பம் என்றாலும், எல்லோரையும் அவருடைய பெற்றோர் நன்றாகப் படிக்க வைத்திருக்கின்றனர். இதில் ஜெயின்மேரி மட்டும்தான் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என விரும்பி தொண்டுசெய்ய வந்திருக்கிறார்.
கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்பதற்காக 1960-ம் ஆண்டு 19 வயதில் கேரளாவிலிருந்து கும்பகோணத்துக்கு வந்திருக்கிறார். கன்னியாஸ்திரி பயிற்சி முடிந்த பின் செவிலியருக்கான படிப்பைப் படிக்க விரும்பியுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள காட்டாஸ்பத்திரியில் செவிலியர் படிப்பைப் படித்தார். தொடர்ந்து கும்பகோணத்தில் ஒரு இல்லத்திலும், சில மருத்துவமனைகளிலும் சேவை புரிந்துவந்தார்.
எப்போதும் தயார்
அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்திலுள்ள தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையத்துக்கு வந்திருக்கிறார். அங்கே அவர் வந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்துள்ளனர். அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் சிகிச்சை அளிப்பதுமாக அவரது பணி தொடங்கியது.
“தொழுநோயாளிகளுக்கு காலை முதல் இரவுவரை பணிவிடை செய்து, அவர்களுடேனே அமர்ந்து அவர்களது குடும்பத்தின் விவரங்களைக் கேட்டு, அப்படியே அவர்களுக்கு ஆறுதலும் சொல்வதுதான் என் மனதுக்குப் பிடித்துள்ளது” என்று சொல்கிறார் ஜெயின்மேரி. சிகிச்சை பெற்றுவந்த தொழுநோயாளிகள் மரணமடைந்தால் தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் என்று சொல்லும் ஜெயின்மேரி, எல்லோரும் வயது முதிர்வு ஏற்பட்டு இறக்கும்போது, கடவுள் அழைத்துச் சென்றுவிட்டார் எனத் தனக்குள்ளேயே ஆறுதல்பட்டுக்கொள்வதாகவும் சொல்கிறார்.
சில வேளைகளில் இரவு நேரத்தில் தொழுநோயாளிகளுக்கு உடம்பு முடியாமல்போன தகவல் வரும்போது, கன்னியாஸ்திரி விடுதியிலிருந்து உடனடியாக வந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் அவர் தயங்கியதேயில்லை.
சேவையே வாழ்க்கை
தொழுநோயாளிகளின் உடலில் உள்ள புண்களைச் சுத்தப்படுத்தும்போது புழுக்கள் வரும். அதையெல்லாம் சகித்துக்கொண்டு அவர்களைச் சுத்தப்படுத்துகிறார். தனக்குக் கடவுள் இந்த அற்புதமான பணியை அருளியிருப்பதாக அடக்கமான குரலில் சொல்கிறார். அவரைப் போன்றவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இடம்மாறுதலைக்கூடத் தவிர்த்துவிட்டார். உறவுகளால் கைவிடப்பட்டவர்களுக்கு உறவாக இருந்து பணிவிடை செய்வதே போதும் எனவும், இதில்தான் தனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுவதாகவும் ஜெயின்மேரி சொல்கிறார்.
முன்பு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு வரும் வழக்கத்தை வைத்திருந்த அவர், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்றுவருகிறார். அதுவும் 15 நாட்கள் மட்டும்தான். மற்ற நாட்கள் எல்லாம் தொழுநோயாளிகள்தான் அவரது உலகம் என்றே ஆகிவிட்டது.
14 வயதிலேயே வந்தவர்கள், திருமணமாகி வந்தவர்கள் என ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தற்போது இங்கேயே 60 தொழுநோயாளிகள் தங்கியுள்ளனர். அவர்களுடன் ஒருவராகி, அவர்களுக்குத் தினமும் என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும், அவர்கள் உடலை எப்படிப் பராமரிக்க வேண்டும் எனப் பார்த்து பார்த்துச் செய்துவருகிறார் ஜெயின்மேரி.
“ஜெர்மனியில் பிறந்து கும்பகோணத்தில் தொழுநோய் இல்லத்தை நடத்திய அருட்சகோதரிகள் கரோலின், மரியபிரிட்டோவைப் போல் நானும் எனது கடைசிக் காலம்வரை இங்கேயே பணிவிடை செய்வேன்” என்கிறார் ஜெயின்மேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT